செய்திகள்

கேஜிஎப்–2 பாடலின் இசையை பயன்படுத்தியதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் கணக்கு முடக்கம்

கர்நாடக நீதிமன்றம் உத்தரவு

டெல்லி, நவ. 8–

பாடலின் இசையை அனுமதி பெறாமல் பயன்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு, பாரத் ஜோடோ யாத்திரையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகளை தற்காலிகமாக முடக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘இந்திய ஒற்றுமை பயணம்’ என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைப்பயணம் கேரளா, கர்நாடகம் வழியாக தற்போது தெலுங்கானாவுக்கு சென்று, இன்று மகாராஷ்டிராவுக்குள் நுழைந்துள்ளது.

இதனிடையே, ராகுல்காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை பயணம் நடைப்பயணம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள், கருத்துக்களை வெளியிட ‘பாரத் ஜோடோ யாத்திரை’ என்ற பெயரில் தனியே டுவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கில் இருந்தும் ராகுல்காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரை தொடர்பான வீடியோக்கள் வெளியிடப்படுகிறது.

அந்த வகையில், கர்நாடகாவில் ராகுல்காந்தியின் பாதயாத்திரை பயணத்தின் போது காங்கிரஸ், பாரத் ஜோடோ யாத்திரை டுவிட்டர் பக்கங்களில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அதில், ‘கே.ஜி.எப். 2’ திரைப்பட பாடலின் இசை பயன்படுத்தப்பட்டது. அந்த பாடலின் இசைக்கான காப்புரிமையை எம்.ஆர்.டி. இசை நிறுவனம் பெற்றுள்ளது.

கேஜிஎப்–2 பாடல் இசை

இந்நிலையில், பாடலுக்கு நாங்கள் காப்புரிமை பெற்றுள்ள நிலையில் தங்களிடம் முன் அனுமதி பெறாமல் ‘கே.ஜி.எப் 2’ பட பாடலின் இசையை காங்கிரஸ் கட்சி பயன்படுத்தியதாகவும், அது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு எம்.ஆர்.டி. இசை நிறுவனம் பெங்களூரு போலீசில் புகார் அளித்தது. இந்த புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக பெங்களூரு வணிக நீதிமன்றத்தில் நேற்று விசாரணை நடைபெற்றது. அப்போது, காப்புரிமை பெற்றுள்ள நிறுவனத்திடமிருந்து அனுமதி பெறாமல் அவர்களின் பாடலின் இசையை பயன்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு, பாரத் ஜோடோ யாத்திரையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கை தற்காலிகமாக முடக்குமாறு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.

இந்த உத்தரவையடுத்து, காங்கிரஸ் மற்றும் இந்திய ஒற்றுமை பயணத்தின் அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்குகள் விரைவில் முடக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தை சட்ட ரீதியில் எதிர்கொள்வோம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *