செய்திகள்

கேரளாவுக்கு ரெட் அலர்ட்: சபரிமலை பக்தர்களுக்கு பாதுகாப்பு அறிவுறுத்தல்

Makkal Kural Official

திருவனந்தபுரம், டிச. 13–

கேரள மாநிலத்தின் 3 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என எச்சரித்து ரெட் அலெர்ட் விடுத்துள்ள இந்திய வானிலை மையம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் அதிகனமழை பெய்யும் என்பதால் சபரிமலை பக்தர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

வடகிழக்கு பருவமழை தென் மாநிலங்களில் தீவிரம் அடைந்துள்ளது. வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தென் தமிழ்நாடு, வட தமிழ்நாடு, கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் என பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக கேரளாவில் இன்று அதிகனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பத்தனம்திட்டா, எர்ணாகுளம் மற்றும் இடுக்கி ஆகிய 3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய மற்றும் தெற்கு கேரளாவிற்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கையை அறிவித்துள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

5 நாட்களுக்கு மழை

கண்ணூர் மற்றும் காசர்கோடு தவிர அனைத்து மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா பகுதியில் வலுப்பெற்ற குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழ்நாட்டின் கடற்கரையை நோக்கி நகர்ந்து தீவிரம் குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் ஒரு சில இடங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழைவரையில் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ள பத்தனம்திட்டாவுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பாக பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே சபரிமலையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் பக்தர்கள் உடல் நலத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அத்தியாவசிய மருந்துகளை கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *