செய்திகள்

கொரோனாவுக்கு பலியான ‘ஜன்னல் கடை’ உரிமையாளர்

* ஊரையேத் தூக்கும் பஜ்ஜி வாசனை

* இரவு 8 மணி உருளைக்கிழங்கு பஜ்ஜிக்கு தனிக்கூட்டம்

உட்கார்ந்து சாப்பிட பெஞ்சு, மேஜை, பரிமாற ஆள் இல்லாத அதிசயம்

மைலாப்பூரில் பிரபலமான

கொரோனாவுக்கு பலியான ‘ஜன்னல் கடை’ உரிமையாளர்

வாடிக்கையாளர்கள் வேதனை

சென்னை, ஜூலை 7–

மைலாப்பூர் கபாலீசுவரர் கோவிலையொட்டியிருக்கும் பொன்னம்பல வாத்தியார் தெருவில் மிகவும் பிரபலமானது

‘ஜன்னல் பஜ்ஜிக் கடை’ . இதன் உரிமையாளர் ரமேஷ் என்று அழைக்கப்படும் சிவராமகிருஷ்ணனன், கொரோனா வைரசால் நேற்று முன் தினம் அதிகாலை 5 மணிக்கு பரிதாபமாக உயிரிழந்தார்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், அங்கே சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவருக்கு வயது 58. அவர் உயிரிழந்த பிறகு தான் அவருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவு வந்தது. மைலாப்பூரில் உள்ள சுடுகாட்டில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், மைலாப்பூர் சுற்று வட்டார மக்கள் மத்தியில் இந்த ஜன்னல் பஜ்ஜிக் கடைக்கு தனி மவுசு. ஒரு முறை ருசித்து சாப்பிட்டவர்கள், மீண்டும் வந்து சாப்பிட வேண்டும் என்ற தாக்கத்தை ஏற்படுத்திவிடும், இந்த ஜன்னல் பஜ்ஜிக் கடையின் பஜ்ஜி, டிபன் வகைகள். இதற்கு உரிமையாளர் சிவராமகிருஷ்ணனின் கை மணமும் ஒரு காரணம் என்றால் அது மிகையல்ல.

சிவராமகிருஷ்ணன் மறைவு செய்தி கேள்விப்பட்டு நேரிலும், தொலைபேசியிலும் வாடிக்கையாளர்கள் பலரும் துக்கம் விசாரித்தார்கள். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஒரு மாதம் கழித்து மீண்டும் நாங்கள் கடையை திறப்போம். சிவராமகிருஷ்ணன் எப்படி சுவையோடும், புன்னகையோடும் வாடிக்கையாளர்களுக்கு சிற்றுண்டி, பஜ்ஜி –போண்டாவைக் கொடுத்தாரோ… அதே மாதிரி நாங்கள் கொடுப்போம்… என்று குடும்பத்தார் சொன்னார்கள்.

ஒரு ஜன்னல்: ஊரையே இழுக்கும் பஜ்ஜி

இந்த ஜன்னல் கடையில் ஒரு ஜன்னல் மட்டும் தான் . வாடிக்கையாளர்கள் உட்காருவதற்கு பெஞ்சோ, நின்று கொண்டு சாப்பிட மேஜையோ, பரிமாறுவதற்கு ஆட்களோ கிடையாது. ஆனால் பரபரப்பான வியாபாரம் காலையும் மாலையும் நடைபெறும். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலை ஒட்டிய சின்னத் தெரு– பொன்னம்பல வாத்தியார் தெரு. இங்குதான் இந்த ஜன்னல் கடை உள்ளது. ஊரைத் தூக்கும் பஜ்ஜி வாசனையுடன் இயங்கிக் கொண்டு இருக்கிறது.

பழமையான வீடு, தெருவைப் பார்த்து ஜன்னல், அது திறந்து இருக்கும். அந்த ஜன்னலுக்கு வெளியே ஆசை ஆசையாக காத்திருக்கும் வாடிக்கையாளர்கள். உள்ளே இந்த கடையை நடத்தும் சிவராமகிருஷ்ணன். இரட்டைக் கதவுகள் கொண்ட சிறிய ஜன்னல் அது. இடது புறம் மூன்று கம்பிகளை எடுத்துவிட்டு வியாபாரம் நடத்துகிறார்கள்.

தினசரி காலை ஏழு முப்பது மணிக்கு ஜன்னல் கடை திறக்கப்படும். இட்லி, தோசை, பொங்கல், வடை – காலையில் விற்பனை. தொட்டுக் கொள்வதற்கு வெங்காய சட்னி தேங்காய் சட்னி, அதோடு சாம்பார் தரப்படும். ஒரு பிளேட் 30 ரூபாய். மூன்று இட்லி அல்லது இரண்டு தோசை இல்லாவிட்டால் பொங்கல். எதுவாக இருந்தாலும் 30 ரூபாய் தான். இதுதவிர ஸ்பெஷல் வாழைக்காய் பஜ்ஜி உளுந்து வடை.

காலையில் 2½ மணி நேரம் சூடு பிடிக்கும் வியாபாரம்

பத்து முப்பது மணிக்குள் வியாபாரம் முடிந்ததும், பிறகு கடையை மூடி விடுவார்கள். பின்னர் மாலை நான்கு முப்பது மணிக்குத் தான் கடை மறுபடியும் திறக்கப்படும். மாலையில் பொங்கல் தவிர எல்லா அயிட்டங்களும். உண்டு இரவு 8 மணிக்கு சுடச்சுட போடும் உருளைக்கிழங்கு பஜ்ஜி. அதை வாங்கி சுவைப்பதற்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

வாடிக்கையாளர்கள் காசை நீட்டினால்… ஜன்னலுக்குள்ளிருந்து

பாரம்பரியமிக்க மிளகு போண்டா இரண்டை ஆவி பறக்க பறக்க தட்டில் வைத்து தருவார் சிவராமகிருஷ்ணன். தட்டில் விழும் போண்டாவை 2, 3, 4 என்று உள்ளுக்குள் தள்ளும் இளைஞர்களும் உண்டு. பின்னர் கை கழுவிக்கொண்டு அவரவர்கள் வீட்டுக்கு நடையை கட்டுவார்கள்.

25 ஆண்டுகளாக…

25 ஆண்டுகளாக மேலாக இந்த ஜன்னல் கடை வெற்றிகரமாக நடந்து வருகிறது. இத்தனைக்கும் மயிலாப்பூரில் பல புகழ்பெற்ற மெஸ்களும், சைவ உணவகங்களும் இருக்கின்றன. இந்தக் கடைக்குப் பக்கத்திலேயே மாமி மெஸ், அதற்கு ஒரு தனி மவுசு. பக்கத்தில் பாரதி ஹோட்டல், நேராகப் போனால் தெற்கு மாட வீதியில் கீதா பவன், ரத்னா கேஃப், சங்கீதா ஹோட்டல், வடக்கு மாடவீதியில் கிராண்ட் ஸ்னாக்ஸ் ஹோட்டல், சரவணா பவன், நெய்வேத்தியம் கற்பகாம்பாள் மெஸ், காளத்தி கடை, அடையார் ஆனந்த பவன்… நான்கு மாட வீதிகளை சுற்றி இப்படி கடைகள் பல இருந்தாலும் தேடி வரும் கூட்டம் ஜன்னல் கடைக்கு தனியாக இருக்கும்.

‘‘மயிலை கற்பகாம்பாளையும் கபாலீஸ்வரரையும் தரிசிக்க வரும் கூட்டம், இந்த கடைக்கும் வந்து போகும்…’’ என்று நான்கு மாடவீதிகளில் 40 ஆண்டுகளாக குடியிருக்கும் பலரும் சொல்கிறார்கள்.

சகோதரர்– பலம்

சிவராமகிருஷ்ணனுக்கு அவரது சகோதரர் சந்திரசேகரன் பெரிய பலம். இருவரும் வெற்றிகரமாக நடத்தி வந்த கடை இது. ஜன்னலுக்கு வெளியே நின்றபடி உள்ளே பார்வையை ஓடவிட்டால்… உள்ளே எரிந்து கொண்டிருக்கும் அடுப்புக்கு எதிரில் உட்கார்ந்து வாடிக்கையாளர்களோடு மலர்ந்த முகத்தோடு பேசிக் கொண்டே, கரைத்து வைத்திருக்கும் மாவில் நறுக்கி வைத்திருக்கும் வாழைக்காய், உருளைக்கிழங்கை ஒரு கையில் எடுத்து, தோய்த்து, எண்ணை தொதித்துக் கொண்டிருக்கும் கடாயில் போட்டு ஆவி பறக்க எடுத்து தட்டில் வைத்து கொடுக்கும் அழகே அலாதி தான்… என்று ஒரு பெரியவர் அனுபவம் பேசினார்.

கடுகு சிரித்தாலும் காரம் போகாது என்பார்கள், – இல்லையா, அதைப் போல ஜன்னல் (பஜ்ஜி) கடை சிறிய தென்றாலும், அதற்கு வாடிக்கையாளர்களிடம் கிடைத்திருக்கும் தனி மவுசு– பெரிசு!

* * *

பெயர்ப் பலகை இல்லை

கடைக்கு பெயர்ப் பலகை எதுவும் கிடையாது. ஜன்னல் வழியாக வியாபாரம் நடந்து வருவதால்… ஜன்னல் பஜ்ஜி கடை என்ற பெயரே நிலைத்து விட்டது. கடை வாசலில் வாடிக்கையாளர்கள் நின்றிருந்தாலும்… தெருவில் நடந்து போகிறவர்களுக்கு இந்தக் கடையால் எந்த ஒரு இடைஞ்சலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *