செய்திகள்

கொடுப்பது அ.தி.மு.க; எடுப்பது தி.மு.க: எடப்பாடி பழனிசாமி பேச்சு

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரச்சாரம்

தி.மு.க. ஆட்சியில் இருந்த போது என்ன திட்டம் கொண்டு வந்தார்கள்?

கொடுப்பது அ.தி.மு.க; எடுப்பது தி.மு.க: எடப்பாடி பழனிசாமி பேச்சு

முதன்முதலாக வறட்சிக்கு நிவாரணம் வழங்கியது அம்மாவின் அரசு

வந்தவாசி, மார்ச் 21

அண்ணா தி.மு.க. கொடுக்கும் கட்சி; தி.மு.க. எடுக்கும் கட்சி என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

முதன்முதலாக விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கொடுத்தது அம்மாவின் அரசு என்றும் முதலமைச்சர் கூறினார்.

தமிழகம் முழுவதும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் சூறாவளி பிரச்சாரம் செய்தார்.

இன்று 11 தொகுதிகளில் அண்ணா தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கொளுத்தும் வெயிலில் தீவிர பிரச்சாரம் செய்து மக்களிடம் ஆதரவு திரட்டினார்.

அவர் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் அமோக ஆதரவு அளித்து வருகிறார்கள். ஒரு இடத்தை மற்றொரு இடம் மிஞ்சும் அளவுக்கு அலைகடலென மக்கள் திரண்டு வருகிறார்கள்.

முதலமைச்சரின் பேச்சை ஆர்வத்துடன் கேட்டு கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்கிறார்கள். நாளுக்கு நாள் முதலமைச்சரின் செல்வாக்கு பெருகி வருவதை காட்டியது.

இன்று வந்தவாசி தொகுதி பா.ம.க. வேட்பாளர் எஸ்.முரளிசங்கர், செய்யார் தொகுதி அண்ணா தி.மு.க. வேட்பாளர் தூசி கே.மோகன் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

செய்யாறில் அண்ணா தி.மு.க. வேட்பாளர் தூசி மோகனை ஆதரித்து பேசியதாவது:

செய்யார் தொகுதியில் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தூசி மோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள்.

சகோதரர் தூசி மோகன் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர். உங்கள் கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு வந்து நிறைவேற்றக் கூடியவர்.

மக்களுக்கு உழைப்பதற்காக, தொண்டு செய்வதற்காக தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் அண்ணா ளதி.மு.க. எம்.ஜி.ஆரும், அம்மாவும் தங்கள் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக உழைத்தார்கள். அவர்களுக்கு வாரிசு இல்லை. மக்கள் தான் அவர்களுக்கு வாரிசு. மக்களுக்காக ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தார்கள். மக்கள் மனதில் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை நாம் பூஜிக்கிறோம். அவர்களது வழியில் மக்களுக்கு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறோம்.

கொடுப்பது அ.தி.மு.க; எடுப்பது தி.மு.க.

கடந்த பொங்கல் முதல் இந்த பொங்கல் வரை மக்களுக்கு 4500 ரூபாய் வழங்கி இருக்கிறோம். வறட்சிக்கு முதன்முதலில் நிவாரணம் கொடுத்தது அம்மாவின் அரசு தான். பயிர் காப்பீட்டு திட்டத்தை கொண்டு வந்து 9,300 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்று தந்திருக்கிறோம். விவசாயிகளை பாதுகாக்கும் அரசு அம்மாவின் அரசு. விவசாயிகள் கஷ்டத்தில் இருந்தால் அவர்களை அதில் இருந்து மீட்போம்.

தி.மு.க. யாருக்காவது 100 ரூபாய் கொடுத்தது உண்டா? வாழ்நாளில் கொடுத்த வரலாறே இல்லை. கொடுப்பது அண்ணா தி.மு.க. எடுப்பது தி.மு.க.

இங்கு சிப்காட் தொழிற்பேட்டையை கொண்டு வந்தது அம்மா. ஒன்றும் நடக்கவில்லை என்கிறார் ஸ்டாலின். இந்த தொழிற்பேட்டையில் 50 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 50 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

வந்தவாசி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (21 ந் தேதி) திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியதாவது: –

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் ஆசி பெற்று, வந்தவாசி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகின்ற பா.ம.க. கட்சியின் வெற்றி வேட்பாளார் எஸ்.முரளிசங்கருக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுங்கள். இந்த தொகுதியில் உள்ள மக்களுக்கு நன்மைகள் செய்வதற்காக அவருக்கு ஒரு வாய்ப்பினை தாருங்கள் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

நம்முடைய கூட்டணி வெற்றி கூட்டணி, வலிமையான கூட்டணி. இந்த கூட்டணியின் வெற்றி வேட்பாளார் எஸ். முரளிசங்கர், திறமையானவர், பண்பாளர், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரக்கூடியவர். அவருக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுங்கள் என இருகரம் கூப்பி வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.

வந்தவாசி சட்டமன்ற தொகுதி, கிராமங்கள் நிறைந்த பகுதி. இங்குள்ள பெரும்பாலானோர் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள். 100 க்கு 70 பேர் விவசாயத்தையும், விவசாய தொழிலையும் நம்பி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். விவசாயத்தையும், விவசாய தொழிலையும் காக்க வேண்டும். அதுதான் அரசின் முதன்மை கடமை. அதற்காக அம்மாவின் அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகின்றது.

40 ஆயிரம் ஏரிகள்.

விவசாயம் என்று சொன்னாலே அதற்கு நீர் தேவை. பருவ காலங்களில் பெய்கின்ற மழை நீர் முழுவதையும் சேமித்து, ஒரு சொட்டுநீர் கூட வீணாக கூடாது என்பதற்காக நீர் மேலாண்மை என்ற திட்டத்தை தீட்டி, குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்தோம். முழுக்க முழுக்க விவசாயிகளின் பங்களிப்போடு இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் பொதுப்பணித்துறையின் கீழ் 14,000 ஏரிகள் வருகின்றன. ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் 26,000 ஏரிகள் வருகின்றன. மொத்தம் 40 ஆயிரம் ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஊரணிகள் ஆகியவற்றில் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவு நிதி ஒதுக்கி, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஏரிகள், குளங்களை தூர் வாரி கொண்டிருக்கிறோம்.

இது வரைக்கும் பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள 6000 ஏரிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு ரூ.1300 கோடியில் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டதன் விளைவாக, பருவகாலங்களில் பெய்த மழையினால் ஏரிகள் அனைத்தும் நிரம்பி உள்ளன. இதனால் கோடை காலங்களில் வேளாண் மக்களுக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதற்கும், குடிநீர் கிடைப்பதற்கும் வழிவகை செய்திருக்கின்றோம்.

தி.மு.க. என்ன செய்தது?

இது ஒரு அற்புதமான திட்டம். நான் ஒரு விவசாயி என்ற காரணத்தினால் இந்த திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்தியுள்ளோம். பல நதிகளிலும், ஓடைகளிலும் தண்ணீர் வீணாகாமல் தேங்கி நிற்பதற்காக தடுப்பணைகள் கட்டி நீர் தேக்கத்தை உண்டாக்கி விவசாய பெருமக்களுக்கு தேவையான நீரை தந்து கொண்டு இருக்கிறோம். தி.மு.க. ஆட்சியில் இதுபோன்ற திட்டங்கள் ஏதும் தந்தார்களா? இல்லை. அந்தந்தப் பகுதி மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து நாங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.

இந்தப் பகுதி விவசாயிகள் நிறைந்த பகுதி. விவசாயிகள் பயன்பெறும் வகையில் உழவன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் விவசாயிகள், பயிர்களில் என்ன பூச்சி தாக்குதல் உள்ளது, தங்களது பயிரை செல்போனில் போட்டோ எடுத்து அனுப்பினாலே, எந்த பூச்சி தாக்கியுள்ளது, அதற்கு என்ன மருந்து அளிக்கவேண்டும் என்ற அறிவுரையை வேளாண் துறை அதிகாரிகள் தெரிவிப்பார்கள். தட்பவெப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். சந்தை நிலவரம் பற்றி அறிந்து கொள்ளலாம்.

வறட்சி நிவாரணம்

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூபாய் 2,247 கோடி அளவுக்கு நிவாரணம் வழங்கியுள்ளோம். இதுவரை தமிழகத்தில் வறட்சி நிவாரணம் வழங்கியது கிடையாது. முதன்முதலாக வறட்சி நிவாரணம் வழங்கிய அரசு அம்மாவின் அரசு. புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும் நிவாரணம் வழங்கியுள்ளோம். பயிர்க் காப்பீடு திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே அதிகளவு பயிர் இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 9,300 கோடி பெற்றுத் தந்துள்ளோம்.

விவசாயிகள் புயலால், கனமழையால், வறட்சியால் பாதிக்கப்படுகிறார்கள். அப்படி பாதிக்கப்படுகின்ற விவசாயிகள் அரசாங்கம் உதவி செய்திடவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். நாங்கள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய பயின்கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அவர்களுடைய கோரிக்கையை ஏற்று விவசாயிகளின் பயிர்கடன்களை ரத்து செய்த அரசாங்கம் என் தலைமையில் இருக்கின்ற அம்மாவின் அரசாங்கம்.

உணவு உற்பத்தியில் சாதனை

சுமார் 12,110 கோடி ரூபாய் பயிர்கடன் சுமார் 16.43 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். எல்லா அரசியல் கட்சியும் தேர்தல் அறிக்கையில் தான் தெரிவிப்பார்கள். ஆனால், அம்மாவின் அரசு அதனை செயல்படுத்தியுள்ளது. விவசாயிகளுக்கு எல்லாம் ரசீது வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளை கண்ணை இமை காப்பது போல காத்து வருகிறது அம்மாவின் அரசு.

விவசாயிகளுக்கு சோலார் மின் மோட்டார் பொருத்த மானியம் வழங்கி வருகின்றோம். அதேபோல சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம் கொடுத்து வருகின்றோம். இந்தியாவிலேயே அதிக அளவு சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கியது தமிழ்நாடு அரசு தான். இத்தகைய நடவடிக்கையினால், 100 லட்சம் டன் உணவு தானிய உற்பத்தியை பெருக்கியதால் தேசிய அளவில் கிருஷி கர்மான் விருதினை தொடர்ந்து 5 வருடமாக பெற்று வருகின்றோம். டிராக்டர் மானியம் வழங்கி வருகின்றோம். பண்ணை குட்டை அமைத்துக் கொடுக்கின்றோம்.

இரட்டிப்பு வருமானம் கிடைக்க வேண்டும், அதை எங்கள் அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது. விவசாயிகள் பயிரிட்ட மக்காச்சோளப் பயிர் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் வீணாகி, அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், விவசாயிகளுக்கு ரூபாய் 186 கோடி கடந்த ஆண்டு நிவாரணம் வழங்கியது அம்மாவின் அரசு.

விவசாயிகள் பாதிக்கப்படும் போது

மக்காச்சோளப் பயிர்களை அமெரிக்கன் படைப்புழு தாக்கியதை அரசு வேளாண் அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து அரசு செலவிலேயே ஏறத்தாழ ரூபாய் 48 கோடி மதிப்பீட்டில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டது. விவசாயிகள் பாதிக்கப்படும் போதெல்லாம் அவர்களுக்கு தூணாகவும் பக்கபலமாகவும் இருந்து அவர்களை கஷ்டங்களில் இருந்து மீட்டெடுத்த அரசு அம்மாவின் அரசு. நான் இவ்வளவு செய்தாலும் ஸ்டாலின் என்னை போலி விவசாயி என்கிறார். விவசாயிகளில் போலி விவசாயி என்று எங்காவது உண்டா? என்று நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.

சென்ற முறை நமக்கு நாமே என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி பல்வேறு இடங்களுக்கு ஸ்டாலின் சென்றபோது, சேலம் தலைவாசல் வந்திருந்த போது அங்கு சேதமடைந்த கரும்புத் தோட்டத்தை பார்வையிட சென்றபோது 4 அடி உயரத்திற்கு கான்கிரீட் சாலை அமைத்து பேண்ட், ஷர்ட், ஷூ அணிந்து கொண்டு ஏர் ஓட்டுகிறார். இவர்தான் போலி விவசாயி. ஆனால் நான் சட்டையை கழற்றி எறிந்துவிட்டு தோட்டத்தில் இறங்கி விவசாயத்தில் ஈடுபடுபவன். இது மண்வெட்டி பிடித்த கை, ஸ்டாலினே. என்னுடைய குலத் தொழில் விவசாயம். விவசாயிகளை வேண்டுமென்றே திட்டமிட்டு நீங்கள் கொச்சைப்படுத்துகிறீர்கள். ஸ்டாலின் ஏசி-யிலேயே இருந்தவர். அவருக்கு விவசாயம் பற்றி தெரியாது.

கான்கிரீட் வீடு கட்டி தருவோம்

நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு அரசாங்கமே நிலமும் வாங்கி கான்கிரீட் வீடுகளும் கட்டிக் கொடுக்கும். விவசாயிகளை கொச்சைப்படுத்தும் ஸ்டாலினுக்கு நீங்கள் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும். அதே போல, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஏற்கனவே வீடுகட்டிக் கொடுத்து அவை பழுதடைந்தால் அவர்களுக்கும் கான்கிரீட் வீடு கட்டித் தரப்படும்.

தாழ்த்தப்பட்ட குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி படிக்க போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் வழங்கப்படும். வேளாண்மை சிறக்க எங்கள் அரசு தொடர்ந்து பாடுபடும் என்ற செய்தியைத் தெரிவித்து நம்முடைய வெற்றி வேட்பாளர் முரளி சங்கருக்கு மாம்பழ சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

அண்ணா தி.மு.க. சார்பாக வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் மக்களின் வாழ்வாதாரம் சிறக்க ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ஆறு கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும். அனைத்து குடும்பத்திற்கும் வாஷிங் மெஷின் வழங்கப்படும். கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவிக் குழுவினர் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். அதேபோல் கூட்டுறவு சங்கங்களில் 6 சவரனுக்கும் குறைவாக அடமானம் வைத்து பணம் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

100 நாள் வேலை திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும். கேபிள் இணைப்பு, கட்டணம் இல்லாமல் வழங்கப்படும். மாதந்தோறும் ரூபாய் 1,500 வழங்கப்படும். முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும். 18 வயது நிரம்பியவர்களுக்கு ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு லைசென்ஸ் வழங்கப்படும்.

வீடு தேடி ரேஷன் பொருட்கள்

ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும். விவசாயிகளுக்கு உர மானியம் வழங்கப்படும். இஸ்லாமியப் பெருமக்களுக்கு அம்மாவின் அரசு தொடர்ந்து பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் அமைதிப் பூங்காவாக விளங்கிக் கொண்டிருக்கிறது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் ஜாதி, மதச் சண்டைகள் இல்லாமல் சட்டத்தின் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சிறுபான்மையின மக்கள் நிம்மதியாக, மகிழ்ச்சியோடு வாழுகின்ற இடம் தமிழ்நாடு. இசுலாமியப் பெருமக்கள் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த நிதி உதவியானது ரூபாய் 6 கோடியில் இருந்து ரூபாய் 10 கோடியாக உயர்த்தி வழங்கப்படும். ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் நேரத்தில் இஸ்லாமிய பெருமக்கள் சென்னையில் வந்து தங்கிச் செல்வதற்கு வசதியாக ரூபாய் 15 கோடி மதிப்பீட்டில் ஹஜ் இல்லம் கட்டித்தரப்படும். பள்ளிவாசல்கள் தர்காக்களை பழுது பார்க்க 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது, இனி, ரூபாய் 5 கோடியாக உயர்த்தப்படும்.

அண்மையில் நான் நாகப்பட்டினம் சென்றிருந்தபோது நாகூர் தர்காவில் உள்ள குளக்கரையின் சுவர் சரிந்து கிடந்ததை செப்பனிட வேண்டுமென்று வைத்த கோரிக்கையை ஏற்று ரூபாய் 4.34 கோடி மதிப்பீட்டில் குளக்கரை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிக்க அம்மாவின் அரசு விலையில்லா அரிசியை தொடர்ந்து இஸ்லாமியப் பெருமக்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறது. நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவிற்கு விலையில்லா சந்தன கட்டைகளை அம்மாவின் அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது. உலமாக்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த ரூபாய் 1,500 ஓய்வூதியம் ரூபாய் 3,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கலாமுக்கு ஓட்டு போட்டீர்களா?

காயிதே மில்லத் பெயரால் இஸ்லாமிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பாக இருப்போம் என்று கூறி வரும் ஸ்டாலின், அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுப்பதற்கு ஓட்டு போடவில்லை. அவர் இந்திய நாட்டின் முதல் குடிமகனாக வருவதற்கு ஓட்டு போட்டு அழகு பார்த்த கட்சி அண்ணா திமுக கட்சி என்பதை தெரிவித்து, இஸ்லாமிய பெருமக்களுக்கும் கிறித்துவ பெருமக்களுக்கும் எங்கள் அரசு தொடர்ந்து அரணாக இருந்து பாதுகாக்கும் என்பதை தெரிவித்து, எங்கள் கூட்டணி வேட்பாளருக்கு மாம்பழ சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யவேண்டுமென கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது திருவத்திபுரம் பேருந்து நிலையம் அருகில், பெரும் திரளாக கூடியிருந்த பொதுமக்களிடையே செய்யார் தொகுதி அண்ணா தி.மு.க. வேட்பாளர் தூசி கே.மோகனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது வந்தவாசியில் அண்ணா தி.மு.க. கூட்டணி கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியின் வந்தவாசி சட்டமன்ற வேட்பாளர் எஸ்.முரளிசங்கரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *