சிறுகதை

கேட்டானே ஒரு கேள்வி! |சின்னஞ்சிறு கோபு

அது பூவரசம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியின் ஆறாம் வகுப்பு. விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கூடம் வந்திருந்த மாணவர்களைப் பார்த்து ஆசிரியர் சண்முகம் அநீதி நிலைக்காது, நீதி நேர்மைதான் நிலைக்கும் என்பதற்கு உதாரணமாக நரகாசுரன் கதையைச் சொன்னார்.

அந்த அசுரனால் இந்த உலகம் பட்ட கஷ்டங்களைச் சொன்னார். கடைசியில் சத்யபாமாவின் உதவியால் நரகாசுரன் கிருஷ்ணரால் கொல்லப்பட்டதையெல்லாம் விரிவாக ஒரு சுவையான கதையாக சொன்னார். மாணவ மாணவிகள் அதை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர்.

“நரகாசுரனுக்கு ஒரு மகன் இருந்தான். அவன் பெயர் பக தத்தன். அவன் நரகாசுரனைப் போல கெட்டவனாக இல்லாமல் நல்லவனாக இருந்தான். அதனால்தான் நரகாசுரனின் நாட்டை நரகாசுரன் இறந்த பிறகு அவனது மகன் பக தத்தனிடம் கிருஷ்ணர் ஒப்படைத்தார்” என்று கதையை சொல்லி முடித்தார் ஆசிரியர் சண்முகம்.

இதுவரை நரகாசுரன் கதையை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்த நம்ம ராமநாதனுக்கு ஒரு சந்தேகம் வந்தது.

‘ நரகாசுரனின் மகன் பெயர் பக தத்தன் என்றால் அவனது அம்மா பெயரென்ன? அதாவது நரகாசுரனின் மனைவி பெயரென்ன?’ என்று யோசித்தான்.

அடுத்த நிமிடமே ராமநாதன் எழுந்து, “சார், எனக்கு ஒரு சந்தேகம்!’ என்றான்.

ஆசிரியர் சண்முகம் கொஞ்சம் அரண்டு விட்டார்.

‘இவனா? இவன் ஏடாகூடமாக ஏதாவது கேட்பானே’என்று பயந்தார்.

ஆனாலும் கொஞ்சம் துணிவை வரவழைத்துக்கொண்டு,

“கேளுடா, ராமநாதா!” என்றார்.

“சார், நரகாசுரனின் மகன் பெயர் பக தத்தன். சரி, அப்படியென்றால் பக தத்தனின் அம்மா – அதாவது நரகாசுரனுடைய மனைவி பெயர் என்ன சார்?” என்றான்.

‘நரகாசுரனின் மனைவி பெயரா?’

உங்களுக்கு தெரிய வில்லை அல்லவா?! அதுபோல அவருக்கும் தெரிய வில்லை. எங்கும் படித்ததாகவோ, கேள்விப்பட்டதாகவோ கூட அவருக்கு ஞாபகமில்லை!

‘நரகாசுரனுக்கு மகன் இருக்கிறார் என்றால் நிச்சயம் நரகாசுரனுக்கு மனைவி இருந்திருக்க வேண்டுமே!’ என்று யோசித்தார்.

அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. எங்குமே ஆசிரியர் கேள்வி கேட்டுதான், மாணவர்கள் பதில் தெரியாமல் விழிப்பார்கள். இங்கேயோ நேர்மாறாக அமைந்து விட்டது!

“அதாவது…. ராமநாதா…” என்று என்ன சொல்வது எனத் தெரியாமல் இழுத்தார்!

அப்போது ராமநாதனுக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்த தேனப்பன் எழுந்து,

“சார், இதற்கான பதில் எனக்குத் தெரியும்! நான் சொல்லட்டுமா?” என்றார்.

அவருக்கு அப்போதுதான் நிம்மதியான மூச்சே வந்தது. “சொல்லு…நான் சொல்வதைவிட நீ சொல்வதே சிறப்பானது!” என்று சமாளித்தார்.

“புராணங்கள் என்பது அந்த காலத்தில் மக்களை நல்வழி படுத்த சொல்லப்பட்ட கதைகள்தான் சார்! தமிழில் அருளாள தாசர் என்பவர் விளக்க உரை எழுதிய பாகவத புராணத்தை சமீபத்தில் படித்தேன். அதில் நரகாசுரன் வதை படலம் என்ற பகுதியில் நரகாசுரன் துஷ்டா என்ற சிற்றரசனின் மகளாகிய ‘கசேரு’ என்பவளைச் சிறையெடுத்து வந்து திருமணம் செய்துக்கொண்டு பட்டத்தரசியாக ஆக்கினான். அவர்களுடைய மகன்தான் பக தத்தன் என்று அதில் விபரமாக இருக்கிறது சார்! அதனால் நரகாசுரனின் மனைவி பெயர் கசேரு!” என்றான் தேனப்பன்.

‘நாம் ஆசிரியரை மடக்கலாம் என்று பார்த்தால் இந்த தேனப்பன் கெடுத்து விட்டானே!’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான் ராமநாதன்.

அதே சமயம் அந்தப் பாடவேளை முடிந்து, மணி அடிக்கவே ஆசிரியர் சண்முகம், ‘போதும்டா, சாமி’ என்று புறப்பட்டார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *