செய்திகள்

கொரோனா ஊரடங்கு: ஓராண்டு நிறைவு

சென்னை, மார்ச் 22–

நாட்டில் கொரோனா பரவலை தடுக்க கடந்த ஆண்டில் முதன்முதலாக ஊரடங்கை நடைமுறைப்படுத்தத் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப்போட்டது.

2019 ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் வூஹானில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று 2020 ஜனவரி மாத இறுதியில் இந்தியாவுக்குள் நுழைந்தது. கேரளத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதுதான் இந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு என்று கூறப்பட்டது. இதையடுத்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக அதிகரித்து வந்தது.

இதுகுறித்து முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி 2020 மார்ச் 19ம் தேதி (வியாழக்கிழமை) தொலைக்காட்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மார்ச் 22–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் 14 மணி நேர பொது ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதாவது அன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும் மாலை நேரத்தில் மக்கள் தங்கள் வீடுகளில் தீபமேற்றி கொரோனா வைரஸை விரட்ட ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அவ்வாறு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு ஆகிறது. அரசின் வலியுறுத்தலுக்கு ஏற்ப, கொரோனா தொற்றுக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கியிருந்த நாள் அன்று. ஊரடங்கில் அனைத்து போக்குவரத்து சேவைகளும் முடங்கின. மருத்துவமனைகள், தீயணைப்பு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் மட்டும் செயல்பாட்டில் இருந்தன. 14 மணி நேர ஊரடங்கை மக்கள் ஒற்றுமையுடன் கடைப்பிடித்தனர். அந்த நாளில் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 341 ஆக இருந்தது. பலி எண்ணிக்கை 6 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் மார்ச் 24–ந்தேதி தேதி இரவு 8 மணியளவில் மக்களிடம் 2வது முறையாக கொரோனா தொற்று குறித்து உரையாற்றிய பிரதமர் மோடி அடுத்த 21 நாள்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகக் கூறினார். அன்றிரவே (மார்ச் 24) நள்ளிரவு 12 மணி முதல் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்றார். அதேநேரத்தில் அத்தியாவசியப் பணிகளுக்கு எந்தத் தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு தங்கள் சேவையை புரிய அனுமதி வழங்கப்பட்டது.

இவ்வாறு தொடங்கிய முதல் ஊரடங்கு தற்போது வரை தளர்வுகளுடன் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த கொரோனா ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. அவர்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டது என்று சொல்லலாம்.

கடந்த செப்டம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் ஓரளவு இயல்புநிலைக்குத் திரும்பத் தொடங்கியது. பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் மீண்டும் செயல்படத் துவங்கின. நிறுவனங்கள் கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டன. மாநிலங்களுக்கு இடையே, மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து சேவை சீரடைந்தது.

இவ்வாறு கடந்த ஓரிரு மாதங்களாக மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்த அதேநேரத்தில், கடந்த சில வாரங்களாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் சில பகுதிகளில் மட்டும் மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *