சிறுகதை

கொடுப்பினை – ராஜா செல்லமுத்து

மனோ திரைத்துறையில் நடிகர்களுக்கான ஏஜென்ட். எந்த திரைப்படமாக இருந்தாலும் எந்த இயக்குனர் திரைப் படத்தை இயக்கினாலும் முதலில் மனாேவைத் தான் கூப்பிடுவார்கள்.

காரணம் பெரிய நடிகர்கள், நடிகைகள் தவிர மற்ற நடிகர் நடிகைகள் எல்லாம் மனோ தன் கைவசம் வைத்திருந்தான்.

இந்திய மொழிகளில் அத்தனை துணை நடிகர்களின் தொடர்புகளும் மனாேவிற்கு அத்துபடி .

தமிழ், மலையாளம், கன்னடம் என்று பிராந்திய மொழி திரைப்படங்களுக்கெல்லாம் மனோ தான் ஏஜென்ட்.

முதலில் ஆல்பங்கள் நிறைய போட்டோக்களைச் சுமந்து கொண்டு இயக்குனர்கள் கேட்கும் கதாபாத்திரங்களுக்கு தகுந்த மாதிரி நடிகை, நடிகர்களை அனுப்புவான்.

இப்போது டெக்னாலஜி வளர்ந்து விட்டதால் லேப்டாப் டேப், வாட்ஸப் என்று புகைப்படங்களை அனுப்பி அதைத் தேர்வு செய்யும் முறையே கையாண்டு கொண்டிருந்தான் மனோ.

அவனிடம் துணை நடிகர்களாக இருந்து இன்று நடிகர்களாக நடிகையாளராக உயர்ந்தவர்கள் ஏராளம் என்று சொல்வான்.

இதே கையில் தான் இன்னைக்கு பெரிய ஆளா இருக்கிற பாபுபதி போட்டோவ நான் சுமந்துட்டு போயிருக்கேன். இன்னைக்கு அவன் பெரிய நடிகன். சுசிபாலா இன்னிக்கு பெரிய நடிகை. அவளுடைய போட்டோ நான் சுமந்துட்டு போயிருக்கிறேன். இப்படி எத்தனையோ நடிகர்கள் நடிகைகளுக்கு நான் ஏஜெண்டா இருந்திருக்கிறேன். அத்தனை பேருக்கும் வாய்ப்பு வாங்கி கொடுத்திருக்கிறேன். நிறைய சம்பாதிச்சு இருக்கிறாங்க. எல்லாம் என்னோட கைராசினு சொல்லுவாங்க . அதேபோல எந்த மொழி பேசுற நடிகைகள் இருந்தாலும் முதல்ல என்கிட்ட வந்து ஆல்பம் கொடுப்பாங்க. அவங்கள கம்பெனிக்கு தகுந்த மாதிரி அனுப்பி வைப்பேன். அதுல வர சொற்ப வருமானம் தான் எனக்கு சம்பளம் என்று சொல்லுவான் மனோ.

அன்று ஒரு திரைப்பட அலுவலகத்திற்குச் சென்ற மனாே அந்தத் திரைப்பட இயக்குனர் கேட்டதற்கிணங்க எத்தனையோ புகைப்படங்களைக் காட்டினான் .

அவர்களுக்குத் தேவையான நடிகர் நடிகைகளை தேர்வு செய்தார்கள். மனோ நீங்க பெரிய ஆளு. உங்க கை மோதிரக் கையில காெட்டுப்பட்ட ஆளுக இன்னைக்கு பெரிய ஆளா இருக்குறாங்க. நான் கூட உதவி இயக்குனராக இருந்து இயக்குனர் ஆனேன்.

அப்ப இருந்து நான் உங்கள பாத்துட்டு இருக்கேன்.நீங்க இன்னும் நிறைய பேர் அறிமுகப்படுத்திட்டே இருக்கீங்க ரொம்ப சந்தோசம் என்றார் இயக்குநர்.

மனோ அருகில் அன்று புதிதாக ஒரு நபர் அமர்ந்திருந்தான்.

என்ன மனோ இவர் யாரு ? என்று அந்த இயக்குனர் கேட்டபோது

சார் இவன் என் பையன் என்ஜினீயரிங் படிச்சிருக்கான். வேலைக்கு போகாம சினிமா தான் கதின்னு இருக்கான். எவ்வளவு சொல்லியும் கேட்க மாட்டேங்கிறான்.

அவனுக்கான வேலையை அவன் செய்யாம இப்படி சினிமா சினிமான்னு அலையுறான் என்று மனோ சொன்னபோது

அந்த இயக்குனருக்கு வியப்பாக இருந்தது .

ஏங்க மனோ உங்ககிட்ட எத்தனையோ நடிகர் நடிகைகள் போட்டோ கொடுத்து சான்ஸ் வாங்கி சம்பாதிச்சு இன்னைக்கு உயர்ந்த இடத்துக்கு வந்து நிறைய பணம் சம்பாதிச்சு இருக்காங்க. பாருங்க விதி .உங்க பையன கொண்டு வர முடியல .இதுதான் கர்மா.

சரி போட்டோவ கொடுத்துட்டு போங்க வாய்ப்பு வரும் போது சொல்லி அனுப்புறேன் என்றார் அந்த இயக்குனர் .

என் பையனோட போட்டோ எதுக்குங்க .அதான் நேரிலேயே பாத்துட்டீங்களே எப்ப கூப்பிட்டாலும் நான் உங்களை பார்க்க சொல்றேன். இது உங்க கிட்ட மட்டும் இல்லைங்க; எல்லா இயக்குனர்களுக்கிட்டயும் இதத்தான் சொல்றேன் . எல்லாருக்கும் போட்டோ கொடுப்பேன். ஆனா என் பையன எல்லாக் கம்பெனிக்கும் நேர்ல அழைச்சிட்டு போறேன். ஆனா வாய்ப்பு தான் அமையல.

அவனுடைய கொடுப்பினை அவ்வளவுதான் போல என்றான் மனோ .

சரி நாங்க வரோம் என்று அந்த இயக்குனரிடம் இருந்து விடைபெற்றனர்.

அடுத்த நாள் ஒரு பெரிய நிறுவனம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க புகைப்படங்களை எடுத்துக் கொண்டு புறப்பட்டான் மனாே. அவனுடன் மனோவின் மகனும் புறப்பட்டான். அங்கேயும் புகைப்படங்களைைக் காட்டினான்.

பாேட்டாேக்கள காட்டுங்க. எங்க கதாபாத்திரங்களுக்கு தேவையான ஆட்களை தேர்ந்தெடுத்துக்கிறோம். உங்க பையன பார்த்துட்டோம் அவனுக்கான கதாபாத்திரம் வரும்போது சொல்லி அனுப்புறோம் என்று அங்கேயும் மனோவின் மகனை கை கழுவினார்கள்.

அடுத்த நாளும் ஏதோ ஒரு திரைப்பட நிறுவனம் கேட்டுக் கொண்டதற்கு லேப்டாப் சகிதம் சென்றான் மனாே

உடன் மனாேவின் மகனும் சென்றான்.,

இப்படித்தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது மனோவின் கொடுப்பினை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *