செய்திகள்

கேரளத்துக்கு சிவப்பு எச்சரிக்கை : சுற்றுலா தலங்கள் மூடல்

Makkal Kural Official

திருவனந்தபுரம், மே 24–

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கடந்த 2 நாட்களாக அரபிக் கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு நிலை, மேலும் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது. இதனால் அங்கு பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது பருவமழைக்கு முந்தைய மழைப்பொழிவும் கேரளாவின் பல்வேறு பகுதிகளிலும் பெய்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கி உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு, கன்னூர் மாவட்டங்களுக்கு கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திரிசூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. இடுக்கி அணையில் படகுச் சவாரியும் நிறுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு இடங்களில் நேற்று முதல் பரவலாக பலத்த மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த மழை காரணமாக திருவனந்தபுரத்தில் 12 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. அருவிக்காரா அணையின் 3 மதகுகள் திறக்கப்பட்டுள்ளன.

அடுத்த 3 நாட்களுக்கு பல மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேரளா அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *