செய்திகள்

கேரளாவில் பாம்பை ஏவி மனைவி கொலை: கணவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கொல்லம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

கொல்லம், அக். 13–

கேரளாவில் பாம்பை ஏவிவிட்டு கடிக்க வைத்து மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவரை குற்றவாளி என அறிவித்து, அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கொல்லம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த உத்ரா. இவருக்கும் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த வங்கி அதிகாரி சூரஜ் என்பவருக்கும் கடந்த 2018-ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இவர்கள் குடும்பத்துடன் அரூர் பகுதியில் வசித்து வந்துள்ளனர். கடந்த ஆண்டு தொடக்கத்தில் உத்ராவை விஷப்பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் வீட்டில் இருந்த உத்ராவை மீண்டும் விஷப் பாம்பு கடித்துள்ளது. ஆனால் இந்த முறை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். உத்ராவை 2 முறை பாம்பு கடித்ததால் அனைவருக்கும் சந்தேகம் எழுந்தது. ஏனெனில் உத்ரா 2வது மாடியில் உள்ள ஏ.சி. அறையில் படுத்திருக்கும்போது அவரை பாம்பு கடித்துள்ளது. அந்த அறையின் ஜன்னலை கூட திறக்க வாய்ப்பில்லை என்பதால் விஷப்பாம்பு எப்படி வந்தது? என்ற கேள்வி எழுந்தது. இதனை போலீசாரிடம் உத்ராவின் பெற்றோர் கூறியபோதுதான், விசாரணை நடத்தி வந்த போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. சந்தேகத்தின் அடிப்படையில் சூரஜ் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில் வரதட்சணைக்காகதான் உத்ராவை கொன்றுவிட்டதாக சூரஜ் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.

ஏற்கனவே ஒருமுறை பாம்பை கடிக்க வைத்து கொல்ல நடந்த முயற்சியில் உத்ரா தப்பி விட்டார். இதனால் அவர் 2வது முறை உத்தராவுக்கு தூக்க மாத்திரை கொடுத்து படுக்க வைத்து பாம்பை கடிக்க வைத்து கொன்றுள்ளார். பாம்பாட்டியிடம் பணம் கொடுத்து விஷப்பாம்பை வாங்கி அவர் இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார்.

ஏற்கனவே உத்ரா 100 பவுன் நகை, 10 லட்சம் ரூபாய் ரொக்கம், சொத்து, கார் பல கோடிக்கணக்கில் வரதட்சணையாக கொடுத்துள்ளார். ஆனாலும் சூரஜ் கூடுதல் வரதட்சணை கேட்ட நிலையில், உத்ரா அதற்கு மறுத்ததால் கொடூரமாக கொலை செய்தது போலீசாருக்கு தெரியவந்தது. இந்த கொலையில் நேரடி சாட்சியம் ஏதும் இல்லாததால், பாம்பை வைத்தே குற்றத்தை நிரூபித்தனர் போலீசார். இந்த வழக்கில் துப்பு துலங்க தடயவியல், பாம்பின் மரபணு உள்ளிட்ட பல நுணுக்கமான விஷயங்களை தனிப்படையினர் விசாரணைக்கு உள்படுத்தியதாக கூறப்படுகிறது.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கு கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சமீபத்தில் இது தொடர்பாக 100 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய சூரஜ் குற்றவாளி என்று நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கியது.

தண்டனை விவரங்களை நீதிபதி இன்று அறிவித்தார்.

கணவர் சூரஜ்ஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 17 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *