செய்திகள்

கேரளாவின் ஆக்சிஜன் உற்பத்தி எங்கள் தேவைக்கே வேண்டும்: பிரதமருக்கு பினராயி கடிதம்

திருவனந்தபுரம், மே 11–

ஆக்ஸிஜன் தேவை அதிகம் உள்ளதால், எங்கள் மாநில உற்பத்தியை நாங்களே பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் கேரள மாநிலத்திலும் கொரோனாவின் தாக்கம் மிக அதிக அளவில் காணப்படுகிறது.

இனி கொடுக்க முடியாது

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ஏற்கனவே தங்களிடம் இருந்த 450 மெட்ரிக் டன் ஆக்சிஜனை அண்டை மாநிலங்களுக்கு வழங்கியதால், தற்பொழுது தங்களிடம் 86 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே மீதம் உள்ளதாகவும், இனி தங்களால் பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜனை கொடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மே 15 -க்குள் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் இனி வரும் நாட்களில் மாநிலத்துக்கு 450 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படும் என்பதால், கேரளாவில் உற்பத்தி செய்யப்படும் 219 டன் ஆக்சிஜனையும் தங்கள் மாநிலத்துக்கே உபயோகிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *