கோவை, ஜூன் 14–
கோவையில் இன்று காலை கேரள நகை வியாபாரியின் காரை வழி மறித்து 1.25 கிலோ தங்கத்தை பறித்து கொண்டு தப்பியோடிய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் ஜெய்சன் ஜேக்கப் (வயது 53). இவர் நகை செய்து நகைக் கடைகளுக்கு விற்பனை செய்பவர். இவர் சென்னை சவுகார்பேட்டையில் 1.25 கிலோ தங்கத்தை வாங்கினார். அவரும், அவரிடம் வேலை பார்க்கும் விஷ்ணு என்பவரும் இந்த தங்கத்தை சென்னையில் இருந்து கோவை கொண்டு வந்து, கேரளாவுக்கு கொண்டு சென்றனர்.
இவர்களது கார் கோவையிலிருந்து கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. மதுக்கரை அடுத்த எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோவில் அருகே சென்றபோது லாரியில் வந்த 5 பேர் கும்பல் காரை வழிமறித்தது. காரின் இருபுறமும் கண்ணாடியை உடைத்து தாக்கிய கும்பல், கத்தியை காட்டி ஜெய்சன் ஜேக்கப்பை மிரட்டி கீழே இறக்கிவிட்டனர். அவர் வைத்திருந்த தங்கத்தையும் பிடுங்கிக் கொண்டனர்.
பின்னர் கார் மற்றும் லாரியை எடுத்துக்கொண்டு தங்கத்துடன் அந்த கும்பல் தப்பியது. இந்த சம்பவம் இன்று காலை 6:45 மணிக்கு நடந்துள்ளது. ஜேக்கப் மற்றும் விஷ்ணு ஆகியோர் நடந்த சம்பவம் பற்றி க.க.சாவடி போலீசில் புகார் அளித்தனர்.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் 5 தனிப்படைகள் அமைத்து விசாரணையை துரிதப்படுத்தி உள்ளார். சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி தப்பி ஓடிய 5 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.