சிறுகதை

கொண்டாட்டம்! – இரா.இரவிக்குமார்

திருமணமாகி மூன்றாண்டுகள் வரை என் மனைவியும் நானும் குழந்தை இல்லையே என்று எந்த விதமான கவலையும் இன்றி இருந்தோம்.

உறவு, நட்பு வட்டங்களும் அதைப் பற்றி எவ்வித பேச்சும் எடுக்காமல் இருந்தன. ஆனால் நாலாம் ஆண்டு திருமண நாளை நாங்கள் கொண்டாடியபோது ‘குழந்தைக்கு ஏன் தாமதம்?’ என்று கேட்டு அதையே பூதாகரமான பிரச்சினையாக எல்லோரும் எடுத்துக்காட்டத் தொடங்கினர்.

என் மனைவிக்கும் எனக்கும் அதுவே உள்மனதில் கவலையாக உருவெடுத்தது! படிப்படியாக அதற்குப் பரிகாரம் தேடி பல வழிகளைத் தேர்ந்தெடுக்கும் நிர்ப்பந்தத்திற்கு ஆளானோம்!

மருத்துவமனைகள், கோயில்கள் என்று எங்கள் பரிகார ஸ்தலங்கள் ஆளாளுக்கு எடுத்துரைக்க நீண்டு கொண்டே போயின.

எனது நண்பன் மணி மட்டும் என்னைப் பார்க்கும் போதெல்லாம் தைரியம் தந்து வீணாக மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் நம்பிக்கை ஊட்டினான்.

சொல்லி வைத்தாற்போலத் திருமணத்திற்குப் பின் முதல் மூன்று ஆண்டுகள் குழந்தை இல்லாமல் மகிழ்ச்சியாகவும் அதற்கு அடுத்த மூன்றாண்டுகள் குழந்தை இல்லாமல் கவலையாகவும் கழிந்தன.

ஆறாண்டுகளுக்குப் பின் என் மனைவி குழந்தை உண்டாகியிருக்கிறாள் என்ற செய்திதான் எங்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய மகிழ்ச்சி தரும் ஒன்றாக அமைந்தது!

இன்று எங்கள் குழந்தையின் முதலாம் ஆண்டு பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாட முடிவு செய்தோம்.

“ஏண்டா, இவ்வளவு சாப்பாடு மீந்துடுச்சி?” என்று தாமதமாக பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட என் நண்பன் மணி கேட்டான்.

“டேய், குழந்தையோட முதலாம் ஆண்டுப் பிறந்தநாளை எல்லாருமே சிறப்பாக் கொண்டாடுவோம்! எங்களுக்குக் கல்யாணமாகி ஆறு வருஷத்துக்கு அப்புறம்தான் குழந்தைப் பாக்கியம் கிடைச்சது உனக்குத் தெரியும்! அதான் மண்டபம், மத்தியானம் விருந்துன்னு கொண்டாட ஆசைப்பட்டேன். இன்னிக்குப் பார்த்து மழையும் காத்தும் வந்து எல்லாத்தையும் கெடுத்துடுச்சி!”

“பரவாயில்ல… எல்லாமே நல்லதுக்குத்தான்” என்ற என் நண்பன் தன் கார் டிக்கியில் எஞ்சியிருந்த சாப்பாடு, குழம்பு, கூட்டு, கறி வகைளை ஏற்றச் சொல்லி என்னையும் என் மனைவியையும் குழந்தையுடன் காரில் ஏற்றிக் கொண்டு அவனுக்குத் தெரிந்த அனாதை ஆசிரமம் ஒன்றுக்கு அழைத்துச் சென்றான். அங்கே குழந்தைகளுக்கு நாங்கள் எடுத்துச் சென்ற உணவு முழுவதும் பரிமாறப்பட்டு நாங்கள் அங்கிருந்து புறப்படும்போது அவர்கள் வரிசையாக நின்று நன்றியும் வணக்கமும் மகிழ்ச்சியுடன் கூற, என் மனைவி திக்கற்ற குழந்தைகளின் பசி தீர்த்த உள்ளம் குளிர்வித்த மன நிறைவுடன் சொன்னாள்:

“நம்ம குழந்தைக்கு இதுதாங்க சரியான கொண்டாட்டம்! மழையும் காத்தும் நல்லதுதான் பண்ணியிருக்கு! வர்ற பிறந்த நாட்களக் கூட இவங்களோட இப்படித்தான் கொண்டாடணும்!”

நானும் அவளது விருப்பத்தை மனமார ஆமோதித்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *