செய்திகள்

கைக்குழந்தைகளுக்கான பைசர் தடுப்பூசி பரிசோதனை தொடக்கம்

நியூயார்க், ஜூன் 10–

அமெரிக்காவின்ஃபைசர் நிறுவனம் 6 மாத கைக்குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் பரிசோதனையை தொடங்கி உள்ளது.

ஃபைசர் மருந்து நிறுவனம் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த பயோ என்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி, அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் 12 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு அளிக்கப்படுவதைப் போலவே, இந்த வயது சிறுவர்களுக்கும் தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் செலுத்தப்படுகின்றன.

இந்நிலையில், ஃபைசர் நிறுவனம் 6 மாத கைக்குழந்தைகள் தொடங்கி, 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கான தடுப்பூசி பரிசோதனையைத் தொடங்கியிருக்கிறது. அமெரிக்கா, ஃபின்லாந்து, போலந்து, ஸ்பெயின் நாடுகளைச் சேர்ந்த 4,500 சிறுவர்களிடம் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

5 முதல் 11 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் 10 மைக்ரோகிராம் அளவும், 6 மாதம் முதல் 5 வயது குழந்தைகளுக்கு 3 மைக்ரோகிராம் அளவும் மருந்து கொடுக்கப்படுகிறது. இதன் முடிவுகள் செப்டம்பர் மாதத்தில் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் இதுவரை 12 முதல் 18 வயதுக்கு உட்பட்ட 70 லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு, இங்கேயே ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை தயாரித்து செலுத்துவது குறித்து மத்திய அரசு அந்நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *