செய்திகள்

கொடைக்கானலில் நிலச்சரிவு: போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல், டிச. 19–

கொடைக்கானலில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மிக கனமழை கொட்டி வருகிறது. இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதுடன் முக்கிய அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. நகரின் மத்தியில் உள்ள நட்சத்திர ஏரியும் நிரம்பிவிட்டது.

இன்று காலை வரை கொட்டித் தீர்த்த கனமழையால் மேல்மலை கிராம சாலைகளில் ஒரு சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. கொடைக்கானலில் இருந்து வானியல் ஆய்வு மையத்துக்கு செல்லும் சாலையில் மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த சாலை மன்னவனூர், பூம்பாறை ஆகிய மேல்மலை கிராமங்களுக்கு செல்லும் பிரதான பகுதியாகும். நிலச்சரிவு ஏற்பட்டதால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. நிலச்சரிவை தற்காலிகமாக சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இருந்த போதும் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் சீரமைப்பு பணியை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதே போல் இரவு முழுவதும் நீடித்த மழையால் மேல்மலை கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலையான அப்சர்வேட்டரி செம்மண் மேடு பகுதியில் இன்று அதிகாலை மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மண் சரிவை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீண்ட நேரம் மண் சரிவை அகற்றும் பணியில் ஈடுபட்ட பணியாளர்களால் போக்குவரத்து சீரானது.

கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பெரும்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, தடியன்குடிசை, மங்களம்கொம்பு, கே.சிபட்டி, குப்பம்மாள்பட்டி, ஆடலூர், பன்றிமலை, பெரியூர், பகுதியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் இருந்தே பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் மலைப்பாதையில் ஆங்காங்கே மண்சரிவு, மரக்கிளைகள் விழுந்தன. இதேபோல் பெரும்பாறை அருகே உள்ள மஞ்சள்பரப்பு-மூலக்கடைஇடையே மலைப்பாதையில் மரக்கிளை முறிந்து விழுந்தது.இதனால் அப்பகுதியில் உள்ள 5 மின்கம்பங்கள் அடுத்தடுத்து சாய்ந்து விழுந்ததில் மின் வயர்கள் அறுந்தன. இதனால் மூலக்கடை, புல்லாவெளி, மீனாட்சி ஊத்து பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதுபோல் ஆங்காங்கே மலைபாதையில் முறிந்து விழுந்த மரங்களை அப்பகுதி மக்களே அகற்றி வருகின்றனர். தற்போது மழை குறைந்திருந்தாலும் விட்டு விட்டு பெய்து வரும் சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று கொடைக்கானல் தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று மாணவ-மாணவிகள் சாரல் மழையில் நனைந்தபடி பள்ளிக்கு சென்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *