செய்திகள்

கெஜ்ரிவாலின் செயலாளர், ஆம் ஆத்மி கட்சி பிரமுகர்கள் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை

Makkal Kural Official

புதுடெல்லி, பிப். 6–

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர், ஆம் ஆத்மி கட்சி பிரமுகர்கள் சிலரின் வீடுகளில் பணமோசடி தொடர்பாக அமலாக்கத்துறையினர் இன்று சோதனை நடத்தினர். டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்திய பகுதிகளின் 12 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு புதிய மதுபான கொள்கை நிறைவேற்றியதில் முறைகேடு நடந்திருப்பத எழுந்த புகாரில் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் 5 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகாமல் காலம் தாழ்த்தி வருகிறார்.

இந்த நிலையில் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலின் தனிச்செயலாளர் பிபவ் குமார் மற்றும் டெல்லி ஜல் போர்டு (டிஜேபி) முன்னாள் உறுப்பினர் ஷலப் குமார் ஆகியோரின் வீடுகள், மேலும் சில ஆம் ஆத்மி கட்சியினர் வீடுகளிலும் சோதனை நடைபெறுகிறது.

இது தவிர ஆம் ஆத்மி கட்சியின் பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான என்.டி. குப்தாவின் வீடு, அலுவலகங்கள் உட்பட 12 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்துகின்றனர். நீர்வளத்திட்டத்தில் கான்ட்ராக்ட் முறைகேடு நடந்திருப்பதாவும் இதில் சட்ட விரோத பணபரிமாற்றம் நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் இந்த ரெய்டு நடப்பதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக டெல்லி அமைச்சர் அதிஷீ செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அமைப்புகள் மூலம் எங்கள் கட்சியை அடக்க பாரதீய ஜனதா விரும்புகிறது. ஆனால் நாங்கள் பயப்பட மாட்டோம் என்பதை அவர்களிடம் சொல்ல விரும்புகிறேன். கடந்த 2 ஆண்டுகளாக, ஆம்ஆத்மி தலைவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுகிறது. இப்போதும் ஆம் ஆத்மி கட்சியினர் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

மதுபான ஊழல் என்ற பெயரில் யாரோ ஒருவரது வீடு ரெய்டு செய்யப்படுகிறது, ஒருவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான ரெய்டுகளுக்குப் பிறகும், அமலாக்கத்துறையால் ஒரு ரூபாயைக் கூட மீட்க முடியவில்லை. அவர்களால் எந்த உறுதியான ஆதாரத்தையும் கண்டுபிடிக்கவில்லை,

ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக நீதிமன்றம் கூறிய நிலையிலும் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னரும் அமலாக்கத்துறை ஒரு உறுதியான ஆதாரத்தைக் கூட கண்டுபிடிக்கவில்லை. அரசுதரப்பு சாட்சியிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை அளிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் வழங்கிய அறிக்கை மாறியிருந்தது. வீடியோ ஆதாரங்கள் வழங்ப்பட்டது, அதில் ஒலி நீக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

டெல்லி ஜல் போர்டில் வழங்கப்பட்ட டெண்டர் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) மற்றும் டெல்லி அரசின் ஊழல் தடுப்பு பிரிவு (ஏபிசி) ஆகியவை தொடர்ந்த 2 வழக்குகளின் அடிப்படையில், டெல்லி ஜல் போர்டு டெண்டர் செயல்பாடுகளில் பணமோசடி முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *