செய்திகள்

கோவை ஜம்போ சர்க்கஸில் ஆப்ரிக்க கலைஞர்களின் சாகச விளையாட்டு

Spread the love

கோவை, ஜூலை 10

கோவையில் நடைபெற்று வரும் ஜம்போ சர்க்கஸில் ஆப்ரிக்க கலைஞர்களின் சாகச விளையாட்டுகள் இணைக்கப்பட்டுள்ளது.

கோவை வஉசி மைதானத்தில் ஜம்போ சர்க்கஸ் கடந்த ஜூன் மாதம் 22ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் தினமும் 3 காட்சிகளுடன் நடைபெறும் ஜம்போ சர்க்கஸில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகளின் 24 சாகச விளையாட்டுகள் இடம்பெற்று உள்ளது.

அந்த வகையில், சர்க்கஸ் பார்க்க வருபவர்களுக்கு மேலும் உற்சாகம் ஊட்டும் வகையில், ஆப்ரிக்காவின் தான்சானியா நாட்டின் சாகச கலைஞர்கள் 6 பேர் கொண்ட குழு கேப்டன் அந்தோணி தலைமையில் ஜூலை 8ந் தேதி முதல் சாகச விளையாட்டுகளை செய்து காண்பித்து வருகின்றனர்.

சாகச விளையாட்டுகள்

இது குறித்து குழு தலைவர் அந்தோணி தெரிவிக்கையில்,

ஜெர்மனி, தைவான் போன்ற நாடுகளில் சாகசங்களை செய்து வந்த நாங்கள் கடந்த 10 ஆண்டுகளாக ஜம்போ சர்க்கஸில் சாகச விளையாட்டுகளை செய்து வருகிறோம். குறிப்பாக பேர்டான்ஸ், கம்பு பேலன்ஸ், அக்ரோபேட்டிக்ஸ், ஜிம்னாஸ்டிக் போன்ற நிகழ்ச்சிகள் சர்க்கஸ் விரும்பிகள் மற்றும் மக்கள் பார்த்து மகிழும் வகையில் செய்து வருகிறோம்.

3 காட்சிகளில் மதிய காட்சி மட்டும் எங்களுக்கு சாவலானதாக இருக்கும். ஏனென்றால் மதியம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், உடல் சோர்வு ஏற்படுவதுண்டு. இருந்தாலும் மக்கள் ஏமாற்றம் அடைய கூடாது என்ற நோக்கில் சிரமத்துடன் அதனை செய்து காட்டுகிறோம். மேலும், மக்களின் கைதட்டலும் ஆராவாரமுமே எங்களுக்கு பெரிய ஊக்கம்.

கோவையை பொறுத்தவரை எங்களுக்கு மிகவும் வரவேற்பு கிடைத்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. எனவே வருங்காலங்களில் இன்னும் புதுமையான சாகச விளையாட்டுகளை அறிமுகம் செய்ய உள்ளோம் என்றார்.

நிகழ்வின் போது, ஜம்போ சர்க்கஸ் மேலாளர் ரமேஷ், மக்கள் தொடர்பு அதிகாரி சுபா சுப்பிரமணியம் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *