செய்திகள்

ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் கொரோனா நோயாளிகளுக்கு எவ்வாறு உதவுகிறது?

சென்னை, மே 5–

கொரோனா தொற்றால், அதிக பாதிப்பு ஏற்பட்டு, ஆக்சிஜன் உதவி தேவைப்படுபவர்களுக்கு, ஆக்சிஜன் செறிவூட்டிகளின் தேவை முக்கியமானதாக உள்ளது.

கொரோனா இரண்டாவது அலையால் இந்தியா மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது. முதல் அலையைவிட இரண்டாவது அலை, மிகப் பெரிய பாதிப்பையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. ஆக்சிஜன் தட்டுப்பாடு, நாட்டின் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. இந்நிலையில், ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகளை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல, பல்வேறு நாடுகளும் ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகளை இந்தியாவுக்கு அனுப்பி வருகிறது.

செறிவூட்டியின் விலைகள்

இந்நிலையில், ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகளின் விலையும் பெருமளவு உயர்ந்துள்ளது. ரூ.30 ஆயிரம் விலையில் விற்கப்பட்ட இந்த ஆக்சிஜன் செறிவூட்டிகள், தற்போதுரூ.60 ஆயிரத்துக்கு மேலாக விற்பனை செய்யப்படுகிறது என்றும், சில வேளைகளில் ரூ. 90 ஆயிரம் வரை விற்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

இத்தகைய ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகளின் தேவை, செயல்படும் தன்மை குறித்து அறிந்து கொள்வது முக்கியமானது. பொதுவாக, கோவிட்–19 எனப்படும் கொரோனா பாதிப்பு, 5 முதல் 10 சதவீதம் பேருக்கு நுரையீரலை தாக்கி, உடலுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கவிடாமல் செய்து விடுகிறது. அதனால்தான், நாடு முழுக்க ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றிய பேச்சாக இருக்கிறது.

கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, உடலில் ஆக்சிஜன், 94 என்ற அளவுக்கு கீழ் சென்றால், அத்தகைய நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செலுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது. ஆனால், நாடு முழுக்க ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், குறைந்த அளவு ஆக்சிஜன் தேவை உள்ள நோயாளிகளுக்கு, இத்தகைய ஆக்சிஜன் செறிவூட்டிகளை பயன்படுத்தலாம் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியது.

காற்றிலிருந்து ஆக்சிஜன் உற்பத்தி

அதன்படி, ஆக்சிஜன் செறிவு அளவு 88 முதல் 92 வரை உள்ளவர்களுக்கு, இந்த சாதனம் உதவும். பல்வேறு தொழில்நிறுவனங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மருத்துவ ஆக்ஸிஜன்கள் சிலிண்டர்கள் வழியாக வழங்கப்படுகின்றன. ஆனால், இந்த ஆக்சிஜன் செறிவூட்டிகள் வீட்டில் இயக்கக்கூடிய சாதனங்கள்.

நம் வீடுகளுள்ள பகுதி காற்றிலேயே 79 சதவீதம் நைட்ரஜனும் 21 சதவீதம் ஆக்சிஜனும் கலந்து உள்ளது. ஆக்சிஜன் செறிவூட்டிகள், இதனை பிரித்து நமக்கு வழங்குகிறது. அதன்படி, நிமிடத்திற்கு 5 முதல் 10 லிட்டர் ஆக்சிஜன் தேவை உள்ள நோயாளிகளுக்கு இந்த சாதனம் உதவியாக இருக்கும். ஆனால், தீவிர நோய் பாதிப்புக்குள்ளாகி, நிமிடத்திற்கு 40 முதல் 50 லிட்டர் ஆக்சிஜன் தேவைப்படுவோர்களுக்கு இந்த ஆக்சிஜன் செறிவூட்டிகள் உதவ முடியாது.

ஆனால், கோவிட் நோயாளிகள் அதிகரிப்பால், ஆக்ஸிஜன் படுக்கைகள் பற்றாக்குறை அனைத்து இடங்களிலும் உள்ளது. அதனை சரிசெய்ய, குறைந்த அளவு ஆக்சிஜன் தேவை உள்ள நோயாளிகளை வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அரசும், மருத்துவ வல்லுநர்களும் அறிவுறுத்துகிறார்கள். அத்தகையவர்களுக்கு இந்த ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகள் பெரும் உறுதுணையாக இருக்கிறது. இதில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் 90 சதவீதம் தூய்மையானதாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *