புதுடெல்லி, மார்ச்.25-–
டெல்லி ராம்லீலா மைதானத்தில் வருகிற 31-ந் தேதி இந்தியா கூட்டணியின் மெகா பொதுக்கூட்டம் நடைபெறுவதாக ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டாக அறிவித்து உள்ளன.
நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ என்ற பெயரில் கூட்டணி அமைத்து உள்ளன.
இந்த கூட்டணியில் அங்கம் வங்கிக்கும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான கெஜ்ரிவால் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். முன்னதாக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்றொரு முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் ஜனநாயகத்தை பாதுகாக்க வலியுறுத்தி இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் டெல்லியில் வருகிற 31-ந் தேதி மெகா பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் நேற்று கூட்டாக அறிவித்தன.
ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி மாநில ஒருங்கிணைப்பாளரும், மாநில அமைச்சருமான கோபால் ராய் கூறியதாவது:-–
நாட்டில் ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது. நாட்டின் நலன்கள் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும்.
இதற்காக இந்தியா கூட்டணி கட்சிகள் டெல்லி ராம்லீலா மைதானத்தில் 31-ந் தேதி மெகா பொதுக்கூட்டம் நடத்துகின்றன. இதில் கூட்டணியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
டெல்லி முதலமைச்சரின் கெஜ்ரிவாலின் கைது அரசியல் சாசனத்தை மதிக்கும் மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது கெஜ்ரிவாலை பற்றியது மட்டுமல்ல, ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் மிரட்டப்படுகின்றன.
எதிர்க்கட்சிகளை பணம் கொடுத்து விலைக்கு வாங்குகின்றனர், அல்லது அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. மூலம் மிரட்டுகின்றனர். இதற்கு அடிபணிய மறுப்பவர்கள் மீது பொய்யான வழக்குகளை போட்டு கைது செய்கின்றனர்.
மம்தா பானர்ஜி, தேஜஸ்விக்கு குறி
ஹேமந்த் சோரன், கெஜ்ரிவாலை தொடர்ந்து மம்தா பானர்ஜி, தேஜஸ்வி யாதவ் ஆகியோர் மீதும் குறி வைக்கப்பட்டு உள்ளது. இந்தியா கூட்டணியை சேர்ந்த அனைத்து தலைவர்களும் பொய் வழக்குகளில் சிக்கியுள்ளனர்.
டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். கெஜ்ரிவாலின் குடும்பம் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருக்கிறது. எங்கள் கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்துள்ளனர்.
எனவே நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க ஒட்டுமொத்த எதிர்க்கட்சி களும் ஒன்றிணைய வேண்டும்.
இவ்வாறு கோபால் ராய் கூறினார்.
இதைப்போல டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு சமமான களம் வழங்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம், மாநில முதலமைச்சர் கைது என எதிர்க்கட்சிகளை முடக்குகின்றனர்.
டெல்லியில் 31-ந் தேதி நடைபெறும் மெகா பொதுக்கூட்டம் வெறும் ஒரு அரசியல் கூட்டம் மட்டுமல்ல, மாறாக நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கவும், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுக்கு ஏதிராக குரலை எழுப்பவும் விடுக்கும் அழைப்பும் ஆகும்.
ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. எங்கள் தலைவர் ராகுல் காந்தி ஜனநாயகத்தை பாதுகாக்க போராடுகிறார். நாங்கள் முழு பலத்துடன் எங்களின் இந்தியா கூட்டணியுடன் நிற்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.