செய்திகள்

கொடைக்கானல் மாஸ்டர் பிளானுக்கு மார்ச் 6–ந்தேதிக்குள் ஒப்புதல்

கொடைக்கானல் மாஸ்டர் பிளானுக்கு மார்ச் 6 ந்தேதிக்குள் ஒப்புதல் வழங்கப்படும் என்று சட்டசபையில் இன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.சட்டசபையில் இன்று பழனி சட்டமன்ற உறுப்பினர் பெ. செந்தில்குமார் கொடைக்கானல் உள்ளூர் திட்டக்குழுமப் பகுதிக்கான மறு ஆய்வு முழுமைத் திட்டம் குறித்து எழுப்பிய வினாவிற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பதிலுரை வருமாறு:

கொடைக்கானல் உள்ளூர் திட்டக் குழுமத்திற்கான முதலாம் முழுமைத் திட்டம், 4.3.1993 லிருந்து அமலில் உள்ளது. தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டம், 1971 (தமிழ்நாடுசட்டம் 35/1972) முழுமைத் திட்டம் தயாரித்தல் மற்றும் ஒப்புதல் அளிக்கும் முறையை வகுத்துள்ளது. முழுமைத் திட்டங்கள், சட்டப்பிரிவு 16, 17, 24, 26, 28 ன்படி தயாரிக்கப்பட்டு, இணக்கமளிக்கப்பட்டு, மக்கள் கருத்து கேட்கப்பட்டு அது பரிசீலிக்கப்பட்டு, பின்னர் அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டு அமல்படுத்தப்படுகின்றன.

சட்டப்பிரிவு 32 ன் கீழ் முழுமைத் திட்டத்தை,தேவைப்பட்டால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு மறு ஆய்வு செய்து மாறுதல் செய்யலாம். மறு ஆய்வு செய்வதற்கு முழுமைத்திட்டம் தயாரிக்கும் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றவேண்டும். மேலும், 5 ஆண்டுகள் முடிந்தவுடன் மறு ஆய்வு செய்வதற்கு நீண்ட நடைமுறை பின்பற்றப்பட வேண்டியுள்ளது.

கொடைக்கானல், மறு ஆய்வு முழுமைத் திட்டத்திற்கு அரசின் இணக்கம் பெற உள்ளூர் திட்டக் குழுமம் 22.3.2011 ல் நகர் ஊரமைப்பு இயக்குநருக்கு அனுப்பியது. மறு ஆய்வு முழுமைத் திட்டத்தை பரிசீலனை செய்ய அமைக்கப்பட்ட வல்லுநர்குழு 7.4.2015 மற்றும் 30.7.2016 அன்று நடந்த கூட்டங்களில் விரிவாக விவாதித்து வரைவு மறு ஆய்வு முழுமைத்திட்டத்தை 2.9.2016 அன்று அரசுக்கு சமர்ப்பித்தது.

109 ஆட்சேபணைகள்

அரசு 21.9.2016 ல் வரைவு மறு ஆய்வு முழுமைத் திட்டத்திற்கு இணக்கம் அளித்து, பொதுமக்களின் ஆலோசனை மற்றும் ஆட்சேபணைகள் பெறுவதற்காக 21.9.2016 அன்று நாளிதழ்களில்வெளியிடப்பட்டது. குறிப்பிட்ட காலமான 60 நாட்களுக்குள் 109 ஆட்சேபணைகள் மற்றும் ஆலோசனைகள் பெறப்பட்டன. இந்த கால கட்டத்திற்கு பின்னரும் 10 ஆட்சேபணைகள் பெறப்பட்டன. அவைகளின் மீது உரிய பரிந்துரைகளுடன் உள்ளூர் திட்டக் குழுமம், நகர் மற்றும் ஊரமைப்பு இயக்குனர் வழியாக அரசுக்கு அனுப்பப்பட்டது. அரசு, வரைவு மறு ஆய்வு முழுமை திட்டத்தை பரிசீலனை செய்து 2.3.2018 ல் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி ஆட்சேபணைகளின் மீது விரிவான அறிக்கையை உள்ளூர் திட்டக் குழுமத்திடம் கேட்டுள்ளது.

கொடைக்கானல் நகரில் சில கட்டடங்கள் அனுமதியற்று அல்லது அனுமதி மீறி கட்டப்பட்டுள்ளன. இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றம் பொதுநல வழக்கு ஒன்றில், நீதிப்பேராணை எண்.268/2004 ல் எல்லாவிதமான விதிமீறல் கட்டடங்கள் மீதும் உரிய அமலாக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. கொடைக்கானல் நகர பகுதிகளில் 2003-லிருந்தே விதிமீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு நகரமைப்பு சட்டம் மற்றும் நகராட்சி சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடரப்பட்டு வருகிறது. இவற்றில், சிலர் அரசுக்கு மேல்முறையீடு செய்தனர். பலர் மேல்முறையீடு செய்யவில்லை. விதிமீறல் இருந்த காரணத்தினால் அரசு மேல்முறையீட்டு மனுக்களை நிராகரித்தது. அதனால், மேல்முறையீட்டாளர்கள் நீதிமன்றத்தை நாடினார்கள்.

விதிமீறல்: கள ஆய்வு

கொடைக்கானல் நகரில் 2007 ம் ஆண்டு வரை 1415 அனுமதியற்ற கட்டடங்களும், அதன் பின்னர் 81 அனுமதியற்ற கட்டடங்களும் ஆக மொத்தம் 1,496 அனுமதியற்ற கட்டடங்கள் உள்ளன. இவற்றில் 1,221 குடியிருப்பு கட்டடங்களும், 233 வணிக கட்டடங்களும், 29 அலுவலக கட்டடங்களும், 9 வழிபாட்டு கட்டடங்களும், 4 ஆக்கிரமிப்பு கட்டடங்களும் உள்ளன. மேற்கூறிய கட்டடங்களில் சில கட்டடங்கள் விதி மீறிய கட்டடங்களாகவும், சில கட்டடங்கள் விதிகளுக்கு உட்பட்டு அனுமதிக்கத்தக்க வகையிலும் உள்ளன. இதன் முழு விவரங்கள் குறித்து தற்போதுகள ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது.

கட்டட அனுமதி மறுக்கப்பட்டவர்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தினரும் கொடைக்கானல் மறு ஆய்வு முழுமைத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால் அவர்களது கட்டடங்கள் விதிமுறைக்கு உட்படும் என்று கருதி மறு ஆய்வு முழுமை திட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் அளிக்கக்கோரி மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கோடு உயர்நீதிமன்றத்தில் கொடைக்கானல் நகரில் விதிமீறி கட்டிய கட்டட உரிமையாளர்கள் தொடர்ந்த 58 வழக்குகளையும் ஒன்றிணைத்து நீதிப்பேராணை எண்.914/2018 ன் கீழ் விசாரணைக்கு எடுத்துக் கள்ளப்பட்டது.

விசாரணையின் போது முதன்மைச் செயலாளர் (வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை) 6.12.2018 அன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மூன்று மாதத்திற்குள் மறு ஆய்வு முழுமைத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

நீதிமன்றத்தில் மறு ஆய்வு முழுமைத் திட்டம் அமலுக்கு வரும் வரை அமலாக்க நடவடிக்கையை நிறுத்தி வைக்கலாமா என்று வாய்மொழியாக கேட்கப்பட்டது. இதுகுறித்து, முதன்மைச் செயலாளரால் (நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை) பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றத்தால் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன்படி, 58 அனுமதியற்ற கட்டுமானங்கள் விதிகளை பூர்த்தி செய்யாது என்று நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்துறை முதன்மைச்செயலாளர் சார்பில் 19.12.2018 ல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்செய்யப்பட்டது.

மின் இணைப்பு துண்டிப்பு

உயர்நீதிமன்றம் 23.1.2019 அன்று 45 அனுமதியற்ற கட்டடங்களுக்கும் மின் இணைப்பை துண்டிப்பு செய்து 25.1.2019 அன்று அறிக்கை தாக்க ல்செய்ய கோட்டப்பொறியாளர், தமிழ்நாடு மின்சாரவாரியம் மற்றும் கொடைக்கானல் நகராட்சிக்கு உத்தரவிட்டது. 25.1.2019 அன்று மின் இணைப்பு துண்டிப்பு செய்த விவரம் உயர்நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. இவ்விவர அறிக்கையை 28.1.2019 அன்று விசாரித்த உயர்நீதிமன்றம் 45 அனுமதியற்ற கட்டுமானங்களையும் பூட்டி முத்திரையிட்டு 31.1.2019 அன்று அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

31.1.2019 அன்று இவ்விபரங்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் பரிசீலித்த நிலையில் வழக்கில் ஆஜரான வழக்குரைஞர்கள் கொடைக்கானல் நகரில் 2007 முதல் அறிவிப்பு வழங்கப்பட்ட கட்டடங்கள் 1415 உள்ளதாகவும், 45 கட்டடங்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்க பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் அனைத்து அனுமதியற்ற கட்டடங்கள் மீதும் உரிய முறையில் ஆய்வு செய்து சட்டரீதியான முடிவுகள் மேற்கொண்டு அமலாக்க நடவடிக்கைகள் எடுத்து 11.3.2019 அன்று அறிக்கை செய்ய உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் கொடைக்கானல் மறு ஆய்வு முழுமைத்திட்டம் 1.2.2019 ல் நடந்த சம்மந்தப்பட்ட துறைத் தலைவர்களின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, பொதுமக்களின் ஆட்சேபணைகள் பரிசீலிக்கப்பட்டு, இறுதி செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

வல்லுனர்களின் ஆலோசனை

எனவே, உயர்நீதிமன்றத்தில் அரசு அளித்த உறுதியின்படி மறு ஆய்வு முழுமைத் திட்டத்திற்கு (மாஸ்டர் பிளான்) 6.3.2019-ற்குள் ஒப்புதல் அளிக்க ஆவன செய்யப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

மறு ஆய்வு முழுமைத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த பின்னர் விதிமீறிய கட்டடங்களை கொடைக்கானல் நகர் மலைவாழிடமாக உள்ளதாலும், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளதாலும் விதிமீறல்களை ஆராய்ந்து அந்த கட்டடங்களை எவ்வாறு நெறிபடுத்துவது என்பது குறித்து சம்மந்தப்பட்ட வல்லுநர்கள் மற்றும் துறைகளின் ஆலோசனை பெறப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்பதைதெரிவித்துக்கொள்கிறேன்.

அந்தவகையில் முடிவு எடுக்கும் போது உறுப்பினர் சொன்ன சில பல ஆலோசனைகள் கருத்தில் கொள்ளப்ப டும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *