செய்திகள்

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் அண்ணா தி.மு.க. அரசு: எடப்பாடி பேச்சு

Spread the love

சேலம், பிப். 25–

கொடுத்த வாக்குறுதிகளை அம்மாவின் அரசு நிறைவேற்றி உள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் கூறினார்.

சேலம் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 47 ஆயிரத்து 72 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலம் 3 ரோடு அருகே உள்ள வரலட்சுமி மகால் மைதானத்தில் நேற்று இரவு நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அண்ணா கனவு, எம்.ஜி.ஆர் கண்ட கனவு இரண்டையும் இன்றைக்கு நனவாக்கிய தலைவி அம்மா. மறுக்க முடியுமா? அண்ணா தி.மு.க. என்னென்ன திட்டங்களை நாட்டு மக்களுக்கு வழங்கியிருக்கிறது என்று பட்டியலிட்டு நாங்கள் காட்டினோம். தி.மு.க.வை போல நடிப்பது அல்ல, சொன்னதைச் செய்கின்ற ஒரே கட்சி அண்ணா தி.மு.க. கட்சி, அண்ணா தி.மு.க. அரசு என்பதை நிரூபித்துக் காட்டிக் கொண்டிருக்கிறோம். அத்தனை திட்டங்கள். உங்கள் ஆட்சியிலே தெரிவிக்க முடியுமா? இன்றைக்கு பத்திரிகையில் கிட்டத்தட்ட 3 பக்கம் விளம்பரமாக கொடுத்தோம், எதற்காக கொடுத்தோமென்றால், எடப்பாடி பழனிசாமி என்ன செய்தார்? அம்மா என்ன செய்தார்? அண்ணா தி.மு.க. அரசு இந்த நாட்டு மக்களுக்கு என்ன திட்டங்களைக் கொடுத்தது என்று போகிற இடத்திலெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார். பேசிக் கொண்டிருக்கின்றார். ஆகவே, அதற்கு பதில் கொடுக்கின்ற விதமாக அண்ணா தி.மு.க. அரசு, அம்மா காலத்திலிருந்து இன்றுவரை என்னென்ன திட்டங்களை நாட்டு மக்களுக்கு வழங்கியிருக்கிறது என்பதை பட்டியலிட்டு தெரிவித்த ஒரே அரசு அண்ணா தி.மு.க. அரசு. தி.மு.க. ஆட்சியிலிருந்தபொழுது, விளம்பரப்படுத்தி இதை நாங்கள் செய்தோம் என்று நீங்கள் சொல்ல முடியுமா? முடியாது, செய்திருந்தால் தானே சொல்ல முடியும்.

2 ஏக்கர் நிலம் எங்கே?

ஆனால் நாங்கள் பட்டியலிட்டு காட்டி இருக்கின்றோம். அதில் என்ன குறை இருக்கிறது என்று சொல்வீர்களானால் நாங்கள் பதில் சொல்ல தயாராக இருக்கின்றோம். அவர்களால் சொல்ல முடியாது. அம்மா 2011 தேர்தல் அறிக்கையிலே நான் ஆட்சிக்கு வந்தவுடன் இலவச மிக்சி, கிரைண்டர் கொடுப்பேன் என்று சொன்னார். கொடுத்தார்களா, இல்லையா. 1.55 கோடி குடும்பங்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர் கொடுத்து சரித்திரம் படைத்த தலைவி அம்மா. சொன்னார்கள், கொடுத்தார்கள். உங்களால் கொடுக்க முடிந்ததா. இந்தியாவில் எத்தனையோ கட்சிகள் இருக்கின்றன. தேர்தல் அறிக்கையை வெளியிடுவார்கள். தேர்தல் முடிந்தவுடன் மறந்துவிடுவார்கள். அதேபோலத் தான் தி.மு.க.வும்.

தி.மு.க. ஆட்சியிலே இருக்கின்ற போது, பல்வேறு தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்கள். 2006 தேர்தல் என்று கருதுகின்றேன். அப்பொழுது நிறைய அறிவிப்புகளை வெளியிட்டார்கள். நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுப்பேன் என்று சொன்னார்கள். கொடுத்தார்களா. எங்கே கொடுத்தீர்கள்? நாட்டு மக்களை ஏமாற்றினீர்கள். இருக்கின்ற நிலத்தை பிடுங்காமல் இருந்தால் மக்கள் பிழைத்து கொள்வார்கள். எங்கேயாவது விலை மதிப்புடைய நிலங்கள் இருந்தால், தி.மு.க.வினர் கண்ணில் பட்டால் போதும், அங்கே ஒரு குடிசை போட்டு, பட்டாவை வாங்கி விடுவார்கள். அப்படிப்பட்ட நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக அம்மா நில அபகரிப்பு தடுப்பு பிரிவு என்ற தனி பிரிவை உருவாக்கினார். அப்படிப்பட்ட அபகரிக்கப்பட்ட நிலத்தையும் மீட்டு கொடுத்த பெருமை அம்மாவை சார்ந்தது.

அண்ணா தி.மு.க.வின் சார்பில் அம்மா என்ன என்ன தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்களோ, அத்தனையும் செய்து காட்டினார். எத்தனையோ பேர் கட்சி நடத்துகிறார்கள். ஆளுங்கட்சியாக வருகிறார்கள். பதவிக்கு வந்த பிறகு, ஆட்சிக்கு வந்த பிறகு, மக்கள் மனதிலே நிலைத்து நிற்கின்றது என்று சொன்னால், அவர் வாழ்ந்த காலத்திலே நாட்டு மக்களுக்கு என்ன நன்மை செய்தார்களோ, அந்த நன்மையின் அடிப்படையிலே மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அப்படி வாழ்ந்து கொண்டு இருக்கின்ற தலைவர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் அம்மா. இன்றைக்கு இந்த தமிழ்நாட்டு மண்ணிலே பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தைக்கும், அம்மா பரிசு பெட்டகத்தை வழங்குகிறது. இந்தியாவிலே எந்த மண்ணிலே கொடுக்கிறார்கள்? அம்மா தொலைநோக்கு பார்வையோடு, ஏழை எளிய தாய்மார்கள் பெற்றெடுக்கும் குழந்தைகள் கூட வாழ்வாங்கு வாழ வேண்டும், சுகாதாரமாக, நலமோடு வளமோடு வாழ வேண்டும் என்பதற்காக இந்த திட்டத்தை கொண்டு வந்தார். இதை காலத்தால் அழிக்க முடியுமா. முடியாது. அப்படிப்பட்ட திட்டம்.

11 அரசு மருத்துவ கல்லூரிகள்

இன்றைக்கு ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கான மருத்துவ காப்பீட்டு தொகையை 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்திய அரசு அண்ணா தி.மு.க. அரசு. ஒரு அரசாங்கம் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக அண்ணா தி.மு.க. அரசு நடைபெற்று வருகிறது.

அதேபோல, 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை ஒரே நேரத்தில் கொண்டு வந்த அரசு அண்ணா தி.மு.க. அரசு, உங்களுடைய ஆட்சி காலத்திலே முடிந்ததா. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்தீர்கள். எத்தனை அரசு மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்தீர்கள்? எய்ம்ஸ் மருத்துவமனையை நாங்கள் தான் பெற்று தந்தோம். அதற்கு பிறகு 11 மாவட்டங்களிலே அரசு மருத்துவக் கல்லூரிகளை பெற்று தந்த பெருமை அம்மா அரசை சாரும். இதன்மூலம், இன்றைக்கு தமிழகத்திலே மிகப் பெரிய வரலாற்றை படைத்திருக்கின்றோம்.

5 புதிய மாவட்டங்கள்

அதேபோல 5 புதிய மாவட்டங்களை உருவாக்கி இருக்கின்றோம். சேலத்தில் கூட புதிதாக 3 தாலுக்களை உருவாக்கி இருக்கின்றோம். இதை எல்லாம் எதற்காக உருவாக்கி இருக்கின்றோம் என்றால் நிர்வாகம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதற்காக உருவாக்கி இருக்கின்றோம். சேலம் மாநகரம் போக்குவரத்து நெரிசல் மிக்க நகரமாக இருந்தது. அம்மா இருக்கின்ற போதே எடுத்துச் சொன்னோம். அம்மா இருக்கின்ற போதே, நம்முடைய ஐந்து ரோட்டில் பிரம்மாண்டமான உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் அந்த உயர்மட்ட பாலம் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.

உயர்மட்ட பாலங்கள்

இரண்டு அடுக்கு மேம்பாலம் உங்கள் ஆட்சி காலத்திலே பார்க்க முடிந்ததா. தி.மு.க. ஆட்சியிலே சேலம் மாவட்டத்திற்கு என்ன செய்தீர்கள். நாங்கள் எவ்வளவு திட்டங்களை கொண்டு வந்திருக்கின்றோம். எண்ணிப் பாருங்கள். திருவாகவுண்டனூரில் உயர்மட்ட பாலம். ஏ.வி.ஆர். ரவுண்டானா ஒரு உயர்மட்ட பாலம். குரங்குசாவடியில் ஒரு உயர்மட்ட பாலம். ஸ்டீல் பிளாண்ட் அருகில் ஒரு உயர்மட்ட பாலம். பாரத் பிளாசா ஓட்டல் அருகில் ஒரு உயர்மட்ட பாலம். நாங்கள் இவ்வளவு பாலங்களை கட்டி கொடுத்திருக்கின்றோம். முள்ளுவாரி கேட், மணல்மேடு, செவ்வாய்பேட்டை ஆகிய இடங்களிலும் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. பாலங்கள் எங்கெங்கு வேண்டும் என்று மக்கள் கேட்கிறார்களோ அங்கெல்லாம் பாலங்கள் கட்டி கொடுத்த அரசு அம்மாவுடைய அரசு. எந்த மாநகரத்தில் இவ்வளவு பாலங்கள் இருக்கின்றன. சொல்லுங்கள் பார்க்கலாம். தி.மு.க. ஆட்சியிலே எந்த பாலத்தையாவது கட்டி கொடுத்தீர்களா. சேலத்தை போக்குவரத்து நெரிசல் இல்லாத நகரமாக உருவாக்க பாடுபட்டீர்களா. சொல்லுங்கள் பார்க்கலாம். கிடையாது.

பஸ்போர்ட்

சேலம் மாமாங்கத்தில் அரபிக் கல்லூரி அருகில் பிரம்மாண்டமான பஸ்போர்ட் வர இருக்கிறது. ஏர்போர்ட் மாதிரி பஸ்போர்ட். தமிழ்நாட்டிலே முதல் பஸ்போர்ட் சேலத்திற்கு வர இருக்கிறது. ஏர்போர்ட் மாதிரி அனைத்து வசதிகளையும் கொண்ட பஸ்போர்ட்டை உருவாக்க இருக்கின்றோம். இந்தியாவிலேயே வேறு எந்த மாநகரத்தையும் விட சேலம் மாநகர் தனித்துவத்துடன் காட்சியளிக்கும்.

பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது, குடிதண்ணீர் பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்கின்றது, சாலை வசதிகள் செய்தி கொடுக்கப்பட்டிருக்கிறது. சேலம் மாவட்டத்தில் நீங்கள் வைத்த பெரும்பாலான கோரிக்கைகளை நாங்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.

அம்மா இருக்கின்றபோதே, பிரம்மாண்டமான 500 படுக்கைகள் கொண்ட நவீன மகப்பேறு மருத்துவமனையை சேலத்திற்கு தந்தார். தி.மு.க. ஆட்சியில் இப்படிப்பட்ட திட்டம் வந்ததா? அந்த மகப்பேறு மருத்துவமனைக்குள்ளேயே ஏழை, எளிய மக்கள் நோய்வாய்ப்பட்டால், அங்கேயே 50 படுக்கைகள் கொண்ட பச்சிளங்குழந்தைகள் சிறப்பு முகாம் வைத்திருக்கிறார்கள். மருத்தவத் துறையில் ஒரு சகாப்தத்தை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். இரண்டு கைகள் இல்லாத ஒருவருக்கு இரண்டு கைகளையும் பொருத்தி அரசு மருத்துவமனையில் வரலாறு படைத்த அரசு அம்மாவின் அரசு. கிராமத்திலிருந்து நகரம் வரை ஏழை, எளிய மக்கள் அங்கேயே சிகிச்சை பெறுவதற்காக ஏராளமான ஆரம்ப சுகாதார நிலையம், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்படுத்தி தங்குதடையில்லாமல் சிகிச்சை அளிப்பதற்கு வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம். தி.மு.க. அரசில் அப்படி இருந்ததா? நேற்று முன்தினம் கூட தூத்துக்குடி மாவட்டத்தில், மருத்துவமனைக் கட்டடம் மற்றும் மருத்துவ சேவையை துவக்கி வைத்தேன். அரசு மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை அளிப்பதற்காக, பல்வேறு உயர்தர கருவிகளை வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

குடிமராமத்துத் திட்டம்

இன்றைக்கு ஸ்டாலின் போகிற இடமெல்லாம் குடிமராமத்துத் திட்டம் சரியில்லை என்று பேசிக் கொண்டிருக்கிறார். தமிழகம் மட்டுமல்ல, இந்திய நாடே பாராட்டிக் கொண்டிருக்கிறது, குடிமராமத்துத் திட்டம் சிறந்த திட்டம். பருவ காலங்களில் பெய்கின்ற மழைநீர் ஒரு சொட்டுகூட வீணாகாமல் ஏரிகள், குளங்களில் நிரப்புவதற்காக கொண்டு வந்த திட்டம். முழுக்க, முழுக்க விவசாயிகள் பங்களிப்போடு இந்தத் திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். கரைகளை பலப்படுத்துவது, ஏரிகளை ஆழப்படுத்துவது, மதகுகளை சரி செய்வது , வரத்து வாய்க்கால்களை சரி செய்வது, இப்படி பல்வேறு பணிகள் செய்யப்பட்டு, மழைநீரை சேமித்து, கோடைக்காலத்தில் நிலத்தடி நீர் உயர்வதற்கும், குடிப்பதற்குத் தேவையான நீர் சேமிப்பதற்காகத் தான் இந்தத் திட்டம்.

மூன்றாண்டுகளில், ரூ.1000 கோடி செலவில் தடுப்பணை கட்டப்படும் என்று அறிவித்தேன். இப்பொழுது ரூ.650 கோடி செலவில் இரண்டாண்டுகளில் பல்வேறு பணிகள் பல்வேறு நிலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்றைக்கு சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கொடுக்கின்ற மனுக்கள் மூலமாக எங்கெங்கெல்லாம் உபரிநீர் கடலில் கலக்கின்றதோ, அங்கேயெல்லாம் தடுப்பணை கட்டி நீரை தேக்கி, நிலத்தடி நீரை உயர்த்துகின்ற சூழ்நிலையை நாங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். உங்களுடைய ஆட்சியில் இது போன்று நடந்ததா?

நீர் மேலாண்மைத் திட்டத்தின் மூலமாக நீரை சரியான முறையில் பயன்படுத்தியதன் விளைவாக, டெல்டா பகுதியில் கடைமடை பகுதி தூர்வாரிய காரணத்தினால், சுமார் 7 லட்சம் ஏக்கர் நிலம் கூடுதலாக பயிரிடப்பட்டு இருக்கிறதென்றால், இன்றைக்கு அம்மாவினுடைய அரசின் நடவடிக்கைதான் காரணம்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *