செய்திகள்

கேரளாவை மிரட்டும் ஜிகா வைரஸ்: கர்ப்பிணி உட்பட 14 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம், ஜூலை 10–

கொரோனா தொற்றைத் தொடர்ந்து, கேரளாவில் 14 பேருக்கு ஜிகா வைரஸ் எற்பட்டுள்ளதால், அங்கு அச்சச்சதை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து கேரள மாநிலத்திலும் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மத்தியில் ஜிகா வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் கொசு மூலம் பரவும் வைரஸ் என்பதால் அதுகுறித்த அச்சம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியிருப்பதாவது:–

“ஜிகா வைரஸை தடுப்பதற்காக ‘ஆக்‌ஷன் பிளான்’ ஏற்படுத்தியிருக்கிறோம். ஜிகா வைரஸ் பரவ வாய்ப்புள்ள பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளை மையமாகக்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அறிகுறிகள்

4 மாதம் வரையான கர்ப்பிணிகளுக்கு, ஜிகா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், கர்ப்பிணிகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் உடனே ஜிகா வைரஸ் உள்ளதா என பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல், தலைவலி, உடல்வலி, உடலில் சிவப்பான தழும்புகள் தோன்றினால் அது ஜிகா வைரஸின் அறிகுறியா என்பதை உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும்.

புனே ஆய்வுக்கூடத்துக்கு, 19 போரின் சாம்பிள்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அதில் 13 பேருக்கு ஜிகாவைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனையில் பணிசெய்யும் மக்கள் நல்வாழ்வுப் பணியாளர்கள். இவர்கள் மருத்துவமனைக்கு அருகில் வசிப்பவர்கள் ஆவர்கள்.

ஏற்கனவே கர்ப்பிணி ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவருடன் சேர்த்து இதுவரை 14 பேருக்கு சிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 17 பேரின் சாம்பிள்கள் ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஏடிஸ் வகை கொசுக்கள், ஜிகா வைரஸை பரப்புகிறது. சாதாரணமாக இந்த வைரஸால் பெரிய பிரச்னை இல்லை. ஆனால் கர்ப்பிணிகளுக்கும் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தாம்பத்ய உறவு மூலமும் ஜிகா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. கருவுற தயாராகும் தாய்மார்கள் கொசு கடிக்காதவண்ணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். குழந்தைகளும், முதியவர்களும் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *