லோக்போல் சர்வே முடிவு
திருவனந்தபுரம், ஏப்.15–
கேரள மாநிலத்தில் காங்கிரசுக்கு ஆதரவான அலை வீசுவதால், கம்யூனிஸ்டுகள் ஓரிரு தொகுதிகள் மட்டுமே வெல்ல முடியும் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
கேரளாவில் மொத்தம் 20 லோக்சபா தொகுதிகள் இருக்கும் நிலையில், அங்கு ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இடையே தான் நேரடியாகப் போட்டி நிலவுகிறது. இது தவிர பாஜகவின் என்டிஏ கூட்டணியும் அங்கே போட்டியிடுகிறது. இந்நிலையில் எந்தக் கட்சி எத்தனை இடங்களில் வெல்லும் என்பது குறித்து லோக்போல் அமைப்பு நடத்திய சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளது.
காங்கிரசுக்கு ஆதரவு
அதன்படி, ராகுல் காந்தி போட்டியிடும் கேரளாவில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய ஆதரவு அலை வீசுகிறது. இடதுசாரிகளால் ஓரிரு இடங்களை மட்டுமே வெல்ல முடியும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், பாஜகவால் அங்கு ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
கேரளாவில் மொத்தம் 20 இடங்கள் இருக்கும் நிலையில், அங்கே 18-20 இடங்களில் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணி வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் இடதுசாரிகளின் எல்டிஎஃப் கூட்டணி வெறும் 0-2 இடங்களில் மட்டுமே வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. அங்கு பாஜகவால் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாது என்றும் அந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது.