மூணாறு, மே 12–
கேரளா இடுக்கி மாவட்டம் அடிமாலி அருகே கொன்னத்தடி ஊராட்சி பணிக்கன்குடி கொம்பொடிஞ்சால் பகுதியில் வீட்டிற்குள் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உடல் கருகி பலியாயினர்.
அப்பகுதியைச் சேர்ந்த டாக்சி டிரைவர் அனீஷ். இவர் கொரோனா பாதிப்பால் 3 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். அவரது மனைவி சுபா 44, மகன்கள் அபிநந்த் 10, அபினவ் 4, சுபாவின் தாயார் பொன்னம்மா 70, அங்கு வசித்தனர்.
இந்நிலையில் சுபாவின் வீடு தீக்கிரையான நிலையில் சிலர் பார்த்தனர். வீட்டிற்குள் சென்ற போது சிறுவன் அபிநவ் பலத்த தீக்காயங்களுடன் கிடந்தான். அடிமாலி தாலுகா மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள் அபிநவ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மற்ற 3 பேரின் உடல்களும் கருகிய நிலையில் நேற்று மீட்கப்பட்டன.
இடுக்கி தடயவியல்துறையினர் நேற்று சம்பவ இடத்தில் சோதனை யிட்டனர். அதில் மின் கசிவு மூலம் மே 9 இரவில் தீப்பற்றியதாக முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. மோப்ப நாய் மூலம் சோதனை நடந்தது.
கொம்பொடிஞ்சால் பகுதியில் மலை மீது வீடு தனியாக உள்ளதால் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் உடனடியாக வெளியுலகிற்கு தெரியாமல் தாமதமாக நேற்று முன்தினம் மாலை தான் தெரிய வந்தது.