திருவனந்தபுரம், ஜூன் 23–
கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில், மாநிலத்தில் 1 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய பின்பு பொதுமக்கள் பலருக்கும் வைரஸ், டெங்கு மற்றும் எலி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த 20 நாட்களில் 1.60 லட்சம் பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொல்லம், கோட்டயம், பத்தினம்திட்டா, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் முழுவதும் காய்ச்சல் பாதிப்புக்கு இதுவரை 68 பேர் பலியாகி உள்ளனர். 116 பேருக்கு எலிக்காய்ச்சல் அறிகுறி இருந்ததாகவும், இதில் 77 பேருக்கு நோய் பாதிப்பு உறுதியானது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
முதல்வருக்கும் பாதிப்பு
இதற்கிடையே மலையோர மாவட்டங்களில் பறவை காய்ச்சலும், பன்றி காய்ச்சலும் பரவி வருவது சுகாதாரத்துறையினர் நடத்திய சோதனையில் தெரிய வந்தது. அந்த பகுதியில் மருத்துவ குழுவினர் முகாமிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மலப்புரம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு பலியானான். அவனது ரத்த மாதிரிகளை சோதனை செய்தபோது அந்த சிறுவனுக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கும் மருத்துவ குழுவினர் விரைந்து சென்று ஆய்வு செய்து வருகிறார்கள்.
கேரளாவில் காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த சுகாதார துறையினர் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சை பெற்று வருவதால் அடுத்த 5 நாட்களுக்கு அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.