சிறுகதை

கைமாறு | ராஜா செல்லமுத்து

Spread the love

‘ஒரு செயலிலிருந்து தான் – இன்னொரு செயல் உருவாகிறது.’

அதிகாலையிலேயே அனல் பறந்து கொண்டிருந்தது. அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெக்கை இன்னும் விலகலயே. எப்பதான் ரெண்டு சொட்டு மழ விழும்னு தெரியல.

“ப்பூ…. ப்பூ… என ஊதிக்கொண்டே டூவீலரை ஒட்டிப் போய்க் கொண்டிருந்தான் கோவிந்த்.

அடிக்கும் வேகத்திற்கு ஏற்ப அடிக்கும் காற்று வெப்பத்தை கொட்டித் தீர்த்தது.

வரும் பாதைகளெல்லாம் வாகனங்களின் வரிசை, வரிசை கட்டி நின்றது.

ஆகா, டிராபிக் சிக்னல் போல என்னது நூத்தி இருபதா? இந்த வெயில்ல ரெண்டு நிமிஷம் போட்டுருக்கானுக கோவிந்தின் கோபம் இன்னும் கொப்பளித்து.

“அடேய்… சீக்கிரம் போடுங்கடா என்ற கோவிந்த் தன் டூவீலரின் வேகத்தைக் குறைத்து, அதை முழுவதுமாக ஆப் செய்தான். நூற்றி இருபதிலிருந்து ஒவ்வொன்றாய்க் குறைந்து கொண்டே வந்தது.

“ஐயா…. ஐயா” என்று ஒருவர் பிச்சை கேட்டுக் கொண்டு வர, ஆகா இதுல, இது வேறயா? என்ற கோவிந்த், அவர் வரும் திசையையே பார்த்துக்கொண்டிருந்தான்.

நம்ம கிட்டயும் வந்திருவாரோ? அவனின் எரிச்சல் இன்னும் நீண்டு கொண்டே சென்றது.

“ஐயா…. ஐய்யா என்றவர் ஒவ்வொருவராக வாங்கியபடியே வந்து கொண்டு இருந்தார். தாடி, கிழிந்த அழுக்கு சட்டை என அவரின் உருவமே அவரின் வருமையை அப்படியே உரித்து காட்டியது.

ஒருசிலர் எதுவும் பேசாமல் பணம் கொடுத்தனர். ஒரு சிலர் எரிச்சல் கொண்டு எட்டி தள்ளினர்.

ஏன இவங்களெல்லாம் இப்படி இருக்காங்க. இவங்களுக்கு வேற வேலையே இல்லையா? எப்ப பாத்தாலும் பணம் காசு, பிச்சை, ச்சே ரொம்ப மோசம்ங்க. இதுக்கு வேற வழியே இல்லையா? என்ற கோவிந்த் சலித்தபடியே நின்றிருந்தான்.

நம்ம கிட்ட வந்திருவாரோ? என்ற பயத்தின் பிடியிலேயே நின்று கொண்டிந்தவளிடம் அவர் வர இன்னும் இரண்டு மூன்றுவண்டிகளே இருந்தன.

அவரு நம்ம கிட்ட வர்றதுக்குள்ள சிக்னல் விழுந்திரணும் என்று மனதிற்குள்ளேயே பிரார்த்தனை செய்தான்.

ஐயா…. ஐயா …. என்று சொல்லிக் கொண்டே வந்தவர், கோவிந்திடம் வந்து சேர்ந்தார்.

“ஐயா … ஐயா என்றவரை அலட்சியமாகப் பார்த்தான் கோவிந்த்

“ஐயா ஐயா…. என்றவர் கோவிந்தின் முகம் பார்க்க, அவன் வேறு பக்கம் திரும்பினான்.

தம்பி, தம்பி என்று மறுபடியும் ஈரம் ததும்பப் பேசியவரை அவன் ஒரு மாதிரியாகப் பார்த்தான்.

“காது இல்ல என்பது போல் அவரை இளக்காரமாகப் பார்த்து ஒதுக்கித் தள்ளினான். கோவிந்த் தம்பி, தம்பி என்று இரண்டு மூன்று முறை கேட்டவர் கோவிந்தை விட்டு சிறிது தூரம் சென்று அடுத்தடுத்த வாகனங்களுக்குச் சென்றார்.

இவங்களுக்கு வேற வேலையே இல்லையா? தினமும் பிச்சை போட்டே ஒண்ணுல்லாம போயிருவோம் போல என்று முணங்கியவனை யாரோ கூப்பிடுவது போல் தோன்ற

“தம்பி, தம்பி…., என்ற வார்த்தையைக் கேட்டு திரும்பினான் கோவிந்த்.

பஸ்ஸிலிருந்த ஒரு பெண், ‘‘இந்தக் காசு அந்தப் பெரியவர் கிட்ட குடுங்க என்று அந்தப் பெண் பணத்தைக் கொடுக்க,

அதை வாங்கியவன், ஐயா ஹலோ,…. ஐயா, இங்க வாங்க. இந்தாங்க பணம்; இத நான் குடுக்கல; அந்த அம்மா குடுத்தாங்க என்று பஸ்ஸிலிருந்த ஒரு அம்மாவைக் காட்ட அந்தப் பெரியவர் பணம் கொடுத்த பெண்ணைப் பார்த்து கும்பட்டார்.

“நீங்க நல்லாயிருக்கனும்” என்று வாய்நிறைய வாழ்த்தினார்.

இந்த வார்த்தை கோவிந்துக்குள் என்னமோ செய்தது.

அந்த பொண்ணு நல்லாயிருக்கணுமா? அப்ப நாம? என்று கோவிந்த் சிந்திக்கும் போது சிக்னல் மாறியது.

“ச்சே…. இந்த மாதிரி ஆளுகளுக்கு ஒரு ரூபா ரெண்டு ரூபா குடுக்கிறதுனால நாம கொறஞ்சு போக மாட்டோம்” என்று நினைத்துக் கொண்டிருந்தவன் அடுத்த சிக்னல்ல கண்டிப்பா யாருக்காவது உதவி செஞ்சே ஆகணும் என்ற முடிவோடு டூவிலரை ஓட்டிக்கொண்டே சென்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *