செய்திகள் நாடும் நடப்பும்

கூவம், அடையாறு ஆறுகளின் நீர் குடிநீராக மாறும் நாள் வருமா?


ஆர்.முத்துக்குமார்


‘நீரின்றி அமையாது உலகு’ என்றார் திருவள்ளுவர். அதில் அவர் மேலும் சுட்டிக்காட்டுவது மழையின்றி போனால் ஒழுக்கமும் நிலை பெறாது என்கிறார்!

சென்னை போன்ற பெருநகரம் உருவாக நீர்நிலைகள் பலவற்றை கட்டுமானங்களுக்காக மாற்றிட தாரை வார்த்தோம். பாக்கம் என்றால் நீர்நிலைகள் இருக்கும் பகுதி என்பதாகும்! சென்னையில் தான் எத்தனை பாக்கங்கள். சங்க காலத்திலேயே சுட்டிக் காட்டப்பட்டு இருப்பதில் பட்டினப்பாக்கம், மந்தைவெளிப்பாக்கம் போல் பல உண்டு. ஆங்கிலேயர்கள் ஆட்சியை நடத்திய போது அவர்களால் மாற்றப்பட்ட தே போர்சோர் எஸ்டேட், மந்தைவெளி!

ஆனாலும் இன்று சென்னை நகரின் முக்கிய பகுதிகளான அரும்பாக்கம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், பெரும்பாக்கம், மீனம்பாக்கம்… என ஒரு பட்டியல் இருக்கிறது அல்லவா? ஆனால் இங்கெல்லாம் கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் நீர்நிலைகள் இருந்துள்ளது என்பது தான் உண்மை. அதனால் தான் பாக்கம் என்பது அதன் காரணப் பெயராக இருக்கிறது.

ஆனால் 1940–களுக்குப் பிறகு பல்வேறு காரணங்களால் சென்னை வளர ஆரம்பித்தவுடன் எந்த நகர அபிவிருத்தி திட்டங்களுமின்றி திடீர் என மக்கள் இப்பகுதியில் வந்து குவிய ஆரம்பித்த கட்டத்தில் பல பணிகள் உருவாகின. தொழில் மையங்கள் தோன்றின. ஆட்சியாளர்களின் தலைமை செயலகமும் படு மும்முரமாக செயல்பட துவங்கின.

இதற்கெல்லாம் தொன்று தொட்டு இருக்கும் ஓர் ஈர்ப்பு சென்னை துறைமுகமாகும்! முன்பு கிழக்கிந்திய கம்பெனி தரையிறங்கியதும் இந்த துறைமுகப் பகுதியில் தான். பிறகு பர்மா, இலங்கை, மலேசியா முதல் இங்கிலாந்து வரை பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதும் ஆங்கிலேயர்கள் ஆண்ட காமன்வெல்த் நாடுகளில் இருந்து இங்கு இறக்குமதி துவங்கிய போதும் அதை கையாள கட்டுமானங்களும் உருவாகி இருக்க வேண்டும்.

மொத்தத்தில் ஏறக்குறைய 150 ஆண்டுகளில் ‘கிடுகிடு’ என உருவாகிய மிக பரபரப்பாக இயங்கும் வல்லமை பெற்ற நகரங்களில் சென்னையும் ஒன்று. இந்த அதிவேக வளர்ச்சியில் தஞ்சம் பெற வந்த அனைவரும் தங்கி வாழ உருவான குடியிருப்பு கட்டுமானங்கள் மிக அவசியம். அதற்குத் தேவையான வாழ்விடத்துக்காக நீர்நிலைகள் அபகரிக்கப்பட்டு விட்டது!

திருவள்ளுவர் சொன்னது போல் நீர் இல்லாமல் வாழமுடியாது. அந்த நீரை தரும் மழையின்றி போனால் மக்கள் ஒழுக்கமும் கெட்டுப் போகும்!

இதை இனி வரும் காலத்தில் எப்படி சீர் செய்து சென்னைக்குப் புது வரலாறு படைப்பது? குடியிருப்போரை வெளியேற்றி நீர்நிலைகளை மீட்கவா முடியும்? ஆனால் இருக்கும் நீர்நிலைகளை விசேஷ கவனம் கொண்டு பாதுகாத்து அதன் வளத்தை மேன்மைப்படுத்தலாம் அல்லவா?

சென்னையின் மேலே விமானத்தில் பயணிப்போர் வெளியே எட்டிப் பார்க்கும் போது ஆச்சரியத்துடன் பார்க்க வைப்பது கூவம், அடையாறு, கொசத்தலை ஆறுகள் ஆகும்! அதைச் சுற்றி சில பசுமை காட்சிகள் இன்றும் தென்படுகிறது. குறிப்பாக அடையாற்றின் கரைகளில் இருக்கும் ராஜா அண்ணாமலைபுரம், கோட்டூர்புரம், நந்தனம், கிண்டியைத் தாண்டி தரையிறங்கும் மீனம்வாக்கம் வரை பசுமைக் காடுகள் பரந்து விரிந்திருக்கிறது.

இந்தப் பகுதியில் ஓடிக்கொண்டிருந்த நீரோட்டப் பாதையான பக்கிங்காம் கால்வாயில் பல நூறு கிலோ மீட்டருக்கு அப்பால், ஆந்திராவில் இருந்து பல்வேறு சரக்குகளையும் பயணிகளையும் அழைத்து வந்துள்ள படகு போக்குவரத்து 1940கள் வரை மிக பிரபலமானதாக இருந்திருக்கிறது.

ஆனால் இன்றோ அதன் அடிச்சுவடியை யோசித்துப் பார்க்கக்கூட இத்தலைமுறைக்கு வழியின்றி போய்விட்டது.

சில வாரங்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சியின் ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு அடையாறு, கூவம் பகுதிகளில் கரையோர குடியிருப்புகளில் இருந்து வரும் குப்பையை கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளார்.

முதல்கட்டமாக குப்பை கொட்டுவதைத் தடுக்க 150–-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்புக் கேமராக்களை நிறுவத் திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகரப் பகுதியில் கூவம், அடையாறு, கொசஸ்தலை ஆறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவை உள்ளன. மழைக்காலங்களில் தண்ணீரை வடியச் செய்வதில் இந்த நீர்வழித் தடங்களின் பங்கு அதிகம். இந்நிலையில் இந்த ஆறுகள் ஆக்கிரமிப்புகளில் சிக்கி, குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகளைக் கொட்டுமிடமாக மாறியுள்ளன. ஆறுகளின் அகலமும் குறைந்துவிட்டது.

எனவே ஆறுகளைப் பாதுகாக்க `சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை’ உருவாக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு, சுற்றுச்சூழல் மீட்டெடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக, கூவம், அடையாறு ஆகியவற்றின் கரையோரப் பகுதிகளை ஆக்கிரமித்திருந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அகற்றப்பட்டு அவற்றில் வசித்து வந்த குடும்பங்களுக்கு, மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

அடுத்தகட்டமாக அந்த ஆறுகளின் கரைகள் பலப்படுத்தப்பட்டு அப்பகுதிகளில் கொட்டப்பட்டிருந்த குப்பை, கட்டுமானக் கழிவுகள் அகற்றப்பட்டன. மேலும் தொடர்ந்து குப்பை கொட்டாத வகையில் சுவர்கள் எழுப்பப்பட்டு, கம்பி வேலிகள் அமைக்கப்பட்டன.

இது நிச்சயம் காலம் கடந்து வந்தாலும் நல்ல துவக்கமாகும். மேலும் இந்த நதிகளின் ஓட்டத்தின் கரைகளில் பரிச்சார்த்தமாக நாணல் புற்களை அதன் வேறு பெயர்கள் தர்ப்பை எனும் கோரைப் புல்லை வளர்க்க செய்தால் ஏரிக்குள் வரும் பல்வேறு காகித, பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் ‘பில்டர்’ ஆகி விடும்!

இந்தப் புல் வளரத் திட்டமிட்டு பின்னர் கண்காணிப்பு கேமிராக்களால் காணும்போது உபயோகமாக இருந்தால் அதை முழுவீச்சில் செயல்திட்டமாக அறிவித்து செயல்படுத்த திட்டமிடலாம்.

முதலில் அரசு குப்பை வைப்பு இப்பகுதியில் வைக்க முழுத் தடை உறுதி செய்யப்பட வேண்டும். குறிப்பாக அரசு சார் அலுவலகங்கள், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் எந்த குப்பையும் இன்னும் தென்படும் நீரோட்டங்களில் கலந்து விடக்கூடாது.

கூவம், அடையாறு ஆறுகளின் நீர் குடிநீராக மாறும் நாள் வருமா?

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது இருக்கும் நீரோட்டப் பகுதிகளில் உள்ள நீர் அடுத்த 30 ஆண்டுகளில் நகரவாசிகள் பயன்படுத்தி மகிழும் நீராக்க செயல்திட்டம் அமைத்து செயல்பட களப்பணிகளை முடுக்கி விடவேண்டும்.

அன்றே ஔவையார் சொன்ன தொடர் தான், ‘வரப்புயர நீர் உயரும்… நீர் உயர பயிர் உயரும் … பயிர் உயர கதிர் உயரும்; கதிர் உயர்ந்தால் குடி உயரும்; குடி உயர்ந்தால் ….கோல் உயரும்; கோல் உயர கோன் உயர்வான்! என்பது.

அப்படி ஒரு காலம் வரும். அதற்காக காத்திருப்போம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *