செய்திகள்

கேரளாவில் முல்லைப்பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் திட்டம் இல்லை

Makkal Kural Official

புதுடெல்லி, ஜூலை 26-–

கேரளாவில் முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் திட்டம் பரிசீலனையில் இல்லை என்று நாடாளு மன்றத்தில் மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் ராஜ்பூஷன் சவுத்ரி தெரிவித்தார்.

தமிழக-–கேரள மாநில எல்லையில் முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக இந்த அணை திகழ்கிறது.

முல்லைப்பெரியாறு அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 152 அடியாகும். 19-ம் நூற்றாண்டில் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் ஏற்பட்ட குடிநீர் பஞ்சத்தை போக்க ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்த அணை கட்டப்பட்டது. அணை கட்டுமான பணியின் போது இயற்கை பேரிடரால் பணிகள் பாதிக்கப்பட்ட போது, மேற்கொண்டு நிதி ஒதுக்க கேரள அரசு மறுத்தது.அப்போது அணை கட்டுமான பணிக்காக நியமிக்கப்பட்டு இருந்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த என்ஜினீயர் கர்னல் ஜான் பென்னிகுயிக் லண்டனில் இருந்த தனது சொத்துக்களை விற்று இந்த அணையை கட்டினார்.

முல்லைப்பெரியாறு அணை பலவீனமாகி விட்டதாக கேரள அரசு தொடர்ந்து கூறி வந்ததால், அணையில் பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்வதற்காக கடந்த 1979-ம் ஆண்டு அணையின் நீர்மட்டம் 152 அடியில் இருந்து 136 அடியாக குறைக்கப்பட்டது.

பின்னர் தமிழக அரசு சார்பில் அணையில் பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டன. சுப்ரீம் கோர்ட் நியமித்த நிபுணர்கள் குழுவும் ஆய்வு செய்து அணை பலமாக இருப்பதை உறுதி செய்தது.

ஆனாலும், அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கேரள அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்தது. அத்துடன் முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்ட வேண்டும் என்றும் கேரள அரசு பிடிவாதம் செய்து வந்தது.

இதையடுத்து தமிழக அரசு நடத்திய சட்டப்போராட்டத்தின் பலனாக, அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் 7-ம் தேதி வழங்கியது. மேலும் அணை பகுதியில் உள்ள பேபி அணையை பலப்படுத்திவிட்டு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும் சுப்ரீம் கோர்ட தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. தீர்ப்பு வந்த அதே ஆண்டில் அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டது.

தொடர்ந்து பேபி அணையை பலப்படுத்தும் பணிக்கு கேரள அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. அத்துடன் புதிய அணை கட்டுவதற்கான முயற்சிகளையும் கேரள அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே நாடாளுமன்ற மக்களவையில் கேரள எம்.பி., டீன் குரியாகோஸ், முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்ட திட்டம் உள்ளதா? என்றும், தற்போதைய அணையின் நிலை குறித்த ஆய்வுகள் பற்றியும் கேள்வி கேட்டிருந்தார்.

இதற்கு மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் ராஜ்பூஷன் சவுத்ரி நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அந்த பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அணைகளின் பாதுகாப்பு மற்றும் ஆய்வு செய்யும் பொறுப்பு அதன் உரிமையாளர்களான மாநில அரசுகளிடமே உள்ளன. முல்லைப்பெரியாறு அணையை தமிழ்நாடு நீர்வளத்துறை ஒவ்வொரு பருவமழைக்கு முன்னும், பின்னும் ஆய்வு செய்கிறது. இந்த வகையில் சமீபத்தில் கடந்த ஜூன் மாதம் 13-ம் தேதி ஆய்வு நடத்தப்பட்டது. அதே தினம் மேற்பார்வை கமிட்டியின் கூட்டத்திலும் அது விவாதிக்கப்பட்டது.

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசின் பரிசீலனையில் திட்டம் எதுவும் இல்லை. இவ்வாறு பதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தேனி தி.மு.க. எம்.பி. தங்கத்தமிழ்ச்செல்வன் கேட்ட முல்லைப்பெரியாறு நீர்மட்ட உயர்வு தொடர்பான கேள்விக்கு அதே அமைச்சர் கீழ்க்கண்டவாறு பதில் அளித்தார்.

152 அடியாக உயர்த்த முடியாது

முல்லைப்பெரியாறு அணையின் வலுவை நிபுணர்குழு ஆய்வு செய்து அளித்த அறிக்கையின் அடிப்படையில் அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அணையை கேரள அரசின் ஒத்துழைப்போடு மேலும் வலுப்படுத்தவும் தமிழக அரசுக்கு அனுமதி அளித்தது. ஆனால் அந்த பணிகள் இன்னும் முடிவடையவில்லை. எனவே அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முடியாது. வலுப்படுத்தும் பணிகள் நிலுவையில் இருப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *