செய்திகள்

கேரளாவில் ஓடும் ரெயிலில் தீ வைப்பு: 3 பேர் பலி; 15 பேர் படுகாயம்

என்.ஐ.ஏ. விசாரணை

தீ வைத்த நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

திருவனந்தபுரம், ஏப்.3–

கேரளாவில் ரெயிலில் 3 பயணிகளை தீ வைத்து படுகொலை செய்த சம்பவத்தில் மாவோயிஸ்ட்கள் அல்லது மத பயங்கரவாதிகளுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து என்.ஐ.ஏ. விசாரணையை துவக்கி உள்ளது. இந்த நிலையில் சம்பவ இடத்தில் ரெயில் நிலையங்களின் பெயர்களை குறிப்பிட்டு கணித குறியீடுகளுடனான பேப்பர் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தி, ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இந்த பேப்பர், சதிகாரர்களின் கோட் வேர்டாக இருக்குமோ? என்ற அடிப்படையிலும் என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருகிறது.

கேரளாவின் கோழிக்கோடு ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று இரவு ஆலப்புழை – கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. கோழிக்கோடு ரெயில் நிலையத்தை கடந்து ரெயில் சென்று கொண்டிருந்த போது பயணிகளில் ஒருவர் சக பயணி மீது தீ வைத்து எரித்து கொல்ல முயன்றார். இச்சம்பவத்தில் பயணிகள் 15 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது. இதில் தவ்பீக், ரெஹானா மற்றும் ஒரு குழந்தை என 3 பேர் பலியானார்கள்.

ரெயிலில் பயணம் செய்த நபர், எதிரே உட்கார்ந்திருந்த தவ்பீக், ரெஹ்னா உள்ளிட்டோர் மீது ஸ்பிரே மூலம் பெட்ரோல் தெளித்துள்ளார். பின்னர் அவர்கள் மீது தீ வைத்து விட்டு ஓடும் ரெயிலில் இருந்து குதித்து தப்பி ஓடி உள்ளார். அந்த ரெயிலை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்தவருடன் அந்நபர் தப்பி சென்றார் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் போலீசார் தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டனர்.

இந்த சோதனைகளில் கன்னியாகுமரி உள்ளிட்ட ரெயில் நிலையங்களை வரிசையாக குறிப்பிட்டு ஆங்கிலம், இந்தியில் எழுதப்பட்ட ஒரு பேப்பர் கைப்பற்றப்பட்டது.

அதில் கணித குறியீடுகளும் இடம்பெற்றிருந்தன. கேரளாவில் நடைபெற்ற சம்பவத்தில் மலையாளத்தில் எழுதப்படாமல் இந்தி, ஆங்கிலத்தில் ஏன் எழுதப்பட்டது என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் வட இந்தியாவை சேர்ந்த நபர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாமா? என்கிற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.

மேலும் மாவோயிஸ்ட்கள் அல்லது மத பயங்கரவாதிகளுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பிருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கேரளாவில் ஓடும் ரெயிலில் இரவு நேரத்தில் நடந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிசிடிவி காட்சி

தீ வைத்ததாக சந்தேகப்படும் நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. அதில் தீ வைத்த நபர் ரெயிலில் இருந்து குதித்து சாலையோரம் வந்து காத்திருக்கிறார். அப்போது அங்கு வந்த மோட்டார் சைக்கிளில் ஒன்றில் ஏறி அவர் செல்வது போன்ற காட்சியும் வெளியாகி உள்ளது. அதில் அவர் சிவப்பு சட்டை மற்றும் தொப்பி அணிந்திருந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்த நபரை தேடும் பணிகள் கேரளா முழுவதும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், அந்த மர்ம நபர் திட்டமிட்டு வந்து இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் அவருக்கு மாவோயிஸ்ட் இயக்கத்தினருடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. ரெயில் நிலைய தண்டவாளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக ஒரு பை கிடந்ததை பார்த்த போலீசார் அதனை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த பையில் ஒரு டிபன் பாக்ஸ் இருந்தது. அந்த பையை தீ வைத்த வாலிபர் விட்டுச்சென்று இருக்கலாமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *