செய்திகள்

கொரோனா: அடுத்தாண்டு இறுதிக்குள் நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பலாம்

உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி தகவல்

சென்னை, ஆக. 25–

கொரோனாவில் இருந்து அடுத்த ஆண்டு இறுதிக்குள் நாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்ப வாய்ப்பிருக்கிறது என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா 2-வது அலை படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில், விரை வில் 3-வது அலை பரவ இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:–

இந்தியாவில், கடந்த சில மாதங்களில் தொற்று பரவியது போன்ற நிலை இப்போது இல்லை. மெதுவாகவே பரவி வருகிறது. அது குறித்த விழிப்புணர்வுடன் மக்கள் வாழத் தொடங்கிவிட்டனர். இருந்தாலும் தொற்றின் முதல் மற்றும் 2-வது அலையில் பாதிக்கப்படாதவர்கள், குறைந்த எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தியவர்கள் உள்ள பகுதிகளில் அடுத்த சில மாதங்களில், தொற்று அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

இயல்புக்கு திரும்பும்

அடுத்த ஆண்டு இறுதிக்குள் உலகில் சுமார் 70 விழுக்காடு பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கும். அதன் பிறகு நாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்ப வாய்ப்பிருக்கிறது. 3-ஆம் அலை பரவும் போது, சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுவது குறித்து, கவலைப்படத் தேவையில்லை. கொரோனாவால் உயிரிழக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. அதே நேரம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கேரளாவில் தொற்று அதிகரித்து வருவதற்கு ஓணம் பண்டிகையும் ஒரு காரணமாக இருக்கலாம். அடுத்தடுத்த வாரங்களில் என்ன நடக்கிறது என்று காத்திருந்து பார்க்கலாம். இவ்வாறு சௌம்யா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *