ஆயிரக்கணக்கானனோர் சிக்கி தவிப்பு
மீட்பு பணியில் ஹெலிகாப்டர்கள், 225 ராணுவ வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படை
உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்: மோடி அறிவிப்பு
திருவனந்தபுரம், ஜூலை 30–
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழப்பு 44 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், பாலம் சேதம் அடைந்துள்ளதாலும் மீட்புப் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் 1000க்கும் மேற்பட்ட மக்கள் சிக்கித் தவிப்பதாகத் தெரிகிறது.
மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், 225 ராணுவ வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர். விமானப்படை ஹெலிகாப்டர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அங்கு மீட்பு, நிவாரணப் பணிகளில் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக அங்கு கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில், கேரளாவின் வயநாடு பகுதியில் நேற்று இரவு மிகக் கனமழை பெய்தது. இந்த கனமழையை தொடர்ந்து அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணி வரையிலான 4 மணிநேரத்தில் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. முண்டக்கை டவுன், மேப்பாடி மற்றும் சூரல்மலா ஆகிய 3 இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது.
1000 குடும்பங்கள்
சிக்கி தவிப்பு
அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளால் வைத்திரி, வெள்ளேரிமலை உள்ளிட்ட பகுதிகலும் பயங்கர பாதிக்கப்பட்டது. அட்டமலா – முண்டக்கையை இணைக்கும் ஒரே பாலம் வெள்ளம், நிலச்சரிவில் சேதமடைந்த நிலையில் மீட்புப் பணிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் தனித்தீவில் சிக்கியது போல 500 வீடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு மாட்டிக்கொண்டுள்ளனர். சூரல்மலா பகுதியில் மட்டும் 400க்கு மேற்பட்ட வீடுகளில் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் சிக்கிக் கொண்டுள்ளதாக தெரிகிறது. பல நூறு வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தெரிகிறது. பல வீடுகள் மண்ணோடு மண்ணாக அடித்து செல்லப்பட்டன.
நிலச்சரிவில் சிக்கி இதுவரை பலியானோர் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. மண்ணில் புதைந்த சடலங்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில் பலி் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது. இதனிடையே நூற்றுக்கணக்கானவர்களை காணவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
நிலச்சரிவு ஏற்பட்ட உடன் உடனடியாக ராணுவத்தின் உதவி கோரப்பட்டது. இதனையடுத்து காலாட்படை பட்டாலியனைச் சேர்ந்த 225 பேர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மருத்துவ அதிகாரிகள் குழு தலைமையில் 40 பேர் அடங்கிய குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.
மீட்பு பணியில் ஹெலிகாப்டர்
குன்னூர் கண்டோன்மென்டில் இருந்தும் 2 குழுவினர் வயநாடு சென்றனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விமானப்படைக்கு சொந்தமான ஏஎல்எச் மற்றும் எம்ஐஐ 7 ஹெலிகாப்டர்களும், சாரங் வகை ஹெலிகாப்டர்களும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
முண்டக்கை டவுன் பகுதியில் அரசின் 2 ஹெலிகாப்டர்கள் தரையிறங்க முயற்சித்தது. ஆனால், காலநிலை மோசமாக இருப்பதால், அங்கு தரையிறங்க முடியாமல் மீண்டும் கோழிகோட்டுக்கு திரும்பியது.
நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை கண்டுபிடிக்க மாயா மற்றும் மர்பி போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்டவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
உதவி எண்கள் அறிவிப்பு
தேசிய சுகாதார இயக்கம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு தொடர்பாக 9656938689 மற்றும் 8086010833 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் ஒரேநாளில் 20 செ.மீ. அளவு மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினை தொடர்ந்து நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மேலும் இன்றும் கேரளாவின் வயநாடு உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளா நிலச்சரிவு தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வயநாட்டு நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவு குறித்த தகவல் கிடைத்ததும் அரசு இயந்திரம் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. 5 அமைச்சர்கள் வயநாட்டிற்கு விரைந்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.
கேரளாவில் அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உதவிகள் செய்ய
தயார்: மோடி
வயநாடு நிலச்சரிவு மீட்பு, நிவாரணப் பணிகளில் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பதிவில், “வயநாடு நிலச்சரி குறித்து அறிந்து துயரடைந்தேன். தங்களின் அன்புக்குரியவர்கள் இழந்து வாடுவோருக்கு ஆறுதலை உரித்தாக்குகிறேன். காயம்டைந்தோர் விரைவில் குணம் பெற பிரார்த்தனைகள். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை தொடர்பு கொண்டு பேசினேன். தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று உறுதியளித்துள்ளேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும் வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் தொண்டர்களுக்கு
ராகுல் அழைப்பு
இதேபோல் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:–
“வயநாடு மாவட்டம் மேப்பாடியில் ஏற்பட்ட நிலச்சரிவு செய்தியறிந்து வேதனையடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என நான் நம்புகிறேன்.
கேரள முதல்வருடனும், வயநாடு மாவட்ட ஆட்சியருடனும் பேசியுள்ளேன். அனைத்து அமைப்புகளுடனும் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை முடுக்கிவிடுமாறு வேண்டியுள்ளேன். மத்திய அமைச்சர்களுடன் பேசி வயநாடுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வலியுறுத்துவேன். ஐக்கிய ஜனநாயக முன்னணி தொண்டர்கள் மீட்பு, நிவாரணப் பணிகளில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
#kerala #wayanad #Landslides