செய்திகள்

கொரோனா அச்சத்தால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை

சென்னை, ஜூன் 3–

சென்னையை அடுத்த ஆவடி அருகே கொரோனா பயம் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்த டில்லி (வயது 74), அவரது மனைவி மல்லிகேஸ்வரி (வயது 64), மகள் நாகேஸ்வரி (வயது 34) ஆகியோருடன் வசித்து வந்தார். அவர் விவசாயம் பார்த்து வந்த நிலையில் தற்போது வருமானமின்றி இருந்துள்ளார்.

மகள் நாகேஸ்வரிக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக ஒரு மாதத்தில் கணவனை பிரிந்து வீட்டுக்கு வந்துவிட்டார். இதனால் குடும்பத்தினர் மனவேதனையில் இருந்து வந்துள்ளனர். இதற்கிடையில் கடந்த ஒருவாரமாக மூவருக்கும் காய்ச்சல் இருந்துள்ளது. அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்று மருந்து வாங்கி சாப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் , காய்ச்சல் அதிகமானதால் கொரோனா வந்து விடுமோ என்ற அச்சத்தில் நேற்று இரவு மூவரும் தனித்தனியாக புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இதுகுறித்து மல்லிகேஸ்வரியின் அண்ணன் வெங்கட்ராமன் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த திருமுல்லைவாயல் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கே.எம்.சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *