திருவனந்தபுரம், ஆக. 9–
கேரள மாநிலத்தின் பெயரை கேரளம் என மாற்ற அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கேரளாவை பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிகள் ஆட்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் கேரளா என்ற பெயரை ‘கேரளம்’ என அனைத்து அதிகாரப்பூர்வ கோப்புகளிலும் இந்திய ஒன்றிய அரசு மாற்ற வேண்டும் என்று மாநில அரசு விரும்புகிறது. கேரள மாநில சட்டப்பேரவையில் முதலமைச்சர் பினராயி விஜயன் இதற்கான தீர்மானத்தை இன்று தாக்கல் செய்கிறார்.
கேரள மாநில பெயர் மாற்ற தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று இன்றே சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, நேற்று கேரள சட்டப் பேரவையில் பொது சிவில் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.