முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, ஜூன் 28-–
கொடைக்கானல் பஸ் நிலையம் அருகே விளம்பரப்பலகை பொருத்தப்பட்ட சிக்னல் கம்பம் விழுந்து உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ, 2 லட்சம் நிதியுதவி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–-
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகர பஸ் நிலையம் அருகே உள்ள விளம்பரப் பலகை பொருத்தப்பட்ட சிக்னல் கம்பம் கடந்த 26–-ந் தேதி (நேற்று முன்தினம்) காலை 9 மணியளவில் எதிர்பாராதவிதமாக பலத்த காற்றினால் சாய்ந்தது. இந்த விபத்தில் அப்பகுதியில் தள்ளுவண்டியில் இலைகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த கொடைக்கானல் தெரசா நகரைச் சேர்ந்த அந்தோணிதாஸ் (வயது 55) என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அந்தோணிதாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ, 2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.