செய்திகள்

கொப்பரை தேங்காய் விலையை உயர்த்த சென்னையில் பிரதமரிடம் நேரில் வலியுறுத்துவேன்

வாழை விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க திட்டம்

கொப்பரை தேங்காய் விலையை உயர்த்த சென்னையில் பிரதமரிடம் நேரில் வலியுறுத்துவேன்

எடப்பாடி பழனிசாமி உறுதி ஸ்டாலின் புகார் பெட்டி நாடகம்

திருப்பூர், பிப்.12

கொப்பரை தேங்காய் விலையை உயர்த்த வேண்டும் என்று சென்னை வரும் பிரதமரிடம் நேரில் வலியுறுத்துவேன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திருப்பூர் மாவட்டம், காங்கேயம் மற்றும் தாராபுரம் ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கூறியதாவது:

இது உங்களுடைய ஆட்சி, மக்களுடைய ஆட்சி, மக்களுக்கான ஆட்சி. இரட்டை இலை சின்னத்திலே வாக்களித்து, மீண்டும் அம்மாவின் ஆட்சி தொடர கழக வேடபாளர்களை வெற்றி பெறச் செய்வீர்.

தென்னை விவசாயிகள் நிறைந்த பகுதியாக இருப்பதால் அம்மாவின் அரசு, தென்னை விவசாயிகளுக்கு நீராபானம் எடுக்க அனுமதி வழங்கி யுள்ளோம். அதேபோல, தென்னை விவசாயிகளின் கோரிக்கையான கொப்பரைத் தேங்காய் விலையை உயர்த்தி வழங்க பிரதமரை சமீபத்தில் புதுடெல்லியில் சந்தித்தபோது கோரிக்கை வைத்தேன். தற்போழுது சிறிதளவு உயர்த்தியிருக்கிறார்கள். சென்னைக்கு வரவுள்ள பிரதமரிடம் மீண்டும் கொப்பரைத் தேங்காய் விலையை உயர்த்த வலியுறுத்துவேன் என்பதைக் கூறிகொள்கிறேன்.

காங்கேயத்தில் அரசு கலைக்கல்லூரி கொண்டு வந்தது அம்மாவின் அரசு. எந்த மாநிலத்தில் கல்வி சிறந்து விளங்குகிறதோ, அந்த மாநிலம் உயரும். இதனால் தான் அம்மா கல்விக்கு முக்கியத்துவம் அளித்தார். கல்வித்துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்தார். இன்றைக்கு இந்தியாவிலேயே உயர்கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் தான் உயர்ந்திருக்கிறது.

அம்மா 2011ம் ஆண்டு பதவியேற்கும் போது 100-க்கு 32 சதவிகிதம் பேர் தான் உயர்கல்வி பயின்று வந்தார்கள். அம்மா எடுத்த நடவடிக்கைகள் மற்றும் அம்மாவின் அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாகவும் தற்போது 100-க்கு 49 சதவிகிதம் பேர் உயர்கல்வி பயின்று வருகிறார்கள். இன்றைக்கு இந்தியாவிலேயே உயர்கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் தான் உயர்ந்திருக்கிறது.

அரசு பள்ளிகளில் 41 சதவிகித ஏழை, எளிய மாணவர்கள் படித்து வருகிறார்கள். ஏழை எளிய மாணவர்களும் மருத்துவ படிப்பை பயில வேண்டும் என்பதற்காக அம்மாவுடைய அரசு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியுள்ளது. இதனால் இந்த ஆண்டு 435 பேர் மருத்துவம் பயில வழிவகை செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப்பகுதியில் உள்ள கால்வாய்கள் எல்லாம் தூர்வாரப்பட்டு, பாசனத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. கான்கிரீட் கால்வாய்கள் அமைக்கப்பட்டு, திறக்கப்படும் தண்ணீர் முழுமையாக கடைசி பகுதி வரை சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப்பகுதியில் தடுப்பணைகள் கட்டியதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது.

தைப் பொங்கலை ஏழை எளிய மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 2500 ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு தைப் பொங்கலுக்கு ரூ.1000 வழங்கினோம். இந்தாண்டு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பொதுமக்க ளின் இன்னல்களை குறைக்க ரூ.2500 வழங்கினோம், கொரோனா காலத்தில் ஒரு வருடத்தில் ஒரு குடும்ப அட்டைதாரருக்கு ரூ.4500 வழங்கியுள்ளோம்.

நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள் கட்டித் தருகிறோம், மீண்டும் 10,000 பசுமை வீடுகள் கட்டித் தரப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இரட்டிப்பு வருமானம்

வாழை விவசாயிகள் இரட்டிப்பு வருமானத்தை ஈட்டும் வகையில், வெட்டப்படும் வாழை மரங்களில் இருந்து நவீன முறையில் ஆடை தயாரித்தல், வாழையில் இருந்து நீர் எடுத்தல், தண்டில் இருந்து பிஸ்கட் தயாரித்தல் ஆகியவற்றை மயில்சாமி அண்ணாதுரை என்னை சந்தித்து இந்த திட்டத்தை நிறைவேற்றலாம் எனச் சொன்னார்.

காங்கேயம் இன காளைக்கு பெருமை சேர்க்கும் வகையில் காங்கேயத்தில் வெண்கல சிலை அமைக்கப்படும். காங்கேயம் காளை பாதுகாப்பிற்காக ரூ.2.5 கோடியில் ஈரோடு மாவட்டத்தில் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

உடுமலைப்பேட்டையில் கால்நடை மருத்துவக் கல்லூரியுடன் ஆராய்ச்சி நிலையம் தொடங்கியிருக்கின்றோம். விவசாயிகளின் உபதொழிலான கால்நடை வளர்ப்பினையும் ஊக்குவிக்க எங்களுடைய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விவசாயிகள் தங்களுக்கு என்ன கன்று வேண்டுமோ, கிடாரி கன்று வேண்டும் என்றால் கிடாரி கன்று, காளை கன்று வேண்டும் என்றால் காளை கன்று வழங்குவதற்காக ஊட்டியில் 48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விந்தணு ஆராய்ச்சி நிலையம் துவங்கப்பட உள்ளது. இதன்மூலம் விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானம் கிடைக்கின்ற வாய்ப்பை பெறுகின்றார்கள். கால்நடைகளுக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக அதிக அளவில் கால்நடை மருத்துவமனைகளை திறந்த அரசும் எங்களுடைய அரசுதான்.

அதிக பால் தரும் பசுக்கள்

நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த, அதிக அளவில் பால் தருகின்ற கலப்பின பசுக்களை உருவாக்கி விவசாயிகளுக்கு வழங்க இருக்கின்றோம். இதற்காக சேலம் மாவட்டம், தலைவாசல் கூட்ரோட்டில் 1600 ஏக்கர் பரப்பளவில் ஆசியாவிலேயே மிகப் பிரம்மாண்டமான கால்நடை பூங்காவிற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. 50 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. அதில் கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம், இரண்டும் அங்கே இணைந்து செயல்படும். அந்த ஆராய்ச்சி நிலையம் மூலமாக கலப்பின பசுக்கள் உருவாக்கப்பட்டு, நம்முடைய சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு கலப்பின பசுக்கள் உருவாக்கி விவசாயிகளுக்கு வழங்கப்படும். அதிகமான பால் கிடைக்க கூடிய சூழ்நிலை உருவாக்கப்படும். விவசாயிகளுக்கு, 30 கிலோ எடை கொண்ட ஆடுகளை அங்கே உருவாக்கித் தருவிருக்கிறோம்.

தமிழகத்தில் அதிக அளவில் காய்கறிகள், பழங்கள் உற்பத்தியாகும் இடங்களில், குளிர்பதனக் கிடங்குகள் விரைவில் அமைக்கப்படும். விவசாயிகள் அதிக அளவில் காய்கறி, பழங்களை உற்பத்தி செய்கின்ற போது, விவசாயிகளுக்கு உரிய லாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தமிழகத்தில் முதற்கட்டமாக 10 மாவட்டங்களில் தலா 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குளிர்பதனக் கிடங்குகள் உருவாக்கப்பட உள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறி, பழங்கள் விற்பனையாகவில்லை என்றால், இந்த குளிர்பதனக் கிடங்கில் வைத்துக் கொள்ளலாம்.

தாராபுரம் நகராட்சியில் ரூ.14.74 கோடி மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. தாராபுரம் மையப்பகுதியில் பிரம்மாண்டமான பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.715 கோடியில் 70 கி.மீ. சாலை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. ஒட்டன்சத்திரம் முதல் தாராபுரம் – அவிநாசி வரை சாலைப்பணிகள் முடியும் நிலையில் உள்ளது. இன்னும் 10 நாட்களில் மக்கள் பயன்பட்டிற்கு திறந்து வைக்கப்பட உள்ளது. 2011க்கு முன்னால் சாலைகள் எப்படி இருந்தது, 2011க்கு பிறகு சாலைகள் எப்படி உள்ளது என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். அற்புதமான சாலை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தது அம்மாவின் அரசு.

கோரபசியில் தி.மு.க.

அம்மாவின் அரசுதான் மக்களுக்காக சேவை செய்கின்ற அரசு. குழந்தை செல்வங்கள் நல்ல முறையில் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு விலையில்லா சீருடைகள், காலணிகள், புத்தகப் பைகள், புத்தகங்கள், மிதிவண்டிகள் போன்றவற்றை அம்மா வழங்கினார். விஞ்ஞான கல்வி பெறுவதற்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். கல்வியில் ஒரு புரட்சி மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் அம்மா .

2011ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அம்மா, நான் ஆட்சிக்கு வந்ததும் இல்லத்தரசிகளின் இன்னல்களை குறைக்க மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்குவேன் என்று அறிவித்தார். அதன்படி அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கினார்.

2006 தேர்தல் அறிக்கையிலே தி.மு.க.வினரும் வாக்குறுதி அளித்தார்கள். நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுக்கப்படும் என்று, இந்தப் பகுதியில் எந்த விவசாயிக்காவது 2 ஏக்கர் நிலம் கிடைத்ததா? நிலத்தை கொடுக்காமல் போனாலும் பரவாயில்லை, அப்பாவி மக்களிடத்திலிருந்து நிலத்தை பிடுங்காமல் இருந்தாலே, அதை அவர்களது சாதனையாக நினைத்துக் கொள்ளலாம். தி.மு.க.வினர் எதையாவது சொல்லி ஆட்சியைப் பிடித்துவிட எண்ணுகிறார்கள்.10 ஆண்டுகாலம் ஆட்சி அதிகாரத்தில் இல்லை என்பதால், கோரபசியில் தி.மு.க.வினர் உள்ளனர். சாதரண பசி அல்ல கோரப்பசி.

தி.மு.க. அராஜக கட்சி

தி.மு.க. ஒரு அராஜக கட்சி, ஓட்டலில் ஓசி பிரியாணி கேட்டு தி.மு.க.வினர் சண்டை போடுகிறார்கள். அதற்கு ஸ்டாலின் கட்டப் பஞ்சாயத்து செய்கிறார். தி.மு.க. மாவட்ட கவுன்சிலர், பெண்கள் அழகு நிலையத்திற்கு சென்று ஒரு பெண்ணை தாக்குகிறார். தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஒருவர் ரயிலில் பயணம் செய்யும் கர்ப்பிணி பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சிக்கின்றார், ஆட்சியில் இல்லாதபோதே இவ்வளவு அராஜகம் என்றால் ஆட்சிக்கு வந்தால், மக்களை நிம்மதியாக வாழ விடுவார்களா, பெண்களுக்கு சுதந்திரம் கிடைக்குமா, நீங்களே எண்ணிப் பார்க்க வேண்டும்.

அம்மா சட்டமன்றத்திலே எதிர்கட்சி தலைவராக இருந்த காலக்கட்டத்திலே நான் சேவல் சின்னத்திலே வெற்றிப்பெற்று சட்டமன்ற உறுப்பினராக அமர்ந்திருந்தேன். அந்த காலக்கட்டத்திலே தி.மு.க. தலைவர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தார். சட்டமன்றத்தில் எதிர்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த அம்மாவை, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து, ஒரு எதிர்கட்சித் தலைவர் என்றும் பாராமல், ஒரு பெண் என்றும் பாராமல் கடுமையாக தாக்கினார்கள் என்றால், ஒரு எதிர்கட்சித் தலைவருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாதாரண பெண்களுக்கு எவ்வாறு தி.மு.கவினர் பாதுகாப்பு அளிப்பார்கள்.

ஸ்டாலின் மனு வாங்கும் நிகழ்ச்சியில் திருமலை என்பவர் தனக்கு கறவை மாடு வேண்டும் என்று கேட்கிறார். ஆனால் இவரோ, திருமலையின் சகோதரி தனது கணவரை காணவில்லை என்று மனு கொடுத்திருக்கிறார் என்று கூறுகிறார். அதற்கு அந்த நபர் இல்லை நான் கறவை மாடு வேண்டும் என்று கேட்டிருக்கின்றேன் என்றார். இவர் கையில் வாங்குகின்ற மனுவிற்கே இந்த நிலைமை என்றால், பெட்டியில் போடுகின்ற மனுவுக்கு என்ன நிலைமை என்று எண்ணிப்பாருங்கள். ஒரு சாலை போடுவதற்கு முதலில் மதிப்பீடு செய்ய வேண்டும், நிதி ஒதுக்க வேண்டும், டெண்டர் விட வேண்டும், இறுதி செய்ய வேண்டும் ஆகிய பணிகள் மேற்கொள்ளவே 6 மாத காலம் ஆகிவிடும். எப்படி அவர் 100 நாளில் மக்களின் பிரச்சனையை தீர்க்க முடியும்.

வீட்டில் இருந்தே போனில் குறைகளை சொல்லலாம்

இனிமேல் உங்கள் குறைகளை அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று, அதிகாரிகளிடத்தில் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் வீட்டிலிருந்தே உங்கள் செல்போன் மூலம் அரசு அதிகாரிகளுக்கு உங்களது பிரச்சினையை தெரிவிக்கலாம். இரண்டு மாதங்களுக்கு முன்பே இந்தத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு அந்தப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் 10 நாட்களில் முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்க்கும் மேலாண்மைத் திட்டத்தை துவக்க இருக்கின்றோம். இதற்கான உதவி மையம் எண் 1100. இந்த எண்ணில் உங்கள் பிரச்சினையை எந்த துறைக்கு அனுப்பினாலும் அந்த துறை தீர்த்து வைக்கும். இது ஒரு விஞ்ஞான உலகம், பொட்டியில் மனு போடுவது அந்த காலத்தோடு முடிந்து விட்டது. குடிநீர் பிரச்சினை, சாலைப் பிரச்சினை உள்ளிட்ட எந்த பிரச்சினையாக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏழை, எளிய மக்கள் வாழ்வு வளம்பெற, விவசாயிகள் ஏற்றம் பெற வருகின்ற 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலிலே கழக வேட்பளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *