11 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
திருவனந்தபுரம், ஜூலை 6–
கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இன்று 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
8 பேர் பலி
கொல்லம், திருவனந்தபுரம் தவிர மற்ற மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. கொல்லம் மற்றும் திருவனந்தபுரத்தில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், வடக்கஞ்சேரி, அரிப்பாலம் அடூர் மற்றும் ஆலப்புழா உள்ளிட்ட இடங்களில், தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர்.
மாநிலம் முழுவதும் 47 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு சுமார் 178 குழந்தைகள் உட்பட 879 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 8ம் தேதி வரை மழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் , பெரியாறு, முத்திரைப்புழா ஆற்றின் கரையோரங்களில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.