கொடைக்கானல், மே.27-–
கொடைக்கானலில் திரண்ட சுற்றுலா பயணிகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கடந்த 17-ந்தேதி கோடை விழா மற்றும் 61-வது மலர் கண்காட்சி தொடங்கியது. 10 நாட்களாக கோலாகலமாக நடைபெற்ற கோடை விழா நேற்று நிறைவு பெற்றது.
கோடை விழா நிறைவு நாளில் பரதநாட்டியம், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர். 10 நாட்கள் நடைபெற்ற மலர் கண்காட்சியை 42 ஆயிரத்து 493 பேர் கண்டுகளித்துள்ளனர். இதன்மூலம் நுழைவு கட்டணமாக ரூ.31 லட்சத்து 42 ஆயிரத்து 650 கிடைத்துள்ளது.
இதற்கிடையே நுழைவு கட்டணம் அதிகரிப்பு, தொடர் மழை மற்றும் இ-–பாஸ் நடைமுறை உள்ளிட்ட காரணங்களால் பிரையண்ட் பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் வார விடுமுறையை யொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் நேற்று கொடைக்கானலுக்கு படையெடுத்தனர். அதிகாலை முதலே வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
ஒரேநேரத்தில் 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்ததால் வெள்ளி நீர்வீழ்ச்சி முதல் அப்சர்வேட்டரி வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பின்னர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.
#kodaikanal #tourism #TN #Tamilnews #MakkalKural