செய்திகள்

கொரோனாவை விரட்ட இயற்கை மருத்துவ வழிமுறை: பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு துண்டுபிரசுரம்

சென்னை, ஜூலை.10-

இயற்கை மருத்துவ வழிமுறையில் கொரோனாவை விரட்டலாம் என்று பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் வழங்கப்படுகின்றன.

கொரோனாவுக்கு சித்த மற்றும் இயற்கை மருத்துவ முறைப்படி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு நல்ல பலனும் கிடைத்து வருகிறது. எனவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையிலான சித்தா, யோகா மற்றும் இயற்கை மருத்துவ வழிமுறைகள் குறித்து துண்டு பிரசுரங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு மாநகராட்சி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

இந்த வழிமுறைகள் குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் கூறியதாவது:-

* கபசுர குடிநீர் பொடி, ஒரு ஸ்பூன் அளவு எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து, 15 முதல் 20 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் கால் டம்ளராக வற்றியப்பின் அதனை, வடிகட்டி குழந்தைகள் 30 மி.லி., பெரியவர்கள், 60 மி.லி., அளவு காலை ஒரு வேளையில் அருந்த வேண்டும்.

* சூடான தண்ணீரை அவ்வப்போது குடிக்க வேண்டும்.

* சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் கலந்த மிதமான வெந்நீரில் காலை-மாலை இருமுறை வாய் கொப்பளிக்க வேண்டும்.

ஆவி பிடியுங்கள்

* துளசி, நொச்சி, வேப்பிலை இவற்றில் ஏதாவது ஒன்றுடன், மஞ்சள் பொடி மற்றும் உப்பு கலந்து தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் ஆவி பிடிக்க வேண்டும்.

* சூடான ஒரு டம்ளர் பாலில், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், 3 சிட்டிகை மிளகு தூள், தேவையான அளவு நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் கலந்து, காலை மற்றும் மாலையில் பருக வேண்டும்.

* இஞ்சி 5 கிராம், துளசி 10 இலை, மிளகு கால் ஸ்பூன், அதிமதுரம் அரை ஸ்பூன், தண்ணீர் 250 மி.லி., மஞ்சள் தூள் கால் ஸ்பூன் ஆகியவற்றை நன்கு கொதிக்க வைத்து, வடிகட்ட வேண்டும். இந்த இயற்கை மூலிகை டீயை, பெரியவர்கள் 50 மி.லி., சிறியவர்கள், 20 மி.லி., என தினமும் 2 வேளை குடிக்க வேண்டும்.

* வேப்பம் பூ ரசம், தூதுவளை ரசம், மிளகு ரசம் இதில் ஏதேனும் ஒன்றை தினமும் குடிக்கலாம்.

* நாட்டு நெல்லிக்காய் 50 மி.லி., துளசி 50 மி.லி. எலுமிச்சை 5 மி.லி., இஞ்சி 10 மி.லி., மஞ்சள் கால் ஸ்பூன், தண்ணீர் 150 மி.லி., ஆகிய அளவில் எடுத்து, இயற்கை பானம் தயாரித்து, பெரியவர்கள், 250 மி.லி., சிறிய வர்கள் 100 மி.லி., என்ற அளவில் தினமும் 2 முறை குடிக்கலாம்.

* அன்னாச்சி, ஆரஞ்சு, சாத்துக்குடி ஆகியவற்றின் பழச்சாறு அருந்தலாம்.

* தினமும், 15 முதல் 20 நிமிடம் வரை காலை 7.30 மணிக்குள் அல்லது மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் சூரியஒளி குளியல் எடுக்கவும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *