செய்திகள்

கொடைக்கானல் பயணத்தை நிறைவு செய்து மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்

கொடைக்கானல், மே 2–

கொடைக்கானல் பயணத்தை முன்கூட்டியே நிறைவு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னை திரும்புகிறார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 29-ந்தேதி தனது குடும்பத்தினருடன் ஓய்வு எடுப்பதற்காக வருகை தந்தார்.

பாம்பார்புரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார். தனது ஓட்டலிலேயே நடைபயிற்சி மேற்கொண்ட மு.க.ஸ்டாலின் பசுமை பள்ளத்தாக்கில் உள்ள கோல்ப் மைதானத்திற்கு சென்று கோல்ப் விளையாடினார்.

அதன்பின் விடுதிக்கு திரும்பியபோது ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்களிடம் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின் ஏதேனும் குறைகள் உள்ளதா? என கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்த பொதுமக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

நேற்று மே தினம் என்பதால் கொடைக்கானலுக்கு அதிகாலை முதல் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. மலைச்சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக வாகனங்கள் நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏற்கனவே வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ காரணமாக மன்னவனூர், கூக்கால் உள்ளிட்ட கிராமங்களுக்கும், பேரிஜம் செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மோயர் பாயிண்ட், குணா குகை, பிரையண்ட் பூங்கா, ஏரி உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்த்ததுடன் படகு சவாரி, குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனர். இதனால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது குடும்பத்தினருடன் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் அவரது படகு சவாரி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது.

நேற்று மாலை துர்கா ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தார். அப்போது அங்கிருந்த சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், வியாபாரிகள் ஆகியோர் துர்கா ஸ்டாலினுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இந்த நிலையில் 5 நாள் ஓய்வுக்காக கொடைக்கானல் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 4ந்தேதி வரை இங்கு தங்குவார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் முன்கூட்டியே தனது பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அவர் சென்னை புறப்பட உள்ளார். இதற்காக கொடைக்கானல் ஓட்டலில் இருந்து கார் மூலம் பிற்பகலில் மதுரைக்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை திண்டுக்கல், தேனி மாவட்ட போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *