செய்திகள்

கொச்சியிலிருந்து 14வது நாள் நடைப்பயணம்: ராகுல் காந்திக்கு வழிநெடுக உற்சாக வரவேற்பு

கொச்சி, செப். 21–

கேரள மாநிலம், கொச்சியில் தனது 14வது நாள் நடைப்பயணத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று மேற்கொண்டார். அப்போது வழிநெடுக மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மத்தியில் ஆளும் பாரதீய ஜனதாவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் ‘பாரத் ஜோடோ’ நடைப்பயணத்தை கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை கடந்த 7ந்தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. தொடங்கினார். செல்லும் இடங்களில் எல்லாம் ராகுல் காந்தி மக்களைச் சந்தித்து வருகிறார். நேற்று 13வது நாளாக கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் பாதயாத்திரை சென்றார்.

இந்த நிலையில் 14வது நாளாக கேரள மாநிலம் கொச்சி மாவட்டம் கும்பலம் சுங்கச்சாவடி அருகேவுள்ள நாராயண குரு படத்திற்கு காலை 6.25 மணியளவில் மரியாதை செலுத்திய பிறகு இன்றைய நடைப்பயணத்தை ராகுல் காந்தி துவக்கினார். கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் நடைப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தியை வழிநெடுக கேரள மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். இன்றைய பயணத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நடைபயணத்தின் போது சிறுவர்களிடம் கொஞ்சி விளையாடுவது, தேநீர் கடைகளில் சாமானிய மக்களுடன் அமர்ந்து தேநீர் அருந்துவது உள்ளிட்ட பல சுவாரசிய சம்பவங்களும் அரங்கேறியது.

காலை 11.30 மணிக்கு எடப்பள்ளியில் ஓய்வெடுக்கும் நடைப்பயண குழுவினர், மீண்டும் மாலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்படுகின்றனர். இரவு 7 மணிக்கு அலுவாவில் ராகுல் காந்தி இன்றைய பயணத்தை முடிக்கிறார்.

ராகுல் காந்தி கேரளாவில் 18 நாட்களுக்கு நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார். கேரளாவில் நடைபயணம் தொடங்கி 10 நாட்கள் ஆகிறது. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,600 கி.மீ. தூரம், மொத்தம் 150 நாள்கள் நடைப்பயணம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *