செய்திகள்

கொரோனா 2 வது அலையில் இறப்பு விகிதம் இரட்டிப்பு

டெல்லி, ஜூன் 14–

கொரோனா இரண்டாவது அலையில் அனைத்து மாநிலங்களிலும் இறப்பு விகிதம் இரட்டிப்பாகி உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது.

ஏப்ரல் 1 முதல் நாட்டில் கிட்டத்தட்ட 2.1 லட்சம் கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன. இதில், 55 சதவீதம், அதாவது 1.18 லட்சத்துக்கும் அதிகமானோர், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பதிவாகியுள்ளன.

இந்த ஐந்து மாநிலங்களில் ஒவ்வொன்றிலும், கடந்த ஆறு வாரங்களில் மொத்த எண்ணிக்கையில், 60 சதவீதம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, இந்த காலகட்டத்தில் அவர்களின் இறப்பு எண்ணிக்கை 2 முதல் 2.5 மடங்கு அதிகரித்துள்ளது. இது மற்ற மாநிலங்களுக்கும் பொருந்தும். சில மாநிலங்களில், அவர்களின் இறப்பு எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 80 சதவீதம் ஏப்ரல் 1-க்குப் பிறகு பதிவாகியுள்ளது.

முந்தைய இறப்பு சேர்ப்பு

பீகாரில் இந்த எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. அங்கு ஏப்ரல் 1-க்குப் பிறகு மாநிலத்தின் இறப்பு எண்ணிக்கையில் 83 சதவீதம் பதிவாகியுள்ளது. ஆனால், இதற்கு முக்கிய காரணம், முன்னர் கணக்கிடப்படாத கிட்டத்தட்ட 4,000 மரணங்களை, சில நாட்களுக்கு முன்பு தரவு சுத்திகரிப்பு முறையில் பீகார் மாநில அரசு சேர்த்ததுதான்.

இந்த காலகட்டத்தில் நாட்டின் இறப்பு எண்ணிக்கையும் சுமார் 1.64 லட்சத்திலிருந்து இப்போது 3.73 லட்சத்துக்கு மேல் அதாவது இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. உத்தரகண்ட், அசாம், கோவா, ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில், மொத்த இறப்புகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை கடந்த ஆறு வாரங்களில் நிகழ்ந்துள்ளன.

இதன் பொருள், இந்த மாநிலங்களில் இறப்பு எண்ணிக்கை இந்த நேரத்தில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்பதுதான். மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகியவையும் இந்த வரிசையில் அடங்கும். மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்கள், கடந்த ஆறு வாரங்களில் நிகழ்ந்த இறப்புகளில் 57 சதவீதம் பதிவு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *