செய்திகள்

கேரளாவுக்கு 30 கிலோ தங்கக் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலத்திற்கு கேரள முதல்வர் பதிலடி

திருவனந்தபுரம், ஜூன்.8–

‘‘கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் அளித்த வாக்குமூலம் அரசியல் உள்நோக்கம் கொண்டது. ஆதாரமற்றது’’ என முதல்வர் பினராயி விஜயன் பதிலளித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவுக்கு சட்டவிரோதமாக 30 கிலோ தங்கம் கடத்திய வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் பெங்களூருவில் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் மீது என்.ஐ.ஏ. போலீசார், ‘உபா’ சட்டத்தில் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கில் கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர், சரித்குமார், ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். ஸ்வப்னா சுரேஷ் கேரள முதல்-மந்திரியின் கட்டுப்பாட்டில் இருந்த தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வந்தவர் ஆவார்.

இந்த வழக்கில் ஜாமினில் இருக்கும் ஸ்வப்னா சுரேஷ், தான் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளிக்க விரும்புவதாகக் கூறினார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், எனவே, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பான அனைத்து உண்மைகளையும் வெளியிடப் போவதாகவும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, இன்று நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த ஸ்வப்னா சுரேஷ், இந்த வழக்கில் முதல்-மந்திரி பினராயி விஜயன், அவரது மனைவி கமலா, அவரது மகள், பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோருக்குத் தொடர்பு உள்ளதாகக் கூறினார்.

மேலும், கடந்த 2016-ம் ஆண்டு துபாயில் வைத்து பினராயி விஜயனுக்கு பணம் கொடுக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம் அளித்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்து பதிலளித்துள்ள முதல்வர் பினராயி விஜயன்,

தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் அரசியல் உள்நோக்கம் கொண்டது. இது அவர்களின் அரசியல் சூழ்ச்சியின் ஒரு பகுதிதான். பொதுமக்கள் இத்தகைய அரசியல் சூழ்ச்சியை ஏற்கெனவே புறக்கணித்தவர்கள்தான். குற்றவாளிகள் மூலம் இந்த குற்றச்சாட்டை அடிக்கடி முன்வைத்து அரசியல் செய்து வருகின்றனர் என்றார்.

இந்த குற்றச்சாட்டில் எந்தவொரு உண்மையும் இல்லை. இவ்வாறு குற்றம் சுமத்துவதன் மூலம் அரசின் உறுதித் தன்மையையும், அரசியல் தலைமையையும் அசைத்துவிடலாம் என்று கருதுகின்றனர். ஆனால் இது வீண் முயற்சி என்பதை அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் அவர் பதிலளித்துள்ளார்.

பொய்ப் புகார்கள் மூலம் ஆதாயம் அடையலாம் என்று நினைத்தால் அவர்களுக்கு சமூகம் தக்க பதிலடி கொடுக்கும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published.