பாண்டா, மார்ச். 29–
சங்கிலித் தொடராக 5 முறை எம்எல்ஏவாக இருந்த ‘கொலைக் குற்றவாளி’ முக்தார் அன்சாரி, சிறையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவருக்கு வயது 60.
இந்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம், மாவ் மாவட்டத்தில் உள்ள பாண்டா நகரில் நடந்தது.
ரம்ஜான் நோன்பை நிறுத்திய நிலையில் நேற்றிரவு 8.25 மணிக்கு முக்தார் அன்சாரிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. ராணி துர்காவதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்க்கப்பட்டவர், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார்.
தன் தந்தை அன்சாரிக்கு சிறைக்குள்ளே இருக்கும்போது சிறிது சிறிதாக விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம். அதனாலேயே அவர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அவரது மகன் போலீசில் புகார் கூறியுள்ளார்.
பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. கிருஷ்ணனந்த் என்பவரை கொன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் தண்டனை தரப்பட்டு, 10 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் அன்சாரி. இதேபோல போலி ஆயுத லைசென்ஸ் வழக்கில் கடந்த 13ந் தேதி ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டவர். மொத்தம் 60 வழக்குகள் அன்சாரி மீது உள்ளது.
சுதந்திரப் போராட்ட தியாகிகளில் குடும்பத்தில் பிறந்தவர் அன்சாரி. தந்தை வழி தாத்தா: முக்தார் அகமது அன்சாரி. 1927ல் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக இருந்தவர். விடுதலைக்காக போராட்டங்களில் ஈடுபட்டு பல தியாகங்களைச் செய்தவர்.
தாய்வழி தாத்தா உஸ்மான் முக்தர் அன்சாரி : இந்திய ராஸவத்தில் உயர்அதிகாரியாக பணியாற்றியவர். 1948ல் பாகிஸ்தானுடன் சண்டையில் உயிர் தியாகம் செய்தவர். மரணத்துக்குப் பிறகு மகாவீர் சக்கரம் விருது பெற்றவர்.
குடும்பமே தேசப் பற்றோடு விளங்கியபோது, அன்சாரியின் பாதை மாறிப் போனது. ‘கேங்ஸ்டர்’ – ஆயுதம் தாங்கிய வன்முறையாளனாக மாறினார். 1980ம் ஆண்டின் மத்தியில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடத் துவங்கி, குற்றம் மேல் குற்றம் இழைக்கத் துவங்கினார்.
காஜியாபூரில் 1988ல் நிலத்தகராறு ஒன்றில் ஒரு கொலையை செய்ய ஆயுதம் எடுத்தவர், அடுத்தடுத்து கபில்தேவ் சிங், அஜய் பிரகாஷ் சிங், ராம் சிங் மவுர்யா என மூவரை தீர்த்துக் கட்டினார்.
இப்படி ‘கிரிமினலாக’ வலம் வந்த நேரத்தில் அன்சாரியின் பார்வை அரசியல் பக்கம் திரும்பியது.
1996, 2002, 2007, 2012, 2017 ஆண்டுகளில் சங்கிலத் தொடராக 5 தடவை எம்.எல்.ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பகுஜன் சமாஜ் காட்சியில் இருந்தார்.
பின் அதிலிருந்து விடுவிக்கப்பட்ட பின் சகோதரர்களுடன் சேர்ந்து குலாமி ஏக்தா தள் (க்யூஈடி) என்னும் கட்சியைத் துவக்கி அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார்.
அடாவடியாக சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை ஏழை எளியவர்ளுக்கு செலவிட்டார். அதனால் அவரை ‘ராபின்ஹூட்’டாகப் பார்த்தவர்களும் உண்டு.