செய்திகள்

கேரள தோட்டத்தில் தங்க புதையல்

Makkal Kural Official

கண்ணூர், ஜூலை 14–-

கேரள மாநிலம் கண்ணூர் அருகே செங்காலா பகுதியில் தனியார் ரப்பர் தோட்டம் உள்ளது. இங்கு மழைநீர் வடிகால் அமைக்க தொழிலாளர்கள் குழி தோண்டினர். தோட்டத்தின் ஒரு பகுதியில் 10 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டது. அப்போது மண்ணுக்குள் குடம் புதைந்து இருப்பதை பார்த்தனர். அதை தொழிலாளர்கள் வெளியே எடுத்தனர்.

இருப்பினும் அது வெடிகுண்டாக இருக்கலாம் என பயந்துபோன தொழிலாளர்கள், அதற்குள் என்ன இருக்கிறது என்று திறந்து பார்க்கவில்லை. இதுகுறித்து கண்ணூர் மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு வந்து குடத்தை சோதனை செய்தனர். இதில் வெடிகுண்டு இல்லை என்பது தெரியவந்தது. பின்னர் குடத்தை திறந்து பார்த்தபோது, அதற்குள் புதையல் இருப்பது கண்டறியப்பட்டது.

குடத்திற்குள் 17 முத்து மணிகள், 13 தங்க பதக்கங்கள், 4 காசிமணி மாலை, 2 கம்மல், வெள்ளி நாணயங்கள் இருந்தன. இதை அறிந்த அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் புதையல் பொருட்களை நேரில் பார்வையிட திரண்டனர். இதையடுத்து போலீசார் அந்த பொருட்களை மீட்டு வருவாய்த்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

மண்ணுக்குள் இருந்து மீட்கப்பட்ட தங்கம் உள்ளிட்ட பொருட்கள் தளிப்பரம்பு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. தகவல் அறிந்த தொல்லியல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *