புதுடெல்லி, மார்ச் 30–
கெஜ்ரிவாலை தொடர்ந்து டெல்லி உள்துறை அமைச்சருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்ட நிலையில், இதே வழக்கில் டெல்லி உள்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட்டுக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இதனையடுத்து அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
டெல்லி அரசின் 2021- 2022 ம் ஆண்டின் மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை, சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். எம்.பி., சஞ்சய் சிங்கும் கைதானார். சில நாட்களுக்கு முன்னர் முதல்வர் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் நடந்த பண மோசடி தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு, டெல்லி உள்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட்டுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். இதனையடுத்து கைலாஷ் கெலாட் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்.