கொச்சி, செப். 5–
கேரள மாநிலத்தில் கனமழை பெய்துவரும் நிலையில் பத்தனம்திட்டா, இடுக்கி மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தின் ஒரு சில பகுதிகளிலும், ஆந்திர கடற்கரையோர மற்றும் தெலங்கானாவின் ஒரு சில பகுதிகளிலும் மிகக் கனமழை பெய்யும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் 12 – 20 செ.மீ. மழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆலப்புழை, கோட்டயம், எர்ணாகுளம், திரிச்சூர் பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
எர்ணாகுளம் மற்றும் இடுக்கி பகுதிகளில் கனமழை எச்சரிக்கை வெள்ளிக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாகவும், இப்பகுதிகளுக்கு புதன்கிழமை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் முழுவதும் கடந்த 2 நாள்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
கனமழையால் 2 நாள்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் சில இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. பம்பை ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. அடுத்த 24 மணிநேரத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், மாநிலத்தின் சில பகுதிகளில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.