சிறுகதை

கைப்பக்குவம் ..! – ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

“ரேவதி நீ சமைக்கிறது ரொம்ப நல்லா இருக்கு .உன் கைப்பக்குவம் சூப்பர் . ரேவதி நீ துணி துவைச்சு போட்டா ரொம்ப சுத்தமா இருக்குது. நல்லா அயர்ன் பண்ணித் தா. நீ வீட்ட கிளீன் பண்ணா அவ்வளவு நேர்த்தியா இருக்கு “

என்று அவளைப் பற்றிச் சொல்லாத ஆட்கள் இல்லை. எல்லாம் அவள் கைராசி.

“ரேவதி பாப்பாவுக்கு டிபன் குடு”

“இந்தா வைக்கிறேன் அம்மா “

“ரேவதி மதியம் பிரியாணி பண்ணி வை “

“சரிங்கம்மா “

“ரேவதி பாப்பாவுக்கு லஞ்ச் கட்டிக் குடு”

“இந்தா பண்ணிர்றேம்மா”

இப்படியாய் ரேவதி வேலை செய்யும் எல்லா வீடுகளிலும் ஆர்டர் பறக்கும். அத்தனையும் சிரித்துக் கொண்டே சலிக்காமல் செய்வாள் ரேவதி.

ஒவ்வொரு நாளும் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து விட வேண்டும். துணி துவைக்க வேண்டும். பாத்திரம் துலக்க வேண்டும் . சாப்பாடு சமைக்க வேண்டும். பின் ஏழு மணிக்குச் சென்று இன்னொரு வீட்டில் துணி துவைக்க வேண்டும். பாத்திரம் துலக்க வேண்டும். சாப்பாடு சமைக்க வேண்டும் .பின் எட்டு மணிக்குச் சென்று இன்னொரு வீட்டில் துணி துவைக்க வேண்டும். பாத்திரம் துலக்க வேண்டும் .ஒன்பது மணி, பத்து மணிக்கு என்று ஒவ்வொரு வீடாகச் சென்று சமைத்து விட்டுத் ரேவதி வீட்டுக்கு வரும்போது மதியம் ஆகி விடும். அதற்குள் குழந்தைகள் கிளம்பிப் பள்ளிக்குச் சென்றிருப்பார்கள். ஒரு சில நாட்களில் கணவன் பாலா வீட்டிலிருப்பான். அன்று வீட்டிலிருந்தான் பாலா. எல்லா வீடுகளிலும் வேலை முடித்து வீட்டிற்கு வந்தாள் ரேவதி.

என்ன வேல முடிஞ்சதா?

‘ ம் “

அவள் சொல்லும் பாேதே அவள் உதட்டில் ஈரம் வற்றியிருக்கும்.

“இன்னைக்கு என்னென்ன சமச்ச “

கணவன் பாலா கேட்க

ஒரு வீட்டுல இட்லி, தோசை

ஒரு வீட்டுல பொங்கல் , இட்லி

ஒரு வீட்டுல பூரி, வடை

இன்னொரு வீட்டுல மதியத்திற்கு பிரியாணி

என்று அடுக்கிக் கொண்டே போனாள் , ரேவதி

“ம்”

என்று எச்சில் ஊறியபடியே கேட்டான் ரேவதியின் கணவன்.

பிள்ளைங்க சாப்பிட்டாங்களா ?

“ம் “

என்ற ஒற்றை வார்த்தையை மட்டுமே உதடு திறக்காமல் சொன்னான் பாலா.

அத்தனை வீட்டிலும் சமைத்துக் கொடுத்துவிட்டு , இப்படியாக ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பாேது அவள் பிள்ளைகளைப் பார்த்ததும் இல்லை.

“அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள்? எதைச் சாப்பிடுகிறார்கள் என்று ரேவதிக்குத் தெரியவே இல்லை.

பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு உணவு சமைத்துக் கொடுத்து விட்டதில்லை. என்ன செய்ய ? இந்த வாழ்க்கை நமக்கு இப்படி வாய்த் திருக்கிறது ? என்று தினமும் புலம்புவாள் ரேவதி.

எப்போதும் பாேல அடுப்படிக்குச் சென்று, தன் குழந்தைகள் என்ன சாப்பிட்டார்கள் ? எதைச் சாப்பிட்டார்கள்?

என்று சோற்றுப் பானையைத் திறந்து பார்த்தாள்.

நேற்றுச் சமைத்த சாப்பாட்டில் தண்ணீர் விட்டு ஊறிக் கிடந்தது.

அதைப் பார்த்த அவள் கண்கள் இரண்டிலும் கண்ணீர் நிறைந்து வழிந்தன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *