சிறுகதை

கைதி – ராஜா செல்லமுத்து

தொற்று காலம் என்பதால் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது. வீட்டுக்குள்ளே இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை விதித்திருந்தது அரசாங்கம். அதன்படியே எல்லோரும் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருந்தார்கள். சிறு தொற்று ஏற்பட்டிருந்தால் கூட அந்த ஏரியாவையே முடக்கும் அளவிற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்திருந்தது.

வெளியில் செல்ல வேண்டுமென்றால் பாதுகாப்பிற்கு நின்று கொண்டிருக்கும் காவல் துறையினரின் அனுமதி பெற்று வெளியே சென்று தனக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர வேண்டும். இதுதான் இந்தத் தொற்றுக் காலத்தில் நியதியாக இருந்தது.

ஓர் அமாவாசை இரவு தனி வீட்டில் தாத்தா, பேரன், பேத்தி என்று மூன்று பேர் மட்டும் இருந்தார்கள். பிள்ளைகளின் அப்பா அம்மாக்கள் வெளிநாட்டில் இருக்க குழந்தைகளின் படிப்பிற்காக தாத்தா வீட்டில் இருந்தார்.

தொற்று காலம் என்பதால் வீட்டை விட்டு யாரும் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருந்தனர்.

அந்த அமாவாசை இரவு தாத்தா, பேரன், பேத்தி மூவரும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது வீட்டிற்கு யாரோ வருவது போல் தெரிந்தது. மொட்டை மாடியில் ஏறிய ஜெயக்குமார் படி வழியே கீழே வந்தான். அவன் ஒரு ஜன்னல் வழியாகப் பார்த்தான். தாத்தா குமாரப்பாவிற்கு பயம் தொற்றிக் கொண்டது.

யார் இவன் எதற்காக இங்கு வருகிறான்? என்று அவர் உற்று நோக்கினார்.

உள்ளே வந்த ஜெயக்குமார் எதையும் கேட்காமல் பால்கனி வழியாக வீட்டுக்குள் நுழைந்து அசந்து தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளை அவன் ஒன்றும் செய்யவில்லை.

குமாரப்பாவை பார்த்தான். குமரப்பா நடுங்கினார். அப்போது அவன், ‘நான் இந்த ராத்திரி இந்த வீட்ல தான் இருக்கணும். வெளியே போலீஸ் இருக்கு என்ன காட்டி கொடுக்கவும் இல்ல நான் இருக்கேன்னு சொல்லவோ? ஏதாவது பண்ணுனா இரண்டு குழந்தையையும் காென்னுருவேன்’ என்று பயமுறுத்தினான்.

தாத்தா அமைதியாக இருந்தார். ‘என்ன தப்பு பண்ணிட்டு இங்கே வந்திருக்கிறீங்க?’ என்று கேட்டார்.

‘கொலை, கொலை பண்ணிட்டு இங்க வந்திருக்கேன்’ என்றான் ஜெயக்குமார்.

அதைக் கேட்டதும் தாத்தாவிற்கு ஒரு மாதிரியாக இருந்தது.

‘என்ன கொலையா?’ என்று பதறியபடி கேட்டார்.

‘ஆமா கொலைதான் பண்ணிருக்கேன். என்னைப் புடிக்காத ஒருத்தவங்கள கொலை பண்ணிட்டு வந்து இருக்கேன். வெளியே போலீஸ் நடமாட்டம் இருக்குது. அதனால நான் நைட்டு இங்க தங்கிட்டு அதுக்கப்புறம் இங்கிருந்து நான் தப்பிச்சு போயிடுவேன். இது தெரியாம போலீசில் மாட்டிக் கொடுக்கணும் சொல்லிவிடனும்னு நினைச்சா உங்க மூணு பேரையும் கொலை பண்ணிட்டு நான் போயிடுவேன்’ என்று ஜெயக்குமார் சொன்னதும் தாத்தாவிற்கு வேர்த்துக் கொட்டியது.

‘இல்ல நான் சொல்ல மாட்டேன். நீங்க இங்க தங்கலாம்’ என்று சம்மதித்தார் குமரப்பா .

‘பசிக்குது சாப்பாடு இருக்கா?’ என்று கேட்டான் ஜெயக்குமார்.

‘இருக்கு’ என்றவர் அவன் சாப்பிடுவதற்கு சாப்பாடு கொடுத்தார்.

என்ன பசியோ தெரியவில்லை வேக வேகமாக சாப்பிட்டான் ஜெயக்குமார்.

‘உங்க பெயர் என்ன?’ என்று தாத்தாவிடம் கேட்டபோது,

‘குமரப்பா’ என்று தன்னுடைய பெயரைச் சொன்னார் தாத்தா.

குழந்தைகளின் பெயரைக் கேட்ட போது இரண்டு குழந்தைகளின் பெயரைச் சொன்னார்.

‘இந்தப் பிள்ளைகளுடைய அப்பா அம்மா எங்கே?’ என்று கேட்க…..

‘எல்லாம் வெளிநாட்டில இருக்காங்க. நான்தான் இந்த குழந்தைகளுக்குத் தாய் தகப்பனாரா இருந்து பார்த்துகிட்டு இருக்கேன்’ என்று சொன்னார் குமாரப்பா.

‘சாப்பாடு செய்வது, துணி துவைக்கிறத அப்படி எல்லாத்தையும் பார்த்துக்குறேன்’ என்றார் குமரப்பா.

‘உங்க மனைவி இல்லையா?’ என்று ஜெயக்குமார் கேட்க…

‘இல்ல அவ என்ன விட்டு போயி இருபது வருஷத்துக்கு மேல் ஆச்சு. நான், இந்தக் குழந்தைகள் தான் என் உலகம்’ என்ற குமாரப்பா ஜெயக்குமார் சாப்பிடுவதற்கு நிறைய அள்ளி அள்ளிப் போட்டார்.

‘போதும் போதும்’ என்று சொல்லச் சொல்ல அள்ளி போட்டுக் கொண்டே இருந்தார்.

அப்போது ‘நீயே ஏன் கொலை பண்ணுன’ என்று குமரப்பா ஜெயக்குமாரிடம் கேட்டபோது ,

ஜெயக்குமார் பதில் சொல்ல முடியாமல் கண்ணீரை மட்டுமே உதிர்த்தான்.

‘ஏன் என்னாச்சு? தவறாக ஏதும் கேட்டனா? அப்படி கேட்டிருந்தா என்ன மன்னிச்சிடு’ என்றார் குமரப்பா .

இல்லை என்பது போல் தலையை ஆட்டினான் ஜெயக்குமார்.

‘உன்ன மாதிரி தான் என்னுடைய பையன் இருப்பான். உன்னை பார்க்கும்போது எனக்கு அவன் ஞாபகம். காரணம் தெரியல என்னோட பையனா தெரிஞ்சது. அதுதான் உனக்கு நான் சாப்பாடு கொடுத்தேன்’ என்று குமரப்பா சொன்னபோது

அவன் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தது.

அப்போது ‘நீ எதற்காக அழுகிறாய்?’ என்று குமரப்பா கேட்டார்.

‘நான் அவசரப்பட்டு விட்டேன். தேவையில்லாம என்னுடைய பொண்டாட்டிய சந்தேகப்பட்டுவிட்டேன். என் பிள்ளைகளையும் கொல்லக் காத்துக்கிட்டு இருந்தேன். நீங்க சொன்னது எனக்கு ஒரு மாதிரியா இருக்கு. எங்கேயோ அப்பா அம்மா இருக்கிறாங்க. ஒரு தாய் தகப்பனா அந்தக் குழந்தைகளைப் பார்த்துக்கிட்டிருக்கீங்க. ஆனா நான் அப்படி இல்லை. எந்த நேரமும் குடிச்சிட்டு வீட்டுல சண்டை போட்டுட்டு கலாட்டா பண்ணிட்டு அவங்களை நிம்மதியாக வாழ விடல. இப்போ என் பொண்டாட்டியும் குத்திக் கொன்னுட்டேன். என்னுடைய புள்ளைங்க அவங்க தாத்தா வீட்டில இருக்காங்க. நாளைக்கு அவங்களையும் கொன்றுவிடலாம்னு நினைச்சுதான் இன்னைக்கு நைட் இங்க தங்கலாம்னு நினைச்சேன். நீங்க சொன்னதைப் பார்க்கும்போது எனக்கு ஒரு மாதிரியா இருக்கு’ என்று சொன்ன ஜெயக்குமார் தன் மனைவியை குத்திய கத்தியுடன் வீட்டை விட்டு வெளியேறி காவலுக்கு நின்று கொண்டிருந்த காவல்துறையினரிடம் சரணடைந்து நடந்ததைச் சொன்னான்.

அதுவரையில் அவனையே பார்த்துக் கொண்டிருந்த குமரப்பாவின் கண்களில் கண்ணீர் பெருகியது.

ஒரு மனுசன்ட்ட எந்த விதத்தில நாம நடந்துக்கிறமாே அது அவனத் திருத்தும் ஆயுதமாகும். நம்முடைய பேச்சு அவனுக்கு நல்ல அறிவை ரொம்ப சந்தோஷத்தை குடுத்திருக்கும் என்று குமரப்பா வழியும் கண்ணீரைத் துடைத்தபடி வீட்டுக்குள் நுழைந்தார்.

அப்போது தன் இரண்டு பேரப் பிள்ளைகளும் நின்றிருந்தார்கள்.

‘நீங்க எப்படி?’ என்று குமரப்பா கேட்க

‘‘அந்தக் கொலைகாரன் கூட நீங்க பேசிக்கிட்டு இருக்கும்போது எந்திரிச்சோம். தாத்தா எங்களுக்கு பயமா இருந்தது. அப்படியே படுத்தோம். ஆனா உங்களோட பேச்சு அவனுக்கு திருப்தி தந்திருக்கு. அவனைத் திருந்த வச்சிருக்கு. போலீசுல சரணடைய வச்சிருக்கு தாத்தா’ என்று கூறி குழந்தைகள் குமரப்பாவை கட்டிபிடித்துக் கொண்டார்கள்.

ஜெய்குமார் வீட்டை விட்டு வெளியேறியதைப் பார்த்த குமரப்பா அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் நினைவில் தன் பேரப் பிள்ளைகளிடம் குழந்தைகளின் அப்பா அம்மா வெளிநாட்டில் இருக்கிறார்கள் என்று பொய் சொன்னதும் தன் மகன் அவன் மனைவி மீது சந்தேகப்பட்டு அவளைக் கொலை செய்துவிட்டு இப்போது ஜெயிலில் இருக்கிறான் என்பதும் அவர் நினைவில் வந்தது. இதைக் குழந்தைகளுக்கு அவர் சொல்லவில்லை.

காலம் வரும்போது அவர்கள் தெரிந்து கொள்வார்கள் என்று நினைத்த குமரப்பா இப்போதைக்கு எதுவும் சொல்லாமல் அந்தக் குழந்தைகள் இரண்டு பேரையும் அன்பாக அணைத்தபடியே வீட்டிற்குள் நுழைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *