சிறுகதை

கொஞ்சம் மைனஸ் ; நிறைய பிளஸ் | முகில் தினகரன்

காலை ஏழு மணி.கோவையில் வொர்க்கிங் உமன்ஸ் ஹாஸ்டலில் தங்கிப் பணி புரியும் தன் மகள் ஜோதி, அன்று ஊருக்கு வருவதாக நேற்றே தகவல் சொல்லியிருந்தாள். அவளை அழைத்துச் செல்ல பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தார் வெள்ளிங்கிரி. அப்போது பஸ் ஸடாண்டிற்குள் நுழைந்து திரும்பி நின்றது ஒரு கோவை பஸ். பெரிய பெரிய சூட்கேஸ்களையும் இரவுப் பயணக் களைப்பையும் முதுகில் சுமந்து கொண்டு ஜனங்கள் ஒவ்வொருவராய் இறங்க ஜோதியைத் தேடினார் வெள்ளிங்கிரி.

“என்னது..கிட்டதட்ட எல்லோருமே இறங்கியாச்சு…இவளைக் காணோம்?” பதட்டமானார். அவர் பொறுமையை முற்றிலுமாய்ச் சோதித்து விட்டு, இறுதியாய் இறங்கினாள் அவள்.

கூட்டத்தைத் தள்ளிக் கொண்டு, அவளை நெருங்கியவர், “ஏம்மா…இத்தனை நேரம்?..பஸ் லேட்டா?” கேட்டார்.

“ஆமாம்ப்பா..வர்ற வழில ஒரு ஆக்ஸிடெண்ட்…டிராபிக் ஜாம்…அதான்!”

“சரி…சரி…வா!…பைக்கை பஸ் ஸ்டாண்டுக்கு வெளியே நிறுத்தியிருக்கிறேன்!…அப்படியே போய்க்கலாம்!” சொல்லியவாறே அவர் முன் நடக்க பின் தொடர்ந்தாள் ஜோதி.

காலை பதினோரு மணி வாக்கில் ரிலாக்ஸாக அமர்ந்து டி.வி.பார்த்துக் கொண்டிருந்த ஜோதியை அவள் தாயார் லட்சுமி கேட்டாள், “என்னடி திடீர்னு கிளம்பி வந்திருக்கே?.. ஆபீஸ் லீவா?”

“ப்ச்…லீவெல்லாம் ஒண்ணுமில்லை…நாந்தான் லீவு போட்டுட்டு வந்திட்டேன்”

“ஏன்…என்னாச்சு?..உடம்பு கிடம்பு சரியில்லையா?” பதறிப் போனாள் லட்சுமி.

“அய்யோ..உடம்புக்கெல்லாம் ஒண்ணுமில்லை…மனசுக்குப் பிடிக்கலை…அதான் வந்துட்டேன்!” விட்டேத்தியாகச் சொன்னாள் ஜோதி.

“என்னது மனசுக்குப் பிடிக்கலையா?….எது பிடிக்கலை?…வேலையா?…ஹாஸ்டலா?…இல்லை அந்த ஊரேவா?…எது பிடிக்கலை சொல்லு!”

“ம்…என் கூட தங்கியிருக்கற அறைத் தோழிகளைப் பிடிக்கலை!…என் பக்கத்து ரூம் லேடீஸ்களைப் பிடிக்கலை!…அந்த ஹாஸ்டல் வார்டன் குண்டுப் பூசணிக்காயைப் பிடிக்கலை!….போதுமா?”

சற்றுத் தள்ளி அமர்ந்து இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த வெள்ளிங்கிரி எழுந்து மகளிடம் வந்தார், “ஏம்மா…உன் கூட ரூம்ல ரெண்டு பேர்தானே தங்கியிருக்காங்க?…ஒருத்தி,…சேலம்!…இன்னொருத்தி?”

“சென்னை” என்றாள் ஜோதி.

“அந்த ரெண்டு பேரையுமே அன்னிக்கு உன்னைய அந்த ஹாஸ்டல்ல சேர்த்து விட வந்தப்ப நான் பார்த்துப் பேசியிருக்கேனே..நல்லவங்களாத்தானே தெரிஞ்சாங்க!”

“க்கும்…மேலோட்டமா பார்த்தா அப்படித்தான் தெரிவாங்க…டீப்பா பழகிப் பார்த்தாத்தான் சுயரூபம் தெரியும்!”

“என்னடி…பெரிய சுயரூபத்தைக் கண்டுட்டே?” என்றாள் லட்சுமி வெடுக்கென்று.

“ம்மா..அந்த சேலத்துக்காரி சுதா இருக்காளே!…யப்பா பெரிய உலக மகா சுத்தக்காரி!…பத்து நிமிஷத்துக்கு ஒரு தரம் மூஞ்சியையும் கை கால்களையும் கழுவிக்கிட்டே இருப்பா!…தினமும் துணிமணிகளை துவைப்பா…தினமும் பெட்ஷீட் தலையணை உறைகளைத் துவைப்பா!…அதேமாதிரி அவளோட பொருட்களையெல்லாம் பளிச்சுன்னு துடைச்சு மத்தவங்க தொடாத மாதிரி…தனியா வெச்சுக்குவா!…ரூம்ல சின்னதா…லேசா குப்பை விழுந்துட்டாப் போதும் சும்மா “தாம்…தூம்”னு குதிப்பா!…என்னமோ இவ பெரிய அரண்மனைல வாழ்ற மகாராணி மாதிரியும்…மத்தவங்கெல்லாம் அசுத்தத்திலிருந்து வந்தவங்க மாதிரியும் நெனச்சுக்கிட்டு எங்களையெல்லாம் ஏளனமாப் பாப்பா!…அதிலும் நான் வேற கொஞ்சம் கருப்பா…என்னைய சுத்தமா ஒதுக்கியே வெச்சுட்டா!”

“ப்ச்…இவ்வளவுதானே?…எதிலும் சுத்தமா இருக்கணும்னு அவ நினைக்கறா…அது தப்பில்லையே”

“அதுக்காக மத்தவங்களை இளக்காரமா நினைக்கக் கூடாதல்ல?”

லட்சுமி குறுஞ்சிரிப்புடன் அமைதி காக்க

ஜோதி தொடர்ந்தாள்.

“இவ இப்படியா?…அந்த சென்னைக்காரி ஐஸ்வர்யா இருக்காளே…அவ இவளுக்கும் மேலே!…ஏதோ ஒரு கம்பெனில சீனியர் அட்மினிஸ்ட்ரேடிவ் மேனேஜரா இருக்காளாம்…அதுக்காக அந்த அதிகாரத்தையெல்லாம் கொண்டு வந்து இங்க ஹாஸ்டல்லேயுமா காட்டுவாங்க?….எப்பப் பார்த்தாலும் எல்லாரையும் அதிகாரம் பண்றதே அவ வேலை!… என்னமோ எல்லாரும் இவளுக்குக் கீழே வேலை பார்க்கற அசிஸ்டெண்டுக மாதிரி “இதைச் செய்யாதே!…அதைச் செய்யாதே!” …… “இதை இங்க வை!…அதை அங்க வை!” ன்னு அவ பண்ற அழிச்சாட்டியம் கொஞ்ச நஞ்சமல்ல!…” இரு உள்ளங்கைகளையும் இரு கன்னங்களில் வைத்து அபிநயித்துக் காட்டினாள் ஜோதி.

வெறுத்துப் போன லட்சுமி, “அவ்வளவுதானா…இன்னும் இருக்கா?” கேட்டாள்.

“அப்புறம் பக்கத்து ரூம் பொண்ணுக!….அதுகளைப் பொண்ணுகள்னு சொல்றதை விட ஆம்பளைகள்!ன்னு சொல்லலாம்!…அந்த அளவுக்கு தெனாவெட்டு…திமிரு…அடங்காத்தனம்!…ஹூம்!”

“ஹாஸ்டல் வார்டனை விட்டுட்டே!” லட்சுமி எடுத்துக் கொடுத்தாள்.

“ஆங்…கரெக்ட்..கரெக்ட்!…அந்த வார்டன் குண்டுப் பூசணிக்காய்க்கு பெரிய சரோஜா தேவின்னு நெனப்பு…எப்பப் பார்த்தாலும் மேக்கப்…மேக்கப்!…அதே மாதிரி தான் ஸ்டிரிக்டா இருக்கோம்னு காண்பிக்கறதுக்காக அது பண்ற கூத்துக்களை சொல்லிட்டே போகலாம்!”

“மொத்தத்துல அங்க யாருமே சரியில்லை…அப்படித்தானே?”

“அதனாலதானே கிளம்பியே வந்துட்டேன்!”

தலையை மேலும் கீழும் ஆட்டியபடி அங்கிருந்து நகர்ந்த லட்சுமி. வாசலில் யாரோ அழைக்கும் குரல் கேட்க சென்று பார்த்தாள். பக்கத்து வீட்டு ஆடிட்டர் மனைவி வனஜா.

அவளைப் பார்த்ததும் பற்றிக் கொண்டு வந்தது ஜோதிக்கு. சென்ற முறை அவள் இங்கு வந்திருந்த போது அம்மாவுக்கும் அந்த வனஜாவிற்கும் நடந்த காரசாரமான சண்டையை தெருவே வேடிக்கை பார்த்தது. எதையும் தவறாகப் புரிந்து கொண்டு உடனே படு மூர்க்கமாக சண்டை போடும் அவசரக் குடுக்கை குணம் அந்த வனஜாவிற்கு. அதிலும் சண்டை போடும் போது அவள் பேசும் வார்த்தைகளையும் அவள் காட்டும் அசிங்க அபிநயங்களையும் சென்சார் போர்டு அதிகாரிகள் பார்த்தால் யோசிக்காமல் பட் பண்ணி பத்து “ஏ”சர்ட்டிபிகேட் குடுப்பார்கள். அவ்வளவு ஆபாசம். தெறிக்கும்.

“இவள் எதுக்கு மறுபடியும் நம்ம வீட்டுக்கு வர்றா?” யோசித்த ஜோதிக்கு இன்னொரு ஆச்சரியமாய் அந்த வனஜாவும் அவள் தாய் லட்சுமியும் வெகு சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தனர்.

“ஹூம்!…இதென்ன கண்ராவி?…அன்னிக்கு அப்படி ஊரே பார்க்க அடிச்சுக்கிட்டு…இன்னிக்கு கொஞ்சிக்கறாங்க!…ச்சை…என்ன ஜென்மங்களோ?”

“அடடே…ஜோதி வந்திருக்காளா?” அங்கிருந்தே அந்த வனஜா கேட்டாள்.

“ஆமாம் …இன்னிக்குக் காலைலதான் வந்தா!” என்றாள் லட்சுமி.

“ஏனோ கொஞ்சம் இளைச்ச மாதிரித் தெரியறாளே?”

“ஹாஸ்டல் சாப்பாட்டுல என்ன சத்து இருக்கப் போகுது?” இது லட்சுமி.

சிறிது நேரத்தில் அந்த வனஜா சென்றதும் ஜோதி தாயிடம் வந்து பொரிந்து தள்ளினாள். அதற்கு வெறும் புன்னகை மட்டுமே பதிலாய்க் கிடைத்தது.

மாலை நான்கு மணியிருக்கும் வீட்டு வாசலில் ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதிலிருந்து இரண்டு பெண்மணிகளும் ஒரு நடுத்தர வயது ஆணும் இறங்கி வந்தனர். அப்போதுதான், சாப்பாட்டுக் கடையை முடித்து விட்டு ஹால் தரையில் ஃபேனுக்குக் கீழ் படுத்துக் கிடந்த லட்சுமியும் ஜோதியும் அவர்கள் வருவதைக் கண்டு அவசர அவசரமாக எழுந்து நின்றனர்.

“என்னம்மா லட்சுமி…மதிய நேரத் தூக்கத்தைக் கெடுத்துட்டேனே?” கேட்டபடியே உள்ளே வந்த நபரை அப்போதுதான் அடையாளம் தெரிந்தது ஜோதிக்கு.

“அடப்பாவி!…இவனா?” என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டு வெளியில் “ஹி…ஹி” என்று ஃபார்மாலிட்டிக்குச் சிரித்து வைத்தாள்.

“இது ஜோதிதானே? நல்லா வளர்ந்துட்டா!…எங்க வீட்டுல நீங்க குடியிருந்தப்ப சின்னப் பொண்ணா இருந்தா” அந்த நபருடன் வந்திருந்த பெண் லட்சுமியைப் பார்த்துச் சொல்ல,

“ஆச்சே…கிட்டத்தட்ட பதினஞ்சு வருஷம்!”

வந்தவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த தங்கள் மகளின் திருமண அழைப்பிதழை லட்சுமியிடம் தந்து விட்டு “கண்டிப்பா எல்லாரும் குடும்பத்தோட ரெண்டு நாளைக்கு முன்னாடியே வந்துடணும்!…” என்று சொல்லி விட்டுச் சென்றதும் ஜோதி கேட்டாள். “ஏம்மா…நான் சின்னப் பொண்ணா இருந்தப்ப இவங்க வீட்டுலதானே குடியிருந்தோம்?”

“ஆமாம்!…கிட்டத்தட்ட பதிமூணு…பதினாலு வருஷம் இருந்தோம்!”

“அப்புறம் என்னாச்சு?”

“ஒரு சின்னப் பிரச்சனைல சண்டை வந்து இந்த ஆளு ஒரே நாள்ல நம்மைக் காலி பண்ணிட்டுப் போகச் சொல்லிட்டான்!”

“சரி…அப்ப அப்படி நடந்துக்கிட்ட மனுஷன் …இப்ப எந்த மூஞ்சிய வெச்சுக்கிட்டு இங்க வந்து இன்விடேஷன் குடுத்திட்டுப் போறான்!…அதுவும் ரெண்டு நாளைக்கு முன்னாடியே வரணுமாம்!…மானங்கெட்ட ராஸ்கல்!” திட்டித் தீர்த்தாள்.

“ஜோதிம்மா…ஒரு நிமிஷம்…ஒரு நிமிஷம்!..இந்த உலகத்துல நீ கத்துக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு!….எல்லா மனுஷங்க கிட்டேயும் பிளஸ் பாயிண்ட்டுகளும் இருக்கும்!…மைனஸ் பாயிண்ட்டுகளும் இருக்கும்!…நாம அவங்க கிட்ட இருக்கற பிளஸ் பாயிண்ட்டுகளை எடுத்துகணும்!…மைனஸ் பாயிண்ட்டுகளை டைஜஸ்ட் பண்ணிக்கணும்!…அதுதான் வாழ்க்கையோட தத்துவம்!…புரிஞ்சுதா?”

அவள் புரியாமல் விழிக்க,

“இங்க வந்திட்டுப் போனாளே வனஜா…அவ ஒரு சண்டைக்காரி…பஜாரி…யோசிக்காம வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசறவ!…அப்படிங்கறது அவளோட மைனஸ் பாயிண்ட்ஸ்!…அதே நேரம் அவகிட்ட இருக்கற பிளஸ் பாயிண்ட் என்னென்ன தெரியுமா?…ஒருத்தர் கூடப் பழகுனா முழு மனசோட..உண்மையான பாசத்தோட பழகுவா!…பாசாங்கு தெரியாது!…பாவ்லா தெரியாது!…எத்தனை சண்டை போட்டாலும் உடனே மறந்துட்டு சகஜமா வந்து பழகற மனசுள்ளவ!…மத்தவங்க மாதிரி அதெயெல்லாம் வன்மமா வெச்சுக்கிட்டு பழி தீர்க்கற ஆள் இல்லை!…ஒரு மூணு நாளைக்கு சேர்ந்தாப்புல என்னைப் பார்க்கலேன்னா உடனே வீடு தேடி வந்துடுவா!…வந்து, “உடம்பு கிடம்பு சரியில்லையோன்னு பயந்துட்டேன்!”னு உண்மையான அக்கறையோட சொல்லுவா!”

யோசனையுடன் தாயையே பார்த்தாள் ஜோதி.

“அதே மாதிரிதான் பழைய ஹவுஸ் ஓனர்!…எந்தப் பிரச்சினைக்காக அவர் நம்மைத் துரத்தினாரோ…அந்தப் பிரச்சினையின் உண்மையான முகத்தைத் தெரிந்து கொண்டதும்…அதில் நம்மோட தப்பு எதுவுமில்லைன்னு தெரிஞ்சதும் அவ்வளவு பெரிய மனுஷன்….வயசுல சின்னவளான என் கிட்ட வந்து வாயார மன்னிப்பு கேட்டாருடி!…ஒண்ணு தெரிஞ்சுக்கடி…மன்னிப்புக் கேட்கிற மனசு எல்லோருக்கும் வந்துடாதுடி!…”

“…………………………….”

“அப்புறம் இதுல ஒரு முக்கியமான விஷயம் இருக்கு…ஒரு சின்னப் பிரச்சினைக்காக அவர் அன்னிக்கு நம்மைத் துரத்தி விட்டதுதான்…உங்கப்பாவை சொந்த வீடு கட்டச் சொல்லித் தூண்டி விட்டுச்சு!…கட்டியும் முடிச்சார்!…இல்லாட்டி இன்னும் அதே வீட்டுலதான் இருந்திருப்போம்!”

ஜோதி ஏதோ சொல்ல வாயெடுக்க, அவளைக் கையமர்த்திய லட்சுமி, “இதே மாதிரிதான் உன் ரூம் மேட்ஸ்க கிட்டேயும் பக்கத்து ரூம் பொண்ணுக கிட்டேயும் ஏன் உங்க ஹாஸ்டல் வார்டன் கிட்டேயும் கூட நிச்சயம் நிறைய பிளஸ் பாயிண்ட்டுகள் இருக்கும்!..உன் கண்கள் இப்போது அவங்களோட மைனஸ் பாயிஸ்ட்டுகளை மட்டும்தான் பார்த்திருக்கு!…அதனால அவங்களோட் பிளஸ் பாயிண்ட்டுகளைத் தேடிக் கண்டுபிடி!…மேலோட்டமாத் தெரிஞ்ச மைனஸ் பாயிண்ட்டுகளை மாத்திரம் பார்த்துட்டு நீ கிளம்பி வந்தது உன் தப்பு!…போ..போய்க் கண்டுபிடி!…அந்த பிளஸ் பாயிண்ட்டுகளைக் கண்டு பிடி!…உன்னை இங்க வர வெச்ச மைனஸ் பாயிண்ட்டுகளை டைஜஸ்ட் பண்ணு!”

தெளிவு பிறந்தது.

அன்று இரவு பஸ்ஸில் அமர்ந்திருந்தாள் ஜோதி கோயமுத்தூர் ஹாஸ்டலுக்குத் திரும்பிச் செல்ல…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *