செய்திகள்

கேரளாவில் 5 குழந்தை பெற்றால் உதவித்தொகை

திருவனந்தபுரம், ஜூலை 27–

கேரளாவில் கத்தோலிக்க தம்பதிகள் 5 குழந்தை பெற்றால் மாதம் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் சீரோ மலபார் கத்தோலிக்க ஆலயத்தின் பாலா மறைமாவட்டம் சார்பில், ‘குடும்ப ஆண்டு’ கடைபிடிக்கப்படுகிறது. இது தொடர்பாக பாலா மறை மாவட்ட ஆயர் ஜோசப் கல்லரங்காட் அனைத்து ஆலயங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பினார்.

அதில், பாலா மறைமாவட்டத்தில் உள்ள ஆலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் கத்தோலிக்க குடும்பங்களில், 5 மற்றும் அதற்கு மேல் குழந்தைகள் பெற்ற தம்பதிகளுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும். அந்த தம்பதிகளின் குழந்தைகளுக்கு மறைமாவட்டத்தின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களில் இலவச கல்வியும், மருத்துவமனைகளில் இலவச சிகிச்சையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து பாலா மறைமாவட்ட குடும்ப நல இயக்கத்தின் பாதிரியார் ஜோசப் குற்றிங்கல் கூறுகையில், ‘கேரளாவில் கத்தோலிக்கர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மாநிலத்தில் 18.38 சதவீதமாக இருந்த கத்தோலிக்கர்கள் இப்போது 14 சதவீதம் ஆக உள்ளது. எனவே தான் கத்தோலிக்கர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்க இந்த உதவிகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *