செய்திகள்

கொச்சியில் சரக்கு கப்பல் கவிழ்ந்து 3 கன்டெய்னர்களில் ரசாயன கசிவு அபாயம்

Makkal Kural Official

கொச்சி, மே.27-–

கொச்சி துறைமுகம் அருகே சரக்கு கப்பல் கவிழ்ந்து, ரசாயன பொருட்கள் அடங்கிய கன்டெய்னர்கள் கரை ஒதுங்கியுள்ளன. அதில் இருந்து கசிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், மீட்பு பணிக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் விரைந்து உள்ளன.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சிக்கு கடலில் சென்று கொண்டிருந்த லைபீரியா நாட்டு எல்ஸா-3 என்ற சரக்கு கப்பல், கொச்சி துறைமுகம் அருகே கடலில் கவிழ்ந்தது. அப்போது கப்பலில் இருந்த அனைத்து கன்டெய்னர்களும் கடலுக்குள் விழுந்தன.

முன்னதாக கப்பலில் இருந்த 21 பேர் இந்திய கடலோர காவல்படை யினராலும், 3 பேர் இந்திய கடற்படையை சேர்ந்த சுஜாதா என்ற கப்பல் மூலமும் மீட்கப்பட்டனர்.

13 கன்டெய்னர்களில் ஜவுளி, பஞ்சு மற்றும் ஆபத்தை விளைவிக்கும் ரசாயன பொருட்கள் உள்ளன. குறிப்பாக கால்சியம் கார்பைடு என்ற ரசாயனம் இருந்தது. கப்பலின் டேங்குகளில் 84.44 டன் டீசல், 367 டன் பர்னஸ் ஆயில் இருந்தது.

கடலில் கவிழ்ந்த கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டு உள்ளது. கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து விழுந்த கன்டெய்னர்களை மீட்கும் பணிகள் கடலோர பாதுகாப்பு படை மூலம் தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்தநிலையில் நேற்று கொல்லம் அருகே உள்ள சக்திகுளகரா கடலோர பகுதியில் ஒரு கன்டெய்னர் கரை ஒதுங்கியது. ஆலப்புழை வலியதுரா கடற்கரை மற்றும் தாராயில் கடவு கடற்கரை பகுதியில் தலா ஒரு கன்டெய்னர் கரை ஒதுங்கின.

ரசாயன கன்டெய்னர்களில் கசிவு

ரசாயன கன்டெய்னர்களால் கடல்வாழ் உயிரினங்களுக்கும், பொதுமக்களுக்கும் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, கரை ஒதுங்கிய கன்டெய்னர்கள் அருகே செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கப்பல் விபத்து நடந்துள்ள 4 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எண்ணெய் படலம் பரவி வருவதால், இதனை கட்டுப்படுத்துவதில் கடலோர காவல்படை மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

அகச்சிவப்பு கேமராக்களை பயன்படுத்தி எண்ணெய் கசிவின் அளவை கணக்கிட்டு, அதனை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மாசுகளை அகற்றும் கருவிகளுடன் ஒரு விமானம் சென்னையில் இருந்து கொச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. எண்ணெய் கசிவை கண்காணித்து தடுக்க மும்பையில் இருந்து ஒரு கப்பலை கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

கப்பலில் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவு காரணமாக கேரள மாநிலத்தில் 9 மாவட்ட கடலோர பகுதிகளில் ஆபத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே திருவனந்தபுரத்தில் உள்ள மண்டல சுங்கத்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூயிருப்பதாவது:-

கால்சியம் கார்பைடு உள்ளிட்ட அபாயகரமான மற்றும் ஆபத்தான பொருட்கள் 13 கன்டெய்னர்களில் இருந்துள்ளது. இது எரியக்கூடிய அசிட்டிலின் வாயுவை வெளியிடும். தண்ணீருடன் வினைபுரியும் போது அதிகமான வெப்பத்தை உமிழக்கூடிய தன்மை கொண்டது. கால்சியம் கார்பைடு, கால்சியம் ஹைட்ராக்சைடாக உருமாறும்போது, கடல்வாழ் உயிரினங்களை பாதிக்கும் நிலையையும் ஏற்படுத்தும்.

இந்த கன்டெய்னர்களை யாரும் கடலோர காவல்படைக்கு தெரியாமல் அகற்றக்கூடாது. அருகே செல்லக்கூடாது. முறைகேடாக திருடக்கூடாது. இதனை கண்காணிக்க கடலோர கண்காணிப்பு பிரிவினர் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதனிடையே கதிர்வீச்சு மற்றும் ரசாயனத்தை கண்டறிந்து அகற்ற தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் கொச்சி, கொல்லத்திற்கு விரைந்துள்ளன. கன்டெய்னர்களை மீட்கவும், ரசாயன பாதிப்பை தடுக்கவும் முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *